காத்தான்குடி பாலமுனையில் சிறுவனுக்கு சூடு வைத்த சம்பவம்: இரண்டு பேருக்கு விளக்க மறியல்

0
157

(விசேட நிருபர் )

released_open_jailமட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனைப் பிரதேசத்தில் 10 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் அச்சிறுவனின் உறவு முறையான மூன்று உறவினர்கள் கைது செய்யப்பட்டதுடன், அதில் இரண்டு உறவினர்கள் எதிர் வரும் 8.7.2016ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

23.6.2016 வியாழக்கிழமையன்று இச்சிறுவனுக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, இச்சிறுவனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டு குறித்த சிறுவனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அங்கு சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, கரண்டியை நெருப்பில் காய்ச்சி சூடு வைத்தமை தெரியவந்துள்ளது. இச்சிறுவனின் இடுப்பு மற்றும் பின்புறம் பகுதிகளில் நெருப்புச் சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி சிறுவனுக்கு கரண்டியை நெருப்பில் காய்ச்சி சூடு வைத்த அச்சிறுவனின் உறவு முறையான 21 வயதுடைய ஆண் உறவினர் ஒருவரும், கரண்டியை நெருப்பில் காய்ச்சிக் கொடுத்த 18வயதான பெண் உறவினர் ஒருவரும், சூடு வைக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு 17 வயதுடைய பெண் உறவினர் ஒருவமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இச் சந்தேக நபர்கள் 25.6.2016 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது சிறுவனுக்கு சூடு வைத்த அச்சிறுவனின் உறவு முறையான 21 வயதுடைய ஆண் உறவினர் ஒருவரும், கரண்டியை நெருப்பில் காய்ச்சிக் கொடுத்த பெண் உறவினருமான இரண்டு பேரையும் எதிர் வரும் 8.7.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

சூடு வைக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் உறவினர் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சிறுவனின் பெற்றோர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வருவதால் சிறுவனின் உறவு முறையான மேற்படி சந்தேக நபரின் வீட்டிலேயே இச்சிறுவன் இருந்துவந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இச் சிறுவன் இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY