ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் ராஜ்புத் நியமனம்

0
187

201606251747447240_Former-India-batsman-Lalchand-Rajput-named-Afghanistan-coach_SECVPFஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம்-உல்-ஹக். இவரது பயிற்சிக் காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. இன்சமாம் பதவிக் காலத்தில் ஆப்பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. அதேபோல் டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதிர்ச்சி தோல்வியடையச் செய்தது.

எனவே, இன்சமாம் போல் சிறந்த பயிற்சியாளரை நியமிக்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. அதன்படி இந்தியாவின் லால்சந்த் ராஜ்புத், பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொகமது யூசுப், தென்ஆப்பிரிக்கா வீரர் கிப்ஸ், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோரி கோலிமோர் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்தது. இதில் மற்ற மூன்று பேரையும் பின்னுக்குத் தள்ளி ராஜ்புத் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்லும்போது அணியின் மானேஜராக இருந்தவர் ராஜ்புத். 17 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்குப்பிறகு கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திலும் வேலை செய்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத்தில் கௌரவ செயலாளராகவும் வேலை பார்த்துள்ளார்.

இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ராஜ்புத், 110 முதல் தர போட்டிகளில் விளையாடி 7988 ரன்கள் குவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காகவும், ஐ.பி.எல். தொடரிலும் பயிற்சியாளராக பணி புரிந்துள்ளார்.

ராஜ்புத்தை இரண்டு வருடத்திற்கு ஆப்கானிஸ்தான் ஒப்பந்தம் செய்யப்படலாம். வரும் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடர் முடிந்த பின்னர்தான் அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீடிக்குமா? என்பது தெரியவரும்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த நான்கு பேரை விட இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸை நியமிக்க விரும்பி அவரிடம் பேசியது. ஆனால், அந்த முயற்சி நிறைவேறவில்லை.

பயிற்சியாளர் பதவிக்கு ராஜ்புத் பெயரை பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY