பிரிட்டன் பொது வாக்கெடுப்பு முடிவு: உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து

0
190

201606251034494195_EU-referendum-result-opinion-leaders-of-world-countries_SECVPFஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. அது வருமாறு:-

ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் மார்ட்டின் சுல்ஸ், “நாங்கள் அதிர்ச்சி அடைந்துவிடவில்லை. இது எதிர்பார்த்ததுதான். நாங்கள் தயாராகத்தான் இருந்தோம். சங்கிலித்தொடர் போன்ற விளைவுகளை தவிர்ப்பதற்கு என்ன செய்வது என்பது குறித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேசுவேன்” என கூறினார்.

மேலும் பேசும்போது, “உலகின் மிகப்பெரிய ஒற்றை சந்தை, ஐரோப்பிய யூனியன். அந்த சந்தையுடனான உறவை இங்கிலாந்து முறித்துக்கொண்டுள்ளது” என்றார்.

“எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிலாந்தும், ஐரோப்பிய யூனியனும் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். இங்கிலாந்துடன் உறவை வலுப்படுத்த சீனா இன்னும் விரும்புகிறது. ஐரோப்பிய யூனியனின் அதிக ஒற்றுமை என்ற திட்டத்துக்கு விழுந்த மிகப்பெரிய அடி, இங்கிலாந்து வாக்கெடுப்பு முடிவு” என சீனா கருத்து தெரிவித்துள்ளது.

ஜெர்மனி வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மர் கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற இங்கிலாந்து மக்களின் வாக்கெடுப்பு முடிவு, ஐரோப்பாவுக்கு ஒரு சோகமான நாள். இங்கிலாந்துக்கும் சோகமான நாள்” என கருத்து தெரிவித்தார்.

பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லாரன்ஸ் பாபியஸ், “இங்கிலாந்துக்காக வருத்தப்படுகிறேன். ஐரோப்பிய யூனியன் தொடரும். அதே நேரத்தில் ஐரோப்ப யூனியன் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும். இது அவசரமானது” என கூறினார்.

ரஷிய நிதி மந்திரி ஆன்டன் சிலுவானோவ் கருத்து தெரிவிக்கையில், “இங்கிலாந்து பொதுவாக்கெடுப்பு முடிவால், ரஷியாவின் பொருளாதாரத்தில் ஏற்படுகிற எதிர்மறை விளைவுகள் கட்டுக்குள் தான் இருக்கும்” என்றார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தொழில் அதிபர்கள் உரிமை ஆலோசகர் போரிஸ் டிட்டோவ், “இது ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்துக்கு விடுதலை அல்ல. அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு விடுதலை” என கருத்து தெரிவித்தார்.

டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக்கே ராஸ்முஸ்சேன், “இங்கிலாந்து நாட்டின் பெரும்பான்மை மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. ஐரோப்பாவுக்கும், டென்மார்க்குக்கும் இது ஒரு சோகமான முடிவு. ஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்து தொடர்ந்து நல்லுறவை விரும்பும் என நான் நம்புகிறேன்” என கூறினார்.

நார்வே பிரதமர் எர்ணா சோல்பெர்க், “இதனால் ஐரோப்பிய யூனியன் குறுகி விடும் என கருதுகிறேன். அமைப்பு ரீதியிலான பிரச்சினைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தீர்வு காண வேண்டும்” என கூறினார்.

ஸ்பெயின் பொறுப்பு பிரதமர் மரியானோ ரஜோய், “கடைசியில் நாம் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருகிறோம். மக்களின் தேவைகளை நோக்கி ஐரோப்பிய யூனியன் கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சி, வேலைவாய்ப்பில் அக்கறை காட்ட வேண்டும்” என கூறினார்.

போலந்து வெளியுறவு மந்திரி விட்டோல்டு, “இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் வாழ்கிற போலந்து மக்களின் வாழ்வில் பெரிய தாக்கம் ஏற்பட்டு விடாது. ஐரோப்பிய யூனியனுடன் இங்கிலாந்து இனி தனது புதிய உறவு குறித்து பேசுவதற்கு 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும்” என கூறினார்.

பின்லாந்து வெளியுறவு மந்திரி டிமோ சோய்னி கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பிய யூனியனில் தொடருவதா, வேண்டாமா என்பது தொடர்பான இங்கிலாந்தின் பொதுவாக்கெடுப்பை மதிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான பேச்சுகளில் பழிவாங்கும் போக்கு கூடாது” என கூறினார்.

தென் கொரிய நிதித்துறை துணை மந்திரி சோய் சாங் மாக், “பண்ட மாற்றுக்காக புதிய நாணயம் வெளியிட அரசு பரிசீலிக்கிற வாய்ப்பு உள்ளது” என கூறினார்.

செக் நாட்டின் பிரதமர் போகுசிலேவ் சோபாட்கா, “ஐரோப்பிய யூனியன் விரைவாக மாற வேண்டும். தனது மக்களின் ஆதரவை வலுப்படுத்துவதற்கு இது அவசியம். ஐரோப்பிய யூனியனுக்கு எதிரான இங்கிலாந்தின் ஓட்டால், ஐரோப்பிய யூனியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் ஆகிவிடாது” என கூறினார்.

LEAVE A REPLY