ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக அதிக மக்கள் விருப்பம்: வாக்கெடுப்பில் முடிவு

0
226

201606240940522031_EU-referendum-Brexit-Bremain_SECVPFஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993–ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள். பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிறநாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த நாட்டில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பதை அறிய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டன் முழுவதும் எழுந்தது. பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சி தரப்பிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக டெலிவிஷன்களின் விவாதங்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் அரசு முடிவு செய்தது.

ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதை அதன் நட்பு நாடுகள் விரும்பவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நேட்டா, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பிரிட்டனை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 382 மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், (இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 9 மணி நிலவரப்படி, பதிவான வாக்குகளில் எண்ணப்பட்ட 72 சதவீதம் வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என 48.5 சதவீதம் (1,08,42,366) மக்களும், விலக வேண்டும் என 51.5 சதவீதம் (1,14,96,842) மக்களும் வாக்களித்துள்ளனர். நீடிப்பதற்கும், விலகுவதற்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 3 சதவீதமாக உள்ளதால், மீதியுள்ள 28 சதவீத வாக்கு எண்ணிக்கைதான் பிரிட்டனின் எதிர்கால தலையெழுத்தை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிப்பதையே பிரிட்டன் நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் விரும்புகிறார். ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். ஆனால் வாக்கெடுப்பின் முடிவு அவரது விருப்பத்துக்கு மாறாக அமைந்தால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல் பிரிட்டனில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், ஐரோப்பிய கூட்டமைப்பில் தங்கள் நாடு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றன. கூட்டமைப்பில் இருந்து விலகினால் ஐரோப்பிய நாடுகளுடனான தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும், வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும் என்றும் அந்த நிறுவனங்கள் அச்சம் தெரிவித்து உள்ளன.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தால் அந்த நாட்டின் பணமான பவுண்ட் மதிப்பு சரியும் வாய்ப்பு உள்ளது. இந்த சரிவானது இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பணத்தின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY