விலகுமா பிரிட்டன்? இன்று வாக்கடுப்பு

0
32

(எம்.ஐ .முபாறக்)

imageஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமா அல்லது தொடர்ந்து அதனுடன் இணைந்து இருக்க வேண்டுமா என்று பிரிட்டிஷ் மக்கள் இன்று தீர்ப்பளிக்கவுள்ளனர்.அது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு அங்கு இடம்பெறவுள்ளது.

மேற்படி இரண்டு தலைப்புகளை முன்வைத்து கடந்த நான்கு மாதங்களாக அங்கு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது பிரசாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகினால் அது பொருளாதாரரீதியில் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்றும் பிரிட்டனில் கணிசமான அளவு வேலை வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றும் பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உடையவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, பிரிட்டன் அதிலிருந்து விலகினால் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என பிரிட்டன் விலக வேண்டும் என்று கூறுபவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் எந்தக் கருத்தை ஆதரிக்கிறார்கள் என்பது இன்று தெரிய வரும். பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று கடுமையாகப் பிரசாரம் செய்து வந்த பிரிட்டிஷ் தொழில் கட்சியின் எம்பி ஜோ கொக்ஸ் உயிரிழந்து ஓரிரு நாட்களில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடுகளுக்கிடையில் காணப்படும் வளங்களைப் பகிர்ந்து வர்த்தகத்திலும் ஏனைய விடயங்களிலும் அபிவிருத்தியை அடையும் நோக்கில் 1993 ஆம் நவம்பர் மாதம் முதலாம் திகதி உருவாக்கப்பட்டதுதான் ஐரோப்பிய ஒன்றியம் என்ற இந்த அமைப்பு. பொருளாதார பலத்தைக் கொண்ட ஐரோப்பிய வலயத்துக்குள் வருகின்ற 28 நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.

இந்த நாடுகளின் மக்களால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுகின்ற நாடாளுமன்ற உ ருப்பினர்களின் ஊடாக இந்த ஒன்றியம் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த நாடுகளுக்கு பொதுவான சட்டங்களும் உள்ளன. குறிப்பாக,நாணயம், வீசா முறைமை போன்ற விடயங்கள் பொதுவானவையாக இருக்கின்றன.

இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளுள் பிரிட்டனும் ஒன்றாகும். ஒன்றியத்தின் பொதுவான விதிகள் பலவற்றுக்கு உடன்பட மறுக்கும் ஒரேயொரு நாடு என்றே பிரிட்டனைச் சொல்ல வேண்டும். ஒன்றியத்துக்குள் தான் தனித்துச் சிறப்புடன் செயற்பட வேண்டும் என்று இந்த நாடு விரும்புவதே அதற்குக் காரணம்.

அந்த வகையில், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பொதுவான நாணயம் மற்றும் பொதுவான வீசா முறைமை போன்றவற்றை பிரிட்டன் பின்பற்றுவதில்லை. சிலவிடயங்களைக் கவனத்தில் கொண்டு உறுப்பு நாடுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருந்து கொண்டு அந்த நாட்டை மிகவும் பலமிக்க நாடாக மாற்றுவதற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரோன் முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்காவிட்டால் தாம் அதிலிருந்து விலகிவிடுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டி வந்தார்.

பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா அல்லது வெளியேறி விடுவதா என்று தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை கமரோன் இப்போது அந்நாட்டு மக்களின் கைகளில் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் சர்வஜன வாக்கெடுப்பே இன்று இடம்பெறவுள்ளது.

ஒருவேளை, மக்களின் தீர்ப்பின்படி, பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் அந்த நாடு அடையப் போகும் நன்மை, தீமைகள் பற்றி அரசியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து அறிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரிட்டனின் உறவு மீள்பரிசீலனை செய்யப்படும் என்பது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டேவிட் கெமரோன் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றாகும்.

தேர்தலில் அவர் வெற்றி பெற்றதன் பின் அந்த வாக்குறுதிகளுக்கு அமைவாக செயற்படத் தொடங்கினார். பிரிட்டனுக்குச் சாதகமான பல கொள்கைகளை வகுத்து அதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பேசத் தொடங்கினார்.

இது தொடர்பில் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் இரு நாள் உச்சி மாநாடு இடம்பெற்றது. உச்சி மாநாடு முடிந்து 20 ஆம் திகதி பிரிட்டன் பிரதமர் ஏனைய உறுப்பு நாடுகளான 27 நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொர்ந்தும் இணைந்திருப்பதற்கான நிபந்தனைகளை அங்கு அவர் சமர்ப்பித்தார். அவை அங்கு ஆராயப்பட்டு பல நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் குறைந்தது நான்கு வருடங்களுக்கு பிரிட்டனில் தொழில் வாய்ப்புப் பெறமுடியாது என்றும் அந்த நாடுகளின் பிரஜைகளின் பிள்ளைகள் எவ்வளவு காலம் பிரிட்டனில் வாழ்ந்திருந்தாலும் கூட தொழில் வழங்கப்படமாட்டது என்றும் அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உட்பட இன்னும் பல முக்கிய நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவர் எதிர்பார்த்த சலுகை கிடைத்துள்ளபோதிலும், அந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்று பிரிட்டன் மக்களே தீர்மானிக்கும் அதிகாரத்தை கெமெரோன் மக்களிடம் கொடுத்துள்ளார். அந்தத் தீர்மானத்தை அறிவதற்காகவே இன்று சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

ஒருவேளை, பிரிட்டன் ஒன்றியத்தில் விலக வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தால் அதனால் அந்த நாடு அடையப் போகும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, அந்நாடு விலகினால், 34 லட்சம் பேர் தொழில்களை இழக்கும் நிலை ஏற்படலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி 6.3 வீதத்தில் இருந்து 9.5 வீதம் வரை உயரும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளான 27 நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் 40000 கோடி பவுன்ஸ் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்படையும். அந்நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி வரும். அவ்வாறு செய்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மாத்திரம் இருக்கின்ற விசேட சலுகைகள் பாதிக்கப்படும். பிரிட்டனில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்கள் வீழ்ச்சியைச் சந்திக்கும். கார் ஏற்றுமதி வர்த்தகம் முற்றாகப் பாதிப்படையும்.

இவ்வாறு பல பாதிப்புகள் பொருளாதாரரீதியில் பிரிட்டனுக்கு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், பிரிட்டன் விலகினால்நன்மைகள் என ஓரிரு விடயங்கள்தான் ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பு பிரிட்டனின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வருதல், ஐரோப்பிய ஒன்றிய கைது உத்தரவில் இருந்து தப்புதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அங்கத்துவப் பணமாக வருடா வருடம் வழங்கப்படும் கோடிக்கணக்கான நிதியைத் தக்க வைத்தல் போன்ற சொற்ப நன்மைகளே கிடைக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அனைத்தும் பிரிட்டன் தம்முடன் இணைந்திருக்க வேண்டும் என்றே விரும்புகின்றன. இது அந்த நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் என அந்நாடுகள் தெரிவிக்கின்றன. இருந்தும், இது தொடர்பிலான இறுதி முடிவை பிரிட்டன் மக்களே இன்று எடுப்பர்.

LEAVE A REPLY