தகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றில்!

0
143

56f09a9ceca83587c8711e48f0da876d_Lநாட்டின் நீண்ட கால எதிர்பார்ப்பாகவிருந்த தகவல் அறியும் சட்டமூலம் இன்று(23) பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்படவுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலம் ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் ஊடகத்துறை பாராளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் முதலாவது வாசிப்புக்காக கடந்த மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வகையில் அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கருத்துப்படி இத் தகவல் அறியும் சட்டமூலம் நல்லாட்சிக்கு மிகவும் அவசியமானதொன்றாகும். இதன் மூலம் நல்லாட்சியினதும், நாட்டினது செயற்பாடுகளையும் மேலும் மேம்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தகவலைப் பெற இருக்கும் உரிமைக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினை தாபிக்கவும் தகவலை பெறுவதற்கான நடவடிக்கைகளை வழங்கவும் அதனுடன் தொடர்புள்ள விடயங்களை மேற்கொள்ளவும் இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்படவுள்ள இச்சட்டமூலத்தின் மூலம், பொது நிர்வாக நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். நல்லாட்சிக்கு இந்த சட்டம் மிக அவசியமான ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், பிரஜை ஒருவருக்கு ஏதும் நிறுவனத்தின் உடமை அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள தகவலைப் பெற உரிமை வழங்கப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், அரசின் பாதுகாப்பு மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு, தேசிய நலன் தொடர்பான தகவல்கள், நாட்டின் சர்வதேச உறவுகளுடன் தொடர்புள்ள தகவல்கள், வரி விதிப்புகள், ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர்வதை தடுக்கும் தகவல்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்கள், பரீட்சை திணைக்கள அல்லது, உயர்கல்வி நிறுவன பரீட்சைகளுக்கு இடையூறான தகவல்கள் என்பன வழங்குவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் அனைத்து அரசாங்க ஊழியர்களும் அவர்களது செயற்பாடுகள் குறித்து பயிற்றுவிக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும்தெ ரிவித்தார்.

LEAVE A REPLY