கடைசி ஆட்டத்தில் த்ரில் வெற்றி:டி20 தொடரை வென்றது இந்தியா

0
141

IndChamஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்தியாவின் இன்னிங்ûஸ கே.எல்.ராகுல்-மன்தீப் சிங் ஜோடி தொடங்கியது. சதாரா வீசிய முதல் ஓவரை மெய்டனாக்கிய ராகுல், அதற்குப் பதிலடியாக அவர் வீசிய 3-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாசினார்.

ஆனால் அடுத்த ஓவரில் மன்தீப் சிங் 4 ரன்களில் நடையைக் கட்டினார். ராகுல் 20 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்த நிலையில், மட்ஸிவா பந்துவீச்சில் போல்டு ஆனார். பின்னர் வந்த மணீஷ் பாண்டே முதல் பந்திலேயே ரன் அவுட்டானார்.

இதையடுத்து அம்பட்டி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார் கேதார் ஜாதவ். நிதனமாக ஆடிய ராயுடு 26 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் தோனி 9 ரன்களில் நடையைக் கட்டினார்.

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் அசத்தலாக ஆடிய கேதார் ஜாதவ் 38 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் 42 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் அக்ஷர் படேல் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டிரிப்பானோ 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஜிம்பாப்வே தோல்வி: பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியில் சிபாபா 5, மஸகட்ஸா 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு சிபான்டா 23 பந்துகளில் 28, பீட்டர் மூர் 21 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த மால்கம் வாலரை 10 ரன்களில் வீழ்த்தினார் குல்கர்னி. இதனால் ஜிம்பாப்வேக்கு சிக்கல் ஏற்பட்டது.

கடைசிக் கட்ட ஓவர்களை பூம்ரா, படேல் ஆகியோர் சிறப்பாக வீச, சிகும்பரா, மருமா ஆகியோரால் வேகமாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 21 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸ்ரன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மருமா சிக்ஸரை விளாசினார். அடுத்ததாக இரு வைடு மற்றும் ஒரு நோ-பாலை வீசினார் ஸ்ரன். இதனால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. கடைசி இரு பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது.

5-ஆவது பந்தில் பவுண்டரியை அடித்த சிகும்பரா, கடைசிப் பந்தில் சாஹலிடம் கேட்ச் ஆனார். இதனால் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தியத் தரப்பில் பரிந்தர் ஸ்ரன், குல்கர்னி ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். கேதார் ஜாதவ் ஆட்டநாயகனாகவும், பரிந்தர் ஸ்ரன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சுருக்கமான ஸ்கோர்

இந்தியா-138/6

கேதார் ஜாதவ் 58 (42)

கே.எல்.ராகுல் 22 (20)

டிரிப்பானோ 3வி/20

ஜிம்பாப்வே-135/6

சிபான்டா 28 (23)

பீட்டர் மூர் 26 (21)

குல்கர்னி 2வி/23

பரிந்தர் ஸ்ரன் 2வி/31

LEAVE A REPLY