அரசாங்கத்தின் போக்கு கவலையளிக்கிறது; நல்லாட்சிக்கான உழைப்பில் நாம் ஓய்வடைய முடியாது: அப்துர் ரஹ்மான்

0
148

Abdur Rahman NFGG“நல்லாட்சிக்கு அச்சுறுத்தலாக உருவாகி வரும் நிலைமைகளையும் , அவற்றை அரசாங்கம் கையாளும் விதத்தினையும் பார்க்கின்ற போது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. நல்லாட்சிக்கான உழைப்பில் யாரும் ஓய்வடைந்து விடாமல் , இன்னும் வேகத்தோடு செயற்பட வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருதனையே இது உணர்த்துகிறது. இந்த உழைப்பானது இது நமது தேசியக் கடமையுமாகும் “என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) யின் தவிசாளர் பொறியாலாளர் அப்பதுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 19.06.2016 அன்று மூதூரில் நடை பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். NFGG யின் திருகோணமலை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டு Dr. KM. ஷாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அப்துர் ரஹ்மான் தெரிவித்ததாவது:

‘வெறும் ஆட்சி மாற்றம் என்பதை எதிர்பார்த்து இந்த அரசாங்கத்தினை மக்கள் ஆட்சிக்குக் கொண்டு வரவில்லை. மாறாக ஆட்சி முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த அரசாங்கத்தை மக்கள் பதவியில் அமர்த்தினார்கள். அந்த ஆட்சிமுறை மாற்றத்தினூடாக மஹிந்த காலத்தின் போது நிலவிய ஊழல் மோசடிகள், சட்டொழுங்கின்மையும் இனவாத செயல்பாடுகளும், பாரபட்சங்களும் குடும்ப அரசியல் துஸ்பிரயோகங்களும், அரசியல் வாதிகளின் ஆடம்பரங்களும் பொதுச் சொத்துக்களின் வீண் விரயம் போன்ற எல்லா அம்சங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்றே மக்கள் விரும்பினார்கள்.

மொத்தத்தில் நல்லாட்சியின் அடிப்படையிலான ஆட்சி முறை மாற்றம் ஒன்றை உருவாக்குவதற்காகவே இந்த புதிய அரசாங்கத்தை மக்கள் ஏற்படுத்தினர்.

அதற்கான ஆணையினையே கடந்த 2015 ஜனவரி 8ஆம் திகதியும், அதே போன்று கடந்த வருடம் ஆகஸ்ட் 17ஆம் திகதியும் மக்கள் வழங்கினர். இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் நல்லாட்சியை நோக்கிய நல்ல பல அறிகுறிகளும் மாற்றங்களும் காணப்பட்ட போதிலும் கூட அவற்றை இந்த அரசாங்கம் தற்பொழுது படிப்படியாக இழந்து வருவது கவலையளிக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தனது சகோதரரை அரசாங்கத்தின் பாரிய ஒரு நிறுவனமான ரெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என ஆணை வழங்கிய மக்களுக்கு இது முதலாவது பாரிய ஏமாற்றமாக அமைந்தது. இவ்வாறு நியமிக்கப்பட்ட ரெலிகொம் தலைவரினால் அந்த நிறுவனத்தில் பாரிய துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுவருவதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

அதே போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் தனக்கு நெருக்கமான ஒருவரான அர்ஜூண மகேந்திரன் என்பவரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்தார்.

இந்நியமனம் நடந்து ஒரு சில நாட்களில் பல ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பணமுறி கொடுக்கல்கள் வாங்கல்களில் தனது நெருக்கமான உறவினரின் நிறுவனம் பாரிய இலாபம் பெறும் வகையில் இவர் அதனைக் கையாண்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்தது.

அது பற்றிய உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் அந்த விவகாரம் இன்னும் இழுத்தடிப்பு செய்யப்பட்டே வருகிறது. அர்ஜூண மகேந்திரனின் பதவிக்காலம் இம்மாதத்தோடு முடிவுற இருக்கும் நிலையில் அவரை மீண்டுமொருமுறை ஆறுவருட காலத்திற்கு நியமிப்பதற்கு பிரதமர் காட்டும் முனைப்பு எல்லோரையும் ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

இது,மஹிந்தவின் அதிகாரத் துஸ்பிரயோகங்களுக் கெதிராக போராடிய நல்லாட்சி உழைப்பாளிகளே இது போன்ற நியமனங்களுக்கெதிராகவும் போராடவேண்டிய நிலையினை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்று தமது குடும்ப உறவினர்களையும், நண்பர்களையும் கட்சிக்காரர்களையும் பல்வேறு உயர் பதவிகளில் ஏனைய அமைச்சர்கள் பலரும் நியமித்திருப்பதானது பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

அது போலவே ஊழல் மோசடிகள் தொடர்பிலும் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அரசியல் வாதிகளின் ஆடம்பரப் போக்குகளையும் பொதுப் பண வீண் விரயங்களை கட்டுப்படுத்துகின்ற விடயத்திலும் கூட திருப்திகரமான நடவடிக்கைகளைக் காணவில்லை.

இன்னுமொரு பக்கத்தில் இனவாத சக்திகளும் கூட மெலல் மெல்ல மீண்டும் தலைதூக்குகின்ற நிகழ்வுகளும் அண்மைக்காலமாக நடந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை முறையாக அமுல்படுத்தி இந்த இனவாத சக்திகளை முறையாக கட்டுப்படுத்தும் விடயத்திலும் இந்த அரசாங்கத்திடம் ஒரு வகை தயக்க மனோநிலை இருப்பதாகவே தெரிகிறது.

இப்படியாக உருவாகிவரும் நலாட்சிக்கு அச்சுறுத்தலான இந்த நிலைமைகளையும் அவற்றை இந்த அரசாங்கம் கையாளுகின்றன விதத்தினையும் பார்க்கின்ற போது, நம் நாட்டின் நன்மை கருதி நல்லாட்சிக்கான உழைப்பில் யாரும் ஓய்வடைந்து விட முடியாது என்பதையே காட்டுகிறது.அத்தோடு நமது ஆதரவு மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கமாக இது இருந்தாலும் , அது விடுகின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டி உரிய அழுத்தங்களைக் கொடுத்து நாம் எதிர்பார்த்த நல்லாட்சிப்பாதையில் பயணிக்கச் செய்வதற்கான உழைப்பினை நாம் இன்னும் வேகத்தோடு செயற்பட வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நமது தேசியக்கடமையுமாகும் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது”

LEAVE A REPLY