அரச ஹஜ் குழு இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டாவை கையாண்ட முறைமைக்கு எதிராக ஒரு சில ஹஜ் முகவர்கள் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருக்கின்றமை சமுதாயத்தைக் காட்டிக் கொடுத்ததற்குச் சமமாகும்.
ஒரு புனிதமான கடமைக்கான ஏற்பாடுகளில் எமக்குள் ஒற்றுமையில்லை என்பதை இது நிரூபித்துள்ளது என ஹஜ் குழுவின் முன்னாள் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
ஒரு சில ஹஜ் முகவர்கள் ஹஜ் குழுவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
முஸ்லிம்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கென்று நல்லாட்சி அரசாங்கத்தில் தனியான அமைச்சு உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹஜ் முகவர்கள் ஹஜ் குழுவினால் ஹஜ் கோட்டா கையாளப்பட்ட முறைமை உயர் நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்கிய வழிமுறைகளை மீறியது என்றால் அவர்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சருடன் இது தொடர்பாக கலந்துரையாடி பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
அதனை விடுத்து நேராக நீதிமன்றுக்குச் செல்வது உகந்ததல்ல.
இன நல்லிணக்கம் பற்றிப் பேசும் நாம் எமக்குள்ளேயே நல்லிணக்கம் இல்லாமலிருப்பது கவலைக்குரியதாகும். கடந்த காலங்களிலும் நான் ஹஜ் குழுவுக்கு தலைமை வகித்த சந்தர்ப்பத்திலும் ஹஜ் முகவர்கள் நீதிமன்றத்தினை நாடினார்கள்.
எமக்கு எதிரான பொதுபலசேனாவின் தயவினையும் நாடினார்கள். இது பற்றி நாம் வெட்கப்பட வேண்டும்.
தற்போது கோட்டா கையாளப்பட்ட முறையினால் கொழும்பில் உள்ள ஹஜ் முகவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை ஹஜ் யாத்திரிகர்கள் தேடி வருவதில்லை என்பதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு இந்தத் தடவை ஹஜ் கட்டணங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன. மக்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை எதிர்பார்த்து அவ்வாறான முகவர்களை நாடியே செல்கிறார்கள்.
இவ்வருடம் ஹஜ் கட்டணங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையினால் ஹஜ் யாத்திரிகர்கள் நன்மையடைகிறார்கள்.
தற்போது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றாலும் சமூக நலன் கருதி நீதிமன்றில் இருதரப்பும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதே சிறந்ததாகும் என்றார்.
-Vidivelli-