ஒலிம்பிக் போட்டி நெருங்கும் வேளையில் நாட்டின் ‘நிதி நிலை’ மோசமாக இருப்பதாக பிரேசில் அறிவிப்பு

0
116

201606181508271435_Rio-declares-financial-calamity-ahead-of-Olympic-Games_SECVPFதென் அமெரிக்காவில் முதல்முறையாக வரும் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டியும், செப்டம்பர் 7 முதல் 18-ந்தேதி வரை பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இவ்விரு போட்டிகளும் அங்குள்ள ரியோ டி ஜெனிரோவில் நடக்கிறது.

ஏற்கனவே, இங்கு ஜிகா வைரஸ் பீதியை கிளப்பியிருந்த நிலையில், தற்போது அந்நாட்டின் பொருளாதார நிலையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனிரோவுக்கு முக்கிய வருமானமாக இருந்து வந்த எண்ணெய் ஏற்றுமதியில் தற்போது தொய்வு காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெரும் சரிவை சந்தித்து இருப்பதும் இதற்கு ஒரு காரணம். சென்ற ஆண்டில் மட்டும் பிரேசிலின் பொருளாதாரம் 3.8 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். இதே நிலையே இந்த ஆண்டும் தொடர வாய்ப்பிருப்பதாக சர்வதேச நிதியமும் கணித்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டில் 5.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மீது வசூலிக்கப்படும் வரியால் கிடைக்கும் வருவாய் சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துவிட்டது. இதுதவிர, அரசு ஊழியர்களுக்கும் கூட பல மாத சம்பளங்கள் நிலுவையில் உள்ளதாகவும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பென்சன் தொகை நிலுவையில் வழங்கப்படாமல் இருப்பதால் பல போராட்டங்களும் ஆங்காங்கே நடக்கின்றன.

பொருளாதார நிலை இப்படி இருக்க இன்னும் 2 மாதங்களுக்குள் ஒலிம்பிக் போட்டியை வேறு நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், ரியோ டி ஜெனிரோ நிதி நிலை குறித்த ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது, பட்ஜெட் பற்றாக்குறையாக இருக்கும் நெருக்கடியான இந்த நேரத்தில் ஒலிம்பிக் போட்டியை முறையாக நடத்த அவசர நிதி தேவைப்படுகிறது. எனவே, நாட்டின் நிதி நிலை நெருக்கடி கருதி பொதுச் சொத்துக்கள் மீது அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களை விற்று ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு தேவையான நிதியை விரைவாக திரட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும், இவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY