அமைச்சர் ஹக்கீம் பல கோடி ருபாய் களை சுருட்டிக்கொண்டார் என கூறுவது கேலிக்கையான விடயம்: யஹ்யா கான்

0
186

imageஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், கட்சிக்கு கிடைத்த பல கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட ரீதியில் சுருட்டிக் கொண்டுள்ளதாக சிலர் இன்று குற்றஞ் சுமத்தி வருகின்றனர். கட்சியில் முக்கிய பொறுப்புகளை பல ஆண்டு காலமாக முன்னெடுத்துச் சென்றவர்கள் இன்று இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது கேலிக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த காலத்தில் கட்சியிலும் அரசாங்கத்திலும் பொறுப்புமிக்க பதவிகளை வகித்த சிலர் இன்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி கட்சியையும் கட்சித் தலைமையையும் இவ்வாறு விமர்சிப்பது கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிவதற்குச் சமனாகும்.

அமைச்சர் ஹக்கீம் பல கோடி ரூபா கட்சிப் பணத்தைச் சுருட்டிக் கொண்டார் என இன்று கூறும் கண்டுபிடிப்பாளர்கள், அன்று தாங்கள் பொறுப்பான பதவிகளிலிருந்த போது இதே காரணங்களை முன்வைத்து கட்சியிலிருந்து வெளியேறி தங்களது கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம். இதனை விடுத்து தனக்கு இன்று கட்சியில் சேதாரம் என்ற நிலைமை ஏற்பட்ட போது மட்டும் இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் இவ்வாறு விமர்சிப்பது அவர்களது வேட்காட்டுத் தனம் என்றே கூறமுடியும்.

கட்சியின் நலனிலும் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்டவர்களாக இவர்கள் இருந்திருந்தால், அமைச்சர் ஹக்கீம் நடந்து கொண்டமை உண்மையாகவிருப்பின் அன்றே இந்த விடயங்களை வெளிப்படுத்தி அவர்கள் கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்திருக்க வேண்டும்.

இதனை விடுத்து இன்று கட்சியின் அதிருப்தியாளர்களாக தங்களை மாற்றிக் கொண்ட சிலர் கட்சித் தலைமை மீது களங்கம் கற்பிக்க முயல்வது அம்புலி மாமா வேண்டுமென்று அடம்பிடிக்கும் சின்னக் குழந்தைகளின் சிற்றறிவை விடவும் மட்டகரமானது என்றே கூற முடியும்.

மேலும் கட்சித் தலைவர் பல கோடி ரூபாக்களைச் சுருட்டிக் கொண்டு விட்டார் என்றார் அதற்கான ஆதாரங்களை முன்வைத்து நிரூபிக்க வேண்டுமென தவிர அநியாயமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது அறிவிலித்தனம். இந்த வெள்ளோட்ட நாடகத்தை மக்கள் கூட நிச்சயமாக நம்பமாட்டார்கள்.

கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கிய பதவிகளை வகித்த சிலர் இன்று அந்த நிலைமையில் இல்லை என்பதற்காக சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என கூறி அற்புதமான திராட்சைக் கொடி மீது குற்றஞ் சுமத்திய நரியின் தன்மைக்கு தங்களை இட்டுச் சென்றுள்ளமை வெட்கக் கேடானது.

கட்சிக்குள் தான் ஏதும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பின் அதனைச் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித் தீர்க்க வேண்டும். இதனை விடுத்து தனது பல்லைக் குத்திய குச்சியை மற்றவர்களிடம் மோர்ந்து பார்க்கக் கொடுப்பது மிக மோசமான செயல்.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எதிரான இனவாத ரீதியாக எப்போதுமே செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொதுபல சேனாவினால் கூட பண மோசடி தொடர்பில் குற்றஞ் சுமத்தப்படாத ஒரு தலைவரான அமைச்சர் ஹக்கீம் மீது இவ்வாறான அநியாய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அவர்களது காழ்ப்புணர்வையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY