கனமழை-நிலச்சரிவு: சீனாவில் 13 பேர் பலி

0
129

201606170432185275_13-dead-in-rainfall-in-china_SECVPFசீனாவின் தென் பகுதியில் உள்ள ஹூனான், குயிஸவ், குவாங்டங் ஆகிய மாகாணங்களிலும் தன்னாட்சி பகுதியான குவாங்சி ஜூவாங்கிலும் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.

கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 13 பேர் மாயமாகி இருப்பதாகவும் தெரிகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY