வற்வரியில் மீண்டும் மாற்றம்

0
159

* மருத்துவ சோதனை, இரத்த சுத்திகரிப்புக்கு வற்வரி நீக்கம்
* சிகரட், பீடி, மதுபானத்துக்கு அதிகரிப்பு

Minister Sarath Amunugamaமருத்துவ பரிசோதனை, இரத்த சுத்திகரிப்பு மற்றும் விமான டிக்கட் மீது விதிக்கப்பட்ட வற் வரியை நீக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். பிரதமர் தலைமையில் கூடிய பொருளாதாரம் தொடர்பிலான குழுவின் கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர சிகரட், பீடி மற்றும் மதுபானத்திற்கு வற் வரி விதிக்கவும் இங்கு முடிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் அடுத்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். சு.க. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இது குறித்து தெரிவித்தார்.

11 வீதமாக இருந்த வற் வரி அண்மையில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரி அதிகரிக்கப்படாத போதும் பொதுமக்களுக்கு பாதிப்புள்ள சில பொருட்கள், சேவைகள் மீது வற் வரி அதிகரிக்கப்பட்டது தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அமுனுகம, பொருளாதாரம் தொடர்பான குழு, புதன்கிழமை கூடியது. இதில் வற்வரி தொடர்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

வற் வரி உயர்வின் போது சிகரட்,பீடி மற்றும் மதுபானம் மீது இந்த வரி விதிக்கப்படவில்லை வேறு வரிகளே விதிக்கப்பட்டுள்ளன. மது, புகை என்பவற்றுக்கு ஊக்குவிப்பு வழங்குவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவின் பிரகாரம் இவற்றின் மீதான வற் வரியை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை, இரத்த சுத்திகரிப்பு என்பவற்றுக்கு வற் வரி அதிகரிக்கப்பட்டது தொடர்பில் விமர்சனம் காணப்படுகிறது. நோயாளர்களின் நலன் கருதி இவற்றிற்கு அதிகரிக்கப்பட்ட வற் வரியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணங்களும் வற் வரி அதிகரிப்பால் உயர்ந்துள்ளன.

இதனால் மத்திய கிழக்கிற்கும் வேறுநாடுகளுக்கும் தொழில் நிமித்தமும் வேறு தேவைகளுக்காகவும் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை படி இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணத்திற்கான வற் வரியை நீக்க பொருளாதாரம் தொடர்பான குழு முடிவுசெய்துள்ளது என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, மக்கள் மீது சுமை ஏற்றுவதற்கு சு.க. அனுமதிக்காது.

மருத்துவ பரிசோதனை, இரத்த சுத்திகரிப்பு என்பவற்றிற்கு வற்வரி விதிக்கப்பட்டிருப்பதை நீக்குமாறு எமது கட்சியே கோரியது.

அதன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

#thinakaran

LEAVE A REPLY