அரசாங்கம் மக்களின் எதிர்பார்பை பெறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்: NFGG

0
231

NFGG Logo 1அரசாங்கம் நல்லாட்சி என்பதனை வெறும் அரசியல் கோசமாக மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவி மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதியிடமும் பிரமரிடமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அராஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே இந்த புதிய ஆட்சியை நிறுவினர். இந்த ஆட்சி மாற்றத்திற்காக பொது மக்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பொது எதிரணியை வழிநடாத்திய கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தமது உயிரைப் பணயம் வைத்தே போராடினர்.

கடந்த ஆட்சியின் போது தலைவிரித்தாடிய அராஜகம், ஜனநாயக விரோத செயற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படாமை, ஊழல் மோசடி, வீண் விரயம், அதிகார மற்றும் பொதுச் சொத்துக்களின் துஸ்பிரயோகம் போன்ற பல்வேறு காரணங்களை வைத்தே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

மேற்சொன்ன தவறுகளையும் பிழைகளையும் திருத்தி ஜனநாயக விழுமியங்களை மதித்தல், சட்டத்தின் ஆட்சியினை நிறுவுதல், நீதியை நிலை நிறுத்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல், ஊழல் மோசடிகளை ஒழித்தல், வீண் விரயத்தை இல்லாமல் செய்தல், ஜனாதிபதி, அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பரங்களைக் குறைத்தல், வெளிப்படைத்தன்மையை பேணுதல் போன்ற பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகத்தையே நாம் நல்லாட்சி அ சாங்கமாக எதிர்பார்த்தோம்.

மேற்படி பண்புகளைக் கொண்ட நல்லாட்சியை நிறுவுவதற்கு 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கும் 2015 ஆகஸ்ட 17 இல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் மக்கள் தமது ஆணையை வழங்கினர்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடும்போது பல்வேறு முன்னேற்றங்களும் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதை நாம் பாராட்டுகிறோம்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் நல்லாட்சிப் பண்புகளை படிப்படியாக இழந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. அது குறித்த எமது அவதானங்களையும் அதிருப்தியினையும் ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம். நாமும் ஆட்சி மாற்றத்தின் பங்குதாரர்கள் என்ற தார்மீக உரிமையோடு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

1. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை திருப்தியளிப்பதாக இல்லை. எனவே , இவ்விடயம் குறித்து இதனை விட வினைத்திறன் மிக்கதாகவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சியின் போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் திணைக்களத்தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் விடயத்தில் பக்க சார்பற்ற விசாரரணைகள் நடாத்தப்பட வேண்டும்.

2. இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடிய பகை மற்றும் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சாரங்களை நிறுத்துவதற்கு உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செய்திகளை, தகவல்களை பிரசுரித்தல் ஒலி ஒளி பரப்புச் செய்தல், சமூக விலைத்தளங்களில் பரப்புதல் போன்றவை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

3. புதிதாக அமைக்கப்படும் அல்லது விஸ்தரிக்கப்படும் கல்விக்கூடங்கள் சமய வழிபாட்டுத்தலங்கள் கலாசார நிலையங்கள் தொடர்பான விடயங்களை உத்தியோக பூர்வமாக அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் மாத்திரமே கையாள வேண்டும். இவ்வாறான விடயங்களில் மத குருமார்களோ சமூக நிறுவனங்களோ தலையிடுவது முற்றாக தடுக்கப்படல் வேண்டும்.இவ்வாறு சட்டத்தை கையிலெடுத்திருக்கும் நபர்கள் இயக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

4 . நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்ற வகையில் பொதுமக்கள் மீது வரிச்சுமைகளை படிப்படியாக அதிகரிப்பதை விட்டு அரசாங்க நிர்வாகத்தை கொண்டு நடாத்துவதில் சிக்கனமும் எளிமையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனாதிபதி, பிரதம மந்திரியின் நாளாந்த நிர்வாக செலவுகள் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபையின் ஆளுனர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள், போன்றவர்களின் நிர்வாகச் செலவுகள் என்ற பெயரில் கட்டிடங்களுக்காகவும் அதி சொகுசு வாகனங்களுக்காகவும் ஆடம்பர வசிப்பிடங்களுக்காகவும் செய்யப்படும் மேலதிக செலவுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களால் அசாதாரண சூழ்நிலைகளை மக்கள் எதிர் கொள்ளும் போது அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதில் அரசாங்கம் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் போதிய தயார் நிலையில் இருக்கவில்லை யென்பது அண்மைக்கால மண்சரிவுகள் வெள்ள அனர்த்தம் மற்றும் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சிவில் சமூக சமய நிறுவனங்கள் பொதுமக்கள் இன மத பிரதேச வேறுபாடின்றி பரஸ்பரம் உதவிகள் ஒத்தாசைகளை வழங்கி நிலைமைகளை சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் 100 வீதம் அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டிய விடயங்களில் குறிப்பாக சாலாவ இராணுவ முகாம் பாதிக்கப்பட்ட விடயத்தில் கூட அரசாங்கம் அசிரத்தையாக நடந்து கொண்டமை கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே, இவ்விடயத்தில் உரிய கவனத்தைச் செலுத்தி அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாம் மேற்சொன்ன விடயங்களை ஜனாதிபதி அவர்களும் பிரதம மந்திரி அவர்களும் கவனத்திலெடுத்து நல்லாட்சி அரசாங்கம் என்பதனை வெறும் கோசமாக மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல் உண்மையான அர்த்தமுள்ள நல்லாட்சியை நிறுவி மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வேண்டுகின்றோம்.

LEAVE A REPLY