ஊழல் புகார் எதிரொலி: ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகர மேயர் திடீர் ராஜினாமா

0
140

201606151445114782_Tokyo-governor-quits-over-scandal-second-since-winning_SECVPFஉலகின் மிகவும் பரபரப்பான பெருநகரங்களில் ஒன்றான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேயராக பதவி வகித்துவந்த யோய்ச்சி மசுஸோ(64) மீது பொதுமக்களின் வரிப்பணத்தை முறைகேடாக சுயத்தேவைகளுக்கு பயன்படுத்தியதாக ஊழல் புகார்கள் எழுந்தன.

அரசு நிதியில் இருந்து பணத்தை எடுத்து குடும்பத்தினருடன் கலைக்கூடங்களுக்கும், சுற்றுலாக்களுக்கும் செலவழித்ததாகவும் இவர்மீது ஆதாரத்துடன் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தனது குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு அரசு செலவில் காமிக் புத்தகங்கள் வாங்கித் தந்ததும் புகார்களில் ஒன்றாக இருந்தது.

ஆரம்பத்தில் இந்த புகார்களை வம்படியாக மறுத்துவந்த இவர், பின்னர் அரசுப் பணத்தில் இருந்து செலவிட்ட தொகையை தனது சம்பளப் பணத்தில் பிடித்தம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். டோக்கியோ நகர மேயர் பதவியில் இருந்து யோய்ச்சி மசுஸோ விலகியே தீர வேண்டும் பொதுமக்களும் போர்க்கொடி எழுப்பினர். ஆனால், அவர் இதற்கு மறுத்து விட்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அவர் பதவி விலக வேண்டும் என்றே பெரும்பாலான டோக்கியோ மக்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பதவி விலக அரைமனதாக ஒப்புக்கொண்ட யோய்ச்சி மசுஸோ, அதற்கு வரும் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதிவரை தவணை கேட்டிருந்தார்.

வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 21-ம் தேதி நிறைவுபெறுகிறது. அதன் பின்னர் வரும் 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவுக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி ஒலிம்பிக் கொடி கொண்டு வரப்படவுள்ளது. ஜப்பான் நகர மேயராக அந்த கொடியை நான் வரவேற்று வாங்கியவுடன் எனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என அவர் கூறி வந்தார்.

இதை ஏற்றுகொள்ள மறுத்துவிட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது கட்சியினரை அனுப்பி யோய்ச்சி மசுஸோவை உடனடியாக ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தினார். இன்று அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தனது மேயர் பதவியை யோய்ச்சி மசுஸோ இன்று ராஜினாமா செய்தார்.

டோக்கியோ நகர முந்தைய மேயரும் ஊழல் புகார் எதிரொலியாக தனது பதவியை கடந்த 2014-ம் ஆண்டு ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY