இடமாற்றங்களை அடுத்து கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்கள் வேண்டுமெனக்கோரி மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டம்

0
204

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

6f3e1974-21cc-4606-bb6d-873b6d8869f6கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களையடுத்து சில பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கக் கோரி பெற்றோர்களும் மாணவர்களும் தெருக்களில் இறங்கி ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிலீடு இன்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை மற்றும் பதிலீட்டு இடமாற்றம் பெற்றவர்களில் பலரும் இதுவரை கடமைக்கு சமூகமளிக்காமை போன்ற காரணங்களினால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் சில வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் இந்த இடமாற்றத்தின் பின்னர் மேலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார் கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான இரா. துரைரெத்தினம்.

இதன் காரணமாகவே மாணவர்களும் பெற்றோர்களும் தங்கள் கல்விக்கான உரிமையை வலியுறுத்தி சாலைகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

ஏற்கெனவே மாகாண கல்வி அமைச்சில் அதி உயர் பதவி வகித்தவர் தான் தற்போது மாகாண கல்வி அமைச்சர் பதவி வகிக்கின்றார். அப்படி இருந்தும் ஒரு முறையான இடமாற்ற கொள்கை இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் குறைப்பிடுகிறார்.

இந்த இடமாற்றம் வருட முற்பகுதியிலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படும் போது மாணவர்களின் கல்வியிலும் ஒரு தேக்க நிலை ஏற்படுகின்றது என்றும் இரா. துரைரெத்தினம் சுட்டிக்காட்டுகின்றார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்களின் பின்னர் குறிப்பாக சில பிரதேசங்களில் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதனால் ஏற்படும் அரச பரீட்சை பெறுபேறுகளில் வீழ்ச்சி போன்ற விளைவுகளுக்கு மாகாண கல்வி அமைச்சு தான் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த இடமாற்றங்கள் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட இடமாற்ற சபையின் தீர்மானத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு பதலீட்டு ஆசிரியர்கள் உட்பட பொருத்தமான ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY