சிலர் வாய் வழி சுவாசிப்பது ஏன்?

0
101

D0AG1v4csnoringவிளையாடும்போதோ, உடற்பயிற்சியின்போதோ வாய் வழியாக சுவாசிப்பது இயல்புதான். இதைப்பற்றி கவலைப்படத் தேவை இல்லை. சிலர் சாதாரண நேரங்களிலும் வாய் வழியாக சுவாசிப்பார்கள். அதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தப் பழக்கம் வயது வந்தவர்களைவிட குழந்தைகளிடம்தான் அதிகம் இருக்கிறது. இப்படி இயல்புக்கு மாறான விஷயம் இருக்கிறது என்பதை குழந்தைகளுக்குச் சொல்லத் தெரியாது. பெற்றோர்தான் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாய் வழியாக சுவாசிப்பது உறுதியானால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மூக்கடைப்பு, மன அழுத்தம், களைப்பு, தூக்கமின்மை, தவறான கற்றலினால் ஏற்படும் பழக்கத்தால் வாய் வழி சுவாசம் சில குழந்தைகளுக்கு ஏற்பட்டு இருக்கலாம். இந்த சாதாரண பிரச்னையை தகுந்த ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் சரி செய்துவிடலாம்.

கவனிக்க வேண்டிய பாதிப்புகளான தொண்டை மற்றும் மூக்கில் சதை வளர்தல், வாய் துர்நாற்றம், பல் சொத்தை, மூச்சுக்குழாய் பாதிப்பு போன்ற காரணங்கள் தெரிந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். காது, மூக்கு, தொண்டை, வாய் மற்றும் பல் ஆகிய உறுப்புகளைப் பரிசோதனை செய்வதன் மூலமாக இதை மருத்துவர்கள் கண்டுபிடிப்பார்கள். பிரச்னையின் தன்மைக்கேற்ப நுரையீரல் சிறப்பு மருத்துவரிடமோ, பல் மருத்துவரிடமோ அல்லது காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரிடமோ சிகிச்சை எடுத்துக் கொண்டு சரி செய்துவிடலாம்.

வாய் வழி சுவாசத்தால் பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும், குழந்தைகளுடைய முகம் மற்றும் தாடை அமைப்பு சீராக இல்லாமல் மாறும் வாய்ப்பு உண்டு. பல் ஈறு வீங்குவது, பற்குழி ஏற்படுவது, சளித்தொல்லை ஆகிய பிரச்னைகளும் ஏற்படும். வயது வந்தவர்களுக்கும் சைனஸ், நாசி அழற்சி காரணமாக வாய் வழி சுவாசம் ஏற்படலாம்.

LEAVE A REPLY