கிராம மக்கள் சமூக இணக்கப்பாட்டுடன் வாழ்வதன் மூலம் தமக்கான அடிப்படை வசதிகளை குறைவின்றிப் பெற்றுக் கொள்ளலாம்

0
186

-கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஹிதாயத்துல்லாஹ்-

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

S. Hithayathullahகிராம மக்கள் தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் சமூக இணக்கப்பாட்டுடன் வாழ்வதன் மூலம் தமக்கான அடிப்படை வசதிகளை குறைவின்றிப் பெற்றுக் கொள்ளலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் பொத்தானை கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு நேற்று (13) திங்கட்கிழமை விஜயம் செய்து அப்பிரதேசத்திற்கான போக்குவரத்துச் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கூடியிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர், கிராம மக்களின் காலடிக்குச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கரிசனைக்கு அமைய நாம் மக்கள் வாழும் தொலை தூரக் கிராமங்களுக்கும் சென்று அவர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றோம்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், கிராம மக்கள் காலாகாலமாக பாடுபட்டு கஸ்டப்பட்டு உழைத்து வாழ்பவர்கள். கிராம மக்கள் மத்தியில் இனப்பாகுபாடு இல்லை. தொழில் ரீதியிலும் இன்னபிற அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் ஒருசமூகத்தில் மற்றொரு சமூகம் தங்கியிருக்கின்றது. சமூக ஒற்றுமைக்கு இந்த தங்கி வாழும் சூழல் ஆரோக்கியமானது. ஆனால் சிலர் கிராமத்து மக்களின் ஒற்றுமையையும் சீர் குலைக்க நிற்கின்றார்கள். இதற்கு நீங்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

பொத்தானை கிராமத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான போக்கு வரத்துச் சேவையை முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க இப்பொழுது ஆரம்பித்துள்ளோம்.

அதுபோன்று உங்களது மற்றொரு அடிப்படைத் Nவையான குடி தண்ணீரை நாளொன்றுக்கு 7000 லீற்றர் கிராம மக்களின் காலடிக்குக் கொண்டு வந்து வழங்க பிரதேச சபையூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வாழும் இடங்களில் 3 நீர்த்தாங்கிகளையும் முஸ்லிம் மக்கள் வாழும் இடங்களில் 3 தாங்கிகளையும் வைத்து நீர் விநியோகிக்க உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

கிராம மக்கள் தாங்கள் காலாகாலமாக உறவுப் பாலம் அமைத்து வாழ்ந்தது போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐக்கியத்துடன் தமது அடிப்படைத் தேவைகளை முன்வைப்பார்களேயானால் பாடசாலை, வீதி, வீட்டு வசதிகள் என்று எல்லா கட்டுமான அபிவிருத்திகளும் மக்களின் காலடிக்கு வந்து சேரும் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ். ஹிதாயத்துல்லாஹ், இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர், வாழைச்சேனை இ.போ.ச சாலை முகாமையாளர் எம்.ஐ. அப்துல் அஸீஸ், வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாணத் தலைவர் எம்.எச். மீராமுஹைதீன் உட்பட இன்னும் பல அதிகாரிகளம் தமிழ் முஸ்லிம் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY