காத்தான்குடியில் இரு கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்: மூவர் வைத்தியசாலையில்

0
165

(விஷேட நிருபர்)

fight-hit-clashகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் நேற்று (13) திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் காயமடைந்துள்ளதாக தெரிவித்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்றிரவு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் வீதி சந்தியில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எனப்படும் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதராவளரும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுமான எம்.ஐ.நாசர் மற்றும் ஏ.ஜே.றிஸ்வி ஆகியோருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தன்னை வழிமறித்து தாக்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எனப்படும் எச்.எம்.எம்.முஸ்தபா முறைப்பாடு செய்துள்ளதுடன் மோட்டார் சைக்களில் இன்னுமொருவருடன் நாங்கள் நின்ற இடத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எனப்படும் எச்.எம்.எம்.முஸ்தபா எங்களை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களான எம்.ஐ.நாசர் மற்றும் ஏ.ஜே.றிஸ்வி ஆகியோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இம்மூவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இம் மூவருக்குமிடையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு வைத்து காத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் ஜமாஅத்தார் சங்கம் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

தன்மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கும் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எனப்படும் எச்.எம்.எம்.முஸ்தபா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதே போன்று தங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் எனப்படும் முஸ்தபாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எம்.ஐ.நாசர் மற்றும் ஏ.ஜே.றிஸ்வி ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இது காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல் ஜமா அத்தார் சங்கம் தொடர்பான பிரச்சினையாகும், அமைப்பாளர் முஸ்தபாவே எங்களை வந்து தாக்கியதாகவும் எம்.ஐ.நாசர் மற்றும் ஏ.ஜே.றிஸ்வி ஆகியோர் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY