சாண் ஏற முழம் சறுக்குகின்றது: நல்லாட்சி பற்றி அப்துர் ரஹ்மான்

0
243

(அஹமட் இர்ஷாட்)

Rahman Engநல்லாட்சி அரசாங்கத்தினை சாண் ஏற முழம் சறுக்குகின்றது என விமர்சிக்கும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,

கடந்த ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டணியுடன் நல்லாட்சிகான தேசிய முன்னணி எனும் அரசியல் கட்சியும், தவிசாளரும் எமது நாட்டில் நல்லட்சி ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தமை எல்லோரும் அறிந்த விடயமாகும்.

நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தினை விமர்சிக்கும் ஒரு கட்சியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் , அதன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும் குறுகிய காலத்திற்குள் மாற்றமடைந்திருப்பது சமகால அரசியலில் சிந்திக்கதக்க விடயமாக காணப்படுவதில் எவ்விதமன பிழையும் இல்லை என்பதாகவே தற்பொழுது நாட்டு நடப்புக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அந்த வகையிலே நல்லாட்சிக்கான மாற்றம் ஒன்றிற்காக மக்கள் ஆணையை வழங்கி தற்பொழுது 17 மாதங்கள் நிறைவடைகின்றன. மஹிந்தவின் அரசாங்கத்தை மக்கள் தோற்கடிப்பதற்கான பல காரணங்களில் பொதுச்சொத்து கொள்ளை , சட்டவாட்சி இல்லாமை, குடும்ப அரசியலும் அதிகார துஷ்பிரயோகம் என்பன பிரதானமான சிலவாகும். இவை தொடர்பில் இந்த புதிய அரசாங்கத்திலும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பது பெரும் குறையாகவே தொடர்கிறது.

தமது உறவினர்களையும் கட்சிக்காரர்களையும் உயர் பதவிகளில் அமர்த்துதல் என்பது தற்போதும் தாராளமாகவே நடந்து வருகின்றது.

ஊழல் மோசடிகள் பற்றி உரத்துப்பேசிய அளவிற்கு சராசரி வேகத்தில் கூட அதற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை .

இதெற்கென நியமிக்கப்பட்ட விஷேட விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டு முறைப்பாடுகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வழங்கியிருந்தார்கள்.

கடந்த பதினேழு மாதங்களில் சுமார் 40 அளவிலான விசாரணைகளை மாத்திரமே நிறைவு செய்யப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் அதற்கப்பால் எந்த நடவடிக்கைகளுமன்றி அவையும் கூட முடங்கிக்கிடக்கின்றன. இந்த விடயங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கான சரக்குகளாகவும் தமக்கெதிரான அரசியல் எதிரிகளை கட்டுப்படுத்துவதற்கான துரும்புகளாகவும் மாத்திரமே தற்பொழுது மாறியிருக்கின்றன.

சட்ட ஒழுங்கு விடயத்தைப் பொறுத்தவரையில் வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். தேர்தல் காலங்களில் மேலெழும்புவதும் பின்னர் அடங்கிவிடுவதுமான ஒன்றாகவே இத்தனை காலமாக இது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது. ஏறத்தாள இதில் நீதி கிடைக்கவே கிடைக்காது என மக்கள் சோர்வடைந்து விட்ட நிலையில் அண்மையில் இதனோடு தொடர்பு பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளமையானது, சிறிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

இதற்கிடையில் தமது சொந்தத்தேவைகளுக்காக பொதுப்பணத்தை துஷ்பிரயோகம் செய்தார் என கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தனிப்பட்ட பயணமாக உகண்டாவிற்கு சென்று வருவதற்காக பல லட்ச ரூபாய் பொதுப்பணத்தை இந்த அரசாங்கமே வழங்கியுள்ளது.

அந்த ஏமாற்றம் தணிவதற்கு முன்னால், நல்லாட்சி மாற்றம் ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது மற்றுமொரு பாரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.

கடந்த ஆட்சியில் பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரான அனுஷ பெல்பிட்ட என்பவரை உள்நாட்டு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார்கள்.

இவர் தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த பொழுது, அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 600 மில்லியன் தொகையினை துஷ்பிரயோகம் செய்திருந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இவர் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி விளக்கம் கோரப்பட்ட பொழுது, தமது அமைச்சில் நிலவும் ஆளணி பற்றாக்குறை காரணமாகவே இவரை தற்பொழுது நியமித்துள்ளதாக குறித்த அமைச்சர் விளக்கம் சொல்லியுள்ளார். இது நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களை இன்னுமின்னும் ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

வசீம் தாஜுதீன் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய கைதையும் , பாரிய ஊழல் மோசடியோடு தொடர்புபட்டுள்ள ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த நியமனத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது “சாண் ஏற முழம் சறுக்குகின்ற” ஒன்றாகவே நம் நாட்டின் நல்லாட்சி பயணமும் தெரிகிறது என தெளிவு படுத்துகின்றது என்றார் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் அதன் தலைமையுமான பொறியலாளர் அப்துர் ரஹ்மான்.

LEAVE A REPLY