காத்தான்குடியில் பாடசாலை ஆசிரியை ஒருவர் பாடசாலைக்குள் வைத்து தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

0
203

(விசேட நிருபர்)

DSCN0539காத்தான்குடியில் பாடசாலை ஆசிரியை ஒருவர் பாடசாலைக்குள் வைத்து தாக்கப்பட்டமைக்கு பாடசாலை ஆசிரிய சமூகம் மற்றும் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன கண்டனம் தெரிவித்துள்ளன.

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய ஆசிரியை ஒருவர் கடந்த சனிக்கிழமை(11.6.2016) அன்று இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் உறவினர்களினால் குறித்த ஆசிரியை தாக்கப்பட்டதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று(13..6.2016) திங்கட்கிழமை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய மண்டபத்தில் ஒன்று கூடிய பாடசாலை ஆசிரிய சமூகம் மற்றும் பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன இணைந்து இந்த கண்டனத்தை வெளியிட்டனர்.

பாடசாலையில் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை மாணவர் ஒருவரின் உறவினர்கள் எனப்படுபவர்கள் பாடசாலையின் அதிபரின் வகுப்பறைக்குள் புகுந்து அதிபர் முன்னிலையிலேயே தாக்கியுள்ளனர்.

இதை வன்மையாக கண்டிப்பதுடன், இது ஒரு நாகரீகமற்ற செயலாகும். பாடசாலையில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் பாதுகாப்பு என்பது இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஆசிரியர்களுக்கு பாடசாலையில் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் கண்டிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்குண்டு. அதனை ஆசிரியர்கள் செய்யும் போது ஆசிரியர்களை தாக்குவதற்கு முன்வரக் கூடாது.

குறித்த ஆசிரியை மாணவரை தாக்கியிருந்தால் அதற்கு பாடசாலை மட்டத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் பாடசாலைக்குள் புகுந்து காடைத்தனம் செய்வதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இந்தச் சம்பவத்தினையடுத்து இவ் ஆசிரியை கற்பிக்கும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பிரத்தியேகமான வகுப்புக்கு வரமுடியாது என குறித்த ஆசிரியை வகுப்பினை பகிஷ்கரித்துள்ளார்.

இதனால் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலையின் எதிர் கால கல்வி நடவடிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இது தொடர்பில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலகம் மற்றும் காத்தான்குடி கல்விக் கோட்டம் என்பன இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மீண்டும், இடை நிறுத்தப்பட்டுள்ள காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்பை நடாத்த வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

இன்றை இக் கூட்டத்தில் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் அதபர் எஸ்.எல்.ஏ.கபூர், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.ஜாபீர், மற்றும் பாடசாலை ஆசிரியைகள், பாடசாலையின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை(11) ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இவ்வாண்டு எழுதும் மாணவர்களுக்காக பிரத்தியேக வகுப்பை நடாத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பிலிருந்த மாணவர் ஒருவரை வகுப்பை நடாத்திக் கொண்டிருந்த ஆசிரியை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற மாணவரின் உறவினர்கள் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவர் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் தாக்கப்பட்ட மாணவரும், தாக்கப்பட்ட ஆசிரியையும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்தனர்.

பின்னர் சனிக்கிழமை மாலை இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளை வாபஸ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY