சென்னையில் 50 வீடுகள் கடல் நீரினால் சேதம்

0
83

160609163943_water_2888210gசென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கடற்கரையை ஒட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே கடல் நீர்மட்டம் உயர்ந்தும் சீற்றம் அதிகரித்தும் காணப்பட்டது. இதனால், கடலோரம் அமைந்துள்ள பல வீடுகள் அலையின் சீற்றத்தில் நொறுங்கின.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீநிவாஸபுரம் மீனவ பஞ்சாயத்தின் தலைவரான சுரேஷ், பல படகுகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் மீன் பிடிக்கும் வலைகள் மணலுக்குள் புதைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

2009-ஆம் ஆண்டிலும் இதேபோல கடல் சீற்றம் ஏற்பட்டு சில வீடுகள் நொறுங்கியதாகவும், அங்கு வசித்த பெண்கள் தெரிவித்தனர்.

இப்போது பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் விரும்பினால் கண்ணகி நகர் போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும், அதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றும் அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

சென்னை மட்டுமல்லாமல், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதேபோல பல இடங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை பெய்யும் காலகட்டத்தில் இதுபோல, கடல் நீர்மட்டம் உயர்வது இயல்பானது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல் கடல் நீர் பல மீட்டர் தூரம் உள்ளே வந்திருப்பதால், இந்தப் பகுதியில் வசிப்பவர்கள், தொடர்ந்து அச்சத்தில் இருந்துவருகின்றனர்.

-BBC-

LEAVE A REPLY