நல்லாட்சியினை உருவாக்கி அரசாங்கத்தினை ஏதோவொரு வகையில் இயக்குபவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரே உள்ளனர்: துரைராஜசிங்கம்

0
112

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

357d1ebf-668c-438f-9d53-3c7ede7d91adநல்லாட்சியினை உருவாக்கி அரசாங்கத்தினை ஏதோவொரு வகையில் இயக்குபவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சும் கிழக்கு விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த நிலக்கடலை அறுவடை விழாவும் இயந்திர பாவனை அறிமும் புதனன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாவடியோடை புத்தம்புரி பகுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பளர் ஆர். கோகுலதாஸன் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம்,

எமது வளங்களை சுரண்டிக்கொண்டு மிகப்பெரும் பணக்காரர்களாக மாறும் சம்பங்கள் எல்லாம் நடைபெற்றுவருகின்றது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்று வருகின்றது.

மாவடியோடை ஆற்றுப் பகுதியில் சட்ட விரோதமான மணல் அகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் கிரானில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்ட மரங்களை தடுத்ததற்காக சட்டம் ஒழுங்கை பேணவேண்டியவர்களினால் கிராம சேவையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

யுத்தம் ஒய்ந்ததன் பின்னர் எமது வளங்களை திருடும் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் நாங்கள் உள்ளோம். விவசாய மாகாணமாகவுள்ள கிழக்கில் அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டியது விவசாயிகளின் பொறுப்பாகும்.

எமது பிரதேசங்களில் வளங்களோடு சேர்த்து தமிழ் பேசும் மக்களின் உரிமைகளும் சுரண்டப்படும் நிலையே காணப்படுகின்றது. ஆனால் வடகிழக்கின் தனித்துவத்தினை பாதுகாக்க வேண்டியது தமிழ் பேசும் மக்களின் கடமையாகும்.

இந்த நாட்டைப்பற்றி தேசிய கீதத்தில் 49ஆம் ஆண்டுகளில் இருந்து பாடிக்கொண்டுள்ளனர். தமிழ் மக்கள் அதனைப்பாடுவதற்கு அருகதையற்றவர்களாக்கப்பட்டார்கள். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் குடியேற்றங்கள் மூலம் எமது மண் கபளீகரம் செய்யப்பட்டது. தனிச் சிங்கள சட்டத்தின் மூலம் எமது மொழி பாவனை கட்டுப்படுத்தப்பட்டது.

தமிழ் மொழியை முற்றாக ஒதுக்குவதற்கு சிங்களம் மட்டும் சட்டம்முயன்றது. தரப்படுத்தல் என்னும் நடைமுறை மூலம் தமிழ் இளைஞர்களின் கல்வியை குழப்பியது. இதன் காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து நெருப்பாறுகளை நீந்தி இன்று நல்லாட்சியினை உருவாக்கி அந்த அரசாங்கத்தினை ஏதோவொரு வகையிலே இயக்குபவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் இருக்கின்றோம்.

இந்த பிரதேசத்தில் எங்கள் தனித்துவத்தினையும் மொழியையும் மண்ணையும் காப்பாற்றவேண்டியது மிகமிக முக்கியமான விடயம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அயல்நாடான இந்தியாவினை பாடமாக கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தமிழ் நாடு எவ்வாறு தனது அரசியலை நகர்த்திக்கொண்டுள்ளது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இலங்கையில் தமிழ்வாழவேண்டும் தமிழ் மொழிவாழவேண்டும் என்றால் நாங்கள் தமிழ் நாட்டில் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி போன்ற கட்சியின் பின்னால் நிற்கவேண்டும் என்பதனை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர எந்தவொரு கட்சியும் எங்களது நிலத்தினை எங்களது மொழியினை எங்களது பண்பாட்டினை காப்பாற்றக்கூடிய கட்சி இல்லையென்பது தெரிந்த விடயம். தமிழர்களுக்கான வடகிழக்கு மக்களுக்கான அரசியலை முன்நகர்த்தி செல்லக்கூடிய ஒரேயொரு கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே உள்ளது.

தேசிய கட்சிகளுடன் எமது தலைவர்கள் கடந்த காலத்தில் இணைந்திருந்தார்கள். மிகப்பெரும் தமிழ் தலைவர்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையினத்திற்கு ஏற்பட்ட துன்பியல்களை தடுத்தார்கள். ஆனால் தமிழர்களின் உரிமையினை கேட்டபோது பெரும்பான்மைத் தலைவர்கள் எட்டி உதைத்தார்கள்.

தமிழ் மக்களுக்கு தீங்கான விடயங்கள் வரும்போது அன்று தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ் தலைவர்கள் அவற்றில் இருந்து விலகினர். இவர்கள் எங்களுக்கு உதவமாட்டார்கள் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர் என்றார்.

LEAVE A REPLY