அவர்கள் இருளில் விழித்துக் கொண்டுள்ளார்கள், நாங்கள் ஒளியில் ஆழ்ந்த துயிலில் இருக்கின்றோம்.

0
278

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

Maseehudeen inamullahபோருக்குப் பின்னரான இலங்கையில் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களை குறிவைத்து தீவிரப்படுத்தப் பட்ட கடும்போக்குவாத காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், ஆங்காங்கே தீவிரப்படுத்தப்பட்ட வன்முறைகள் உச்ச கட்டமாக அளுத்கமை மற்றும் நாட்டின் பலபாகங்களில் கட்டவிழ்த்துவிடப் பட்ட வன்முறைகள் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தி இருந்தாலும் நீறு பூத்த நெருப்பு கங்குகளாய் இருக்கின்றமையும் அண்மைக்காலமாக ஆங்காங்கே தீப்பொறிகளாய் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதனையும் நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களினதும், சிறுபான்மை சமூகங்களினதும் வாக்குப் பலம் கணிசமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை தோல்வியைத் தழுவிக் கொண்ட சக்திகளுக்கு இயல்பாகவே சிறுபான்மை சமூகங்கள் மீது ஆத்திரத்தை ஆற்றாமையை ஏற்படுத்தியிருப்பதோடு மீண்டும் ஒரு முறை ஆட்சி அதிகாரத்தைக் குறிவைப்பதற்கு போலித் தேசப்பற்றாளர்களான கடும்போக்கு தீவிரவாதிகளின் தயவை நாட வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போதைய புதிய அரசியல் நிலவரங்களில் கடும் போக்கு தென்னிலங்கை தீவிரவாத கூட்டணி சக்திகளுக்கு இரண்டு பிரதான நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன, முதலாவதாக என்ன விலை கொடுத்தேனும் எத்தகைய தேசிய பிராந்திய சர்வதேசிய சக்திகளின் துணையுடனேனும் ஆட்சி ஆதிகாரத்தைக் கைப்பற்றுவது, இரண்டாவது அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்குவது. எனவே சிறுபான்மை சமூகங்கள் மிகவும் சாதுரியமாகவும்,சாணக்கியமாகவும் எமது நல்லாட்சி நிகழ்ச்சி நிரல்களை காயப்படுத்தாது புதிய களநிலவரங்களை கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

“போக்கிரிகளின் இறுதி அபயம் தேசப்பற்றேனும் போர்வை” என்பது போல் அங்காங்கே பேரினப் பற்றாளர்கள் பட்டாளங்கள் புறப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது, இந்த இன மத வெறியர்களின் பின்னால் பல சர்வதேச சதிகார நாசகார சக்திகள் கவனமாக காய்களை நகர்த்தி வருகின்றமை கடந்த காலங்களில் வெகுவாக உணரப்பட்டது, மேற்படி இரண்டு சாராரும் அவர்களது பரஸ்பர நலன்களை அடைந்து கொள்ளும் வரை ஒரு பொழுதும் ஓய்வெடுக்கப் போவதில்லை.

அவர்கள் இரவு பகலாக தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றோம், எமக்கென ஒரு வலுவான தலைமையும் திட்டமிடலும், நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்பதுவே கவலை தரும் விடயமாகும்.

தீய கடும்போக்கு சக்திகளுக்கு இனம், மதம், மொழி கிடையாது அவற்றை போர்வையாக எடுத்துக் கொள்வார்கள், தத்தமது மனச்சாட்சிகளுடன் முரண்பட்டு செயற்படும் தொகையில் சிறிய அவர்கள் மனிதாபிமானம் அற்றவர்கள்.

அதே போன்றே நல்ல சக்திகளுக்கும் இனம், மதம், மொழி கிடையாது, தத்தமது மனச் சாட்சிகளுடன் முரண்பட்டுக் கொள்ளத் தெரியாத தொகையில் கூடிய அவர்களிடம் பேதங்களற்ற மனிதாபிமானம் மேலோங்கி நிற்கும்.

முன்னையதை இன மத மொழி வரையறைகளுக்குள் நின்று எதிர்கொள்ளும் பொழுது நாம் தோற்று விடுவோம்! தொகையில் சிறியதும், வகையில் சிறுமையும் ஆக உள்ள முன்னவரை, தொகையிலும் வகையிலும் பெரியவர்களான இரண்டாமவரை முறையாக அணுகுவதன் மூலமே இலகுவாக கையாள முடியும்.

ஒவ்வொரு போராட்டத்திற்கும் அதற்கே உரிய ஆயுதங்களும் வழிவகைகளும் இருக்கின்றன, அவற்றைக் கொண்டு நாம் எம்மை பலப் படுத்திக் கொள்ள வேண்டும். மனித மனங்களை வெல்லுகின்ற அழகிய வழிமுறைகளை புறக்கணித்து ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்கள் மூலம் கடும்போக்கு தீயசக்திகளை வெற்றி கொள்ள முடியாது.

அவர்கள் இருளில் விழித்துக் கொண்டுள்ளார்கள், நாங்கள் ஒளியில் ஆழ்ந்த துயிலில் இருக்கின்றோம்.

இலங்கை அரசியல் வரலாற்றில் எல்லா இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அரசியல் சதுரங்கத்தில் பகடைக்கைகளாக அல்லது பலிக்கடாக்களாக மாற்றிவிடுவதில் தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் கவனமாய் காய் நகர்த்தியிருக்கின்றன.

அதற்கான களநிலவரங்களும் கனகட்சிதமாய் தூபமிடப்பட்டு ஏற்படுத்தப் பட்டுமுள்ளன, பின்புலத்தில் இருந்து முஸ்லிம் அரசியல் வாதிகளை பொம்மலாட்டம் ஆடச் செய்து, அல்லது முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்த்து அரசியல் இராஜதந்திர இலக்குகளை அடைந்து கொள்வதில் காலத்திற்குக் காலம் மேற்படி தரப்புக்கள் வெற்றிகண்டுமுள்ளன.

தெளிவான தேசிய சமூக பார்வையும், கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!”

ஹலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்கள், அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் அததனைகும் பின்னால் பாரிய உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் இராஜதந்திர, இராணுவ பின்புலங்கள் இருந்ததனை நாம் அவ்வப்போது சுட்டிக் கட்டினோம், நல்லாட்சி மாற்றத்துடன் அவை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் நீறு பூத்த நெருப்பாக இருப்பதனையும் அவ்வப்போது அதன் கோர முகத்தை வெளிக்கட்டுவதனையும் நாம் அறியாமல் இல்லை.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.

இனவாத மதவாத சக்திகள் எந்த தரப்பில் இருக்கின்றார்கள் என்பதனை விட குறிப்பிட்ட தரப்புக்கள் அத்தகைய சக்திகளை எவ்வாறு கடந்த காலங்களில் கையாண்டார்கள், எதிர்காலத்தில் கையாள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

அம்பையும் ஈட்டியையும் யார் யார் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதே எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.

அரசியல் எதிரிகள் ஒழிந்துவிட வேண்டும் என்று எந்த ஒரு சமூகமும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் எல்லா கள நிலவரங்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளில் ஆரோக்கியமான அரசியல் நகர்வுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.

இந்த நாட்டின் அமைதியிற்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்தியிற்கும் முஸ்லிம்கள் செய்த வரலாற்றுப் பங்களிப்புக்கள் மகத்தானவை, கொடுத்துள்ள விலையும் மதிக்க முடியாதவை, சர்வதேச பிராந்திய சக்திகளின் தேவைக்காக உழைக்கும் கூலிப்படைகளை, அரசியல் இராஜ தந்திர சதுரங்கத்தில் முஸ்லிம்களை பகடைக் காய்களாக பாவிக்க விரும்புகின்ற சக்திகளை முறியடிப்பதில் நாம் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.

கடந்த ஓரிரு தசாப்தங்களாக தேசிய அரங்கில் எங்களை நாங்களே தனிமைப் படுத்தி பிழையான பிம்பங்களூடாக காட்சிப் படுத்தியிருக்கின்றோம், இந்த தேசத்தின் பிரிக்கமுடியாத கூறாகவும் ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சமூகம் என்ற வகையிலும் நாம் கால மாற்றங்களின் பகைப்புலனில் சரியான பரந்துபட்ட பரிமாணங்களில் எங்களை ஏனைய சமூகங்களின் பார்வையில் காட்சிப்படுத்த தவறி இருக்கின்றோம்.

இந்த தேசத்தின் தேசப்பற்றுள்ள சமத்துவமிக்க பிரஜைகள் என்ற வகையிலும், மானுட நேயத்தின் மகத்தான தூதினை சுமந்தவர்கள் என்றவகையிலும், குறுகிய இன மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் எமது தேசிய, அரசியல் சமூக பொருளாதார வாழ்வில் முஸ்லிம் சமூகத்தை சரியான தளத்தில், சரியான பரிமாணங்களில், நிலை கொள்ளச் செய்வதற்கும் குறைந்த பட்சம் எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திற்கான மனித நேய மூலோபாய திட்டமிடலை இன்றைய புத்திஜீவிகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கின்ற முஸ்லிம்கள் காட்டு தர்பார் நடத்த விரும்புகின்ற எந்த சக்தியிற்கும் அஞ்சி வாழப் போவதில்லை, ஜனநாயக மரபுகளை மதிக்கும் முஸ்லிம் சமூகம் எந்த வொரு நெருக்கடியான கால கட்டத்திலும் வன்முறையை நாடியதுமில்லை, இனியும் அதற்கான தேவை எமக்கு இல்லை, இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற சக்திகளுடனும் கைகோர்த்து குறுக்கு வழியில் கோலோச்ச விரும்புகின்ற சக்திகளை தோற்கடிப்போம் இன்ஷா அல்லாஹ்.

LEAVE A REPLY