நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெத்தினம் குற்றச்சாட்டு

0
177

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

8391c1cf-7a14-4ca4-8b04-d687054ccf80மத்திய அரசினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிப் பகிர்வில் தமிழ் – சிங்கள பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக புதன்கிழமை 08.06.2016 அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேலும், மத்திய அரசாங்கத்தின் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் கடந்த மாதம் குழுவொன்று கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்து தமிழ் சிங்கள வைத்தியசாலைகளை புறக்கணித்து நிதி ஒதிக்கீடு செய்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசின் நிதிப் பகிர்வுக்கு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஒரு வைத்தியசாலை கூட தெரிவாகவில்லை.

2016 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசாங்கத்தால் கிழக்கு மாகாண சுகாதரத்துறைக்கு 10 ஆயிரத்து 633 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 90 வீதத்துக்கு மேற்பட்ட நிதி முஸ்லிம் பிரதேச வைத்தியசாலைகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பிரதேச வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படக் கூடாது என்று நான் கோரவில்லை. ஆனால் தமிழ் சிங்கள வைத்தியசாலைகள் மத்திய அரசினால் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குறிப்பாக நிதி ஓதுக்கீட்டை பொறுத்த வரையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை 607.6 மில்லியன் கிண்ணியா 2.501.00 மில்லியன், மூதூர் 1379.78 மில்லியன் தோப்பூர் 430.16 மில்லியன் மொத்தம் 4.927.54 மில்லியன்.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை 970.77 மில்லியன் ரூபாய், பாலமுனை 333.66 மில்லியன் அட்டாளைச்சேனை 110.53 மில்லியன் தெய்யத்தகண்டி 1.012.05 மில்லியன் திருக்கோவில் 437.95 மில்லியன் பொத்துவில் 906.62 மில்லியன் ஒலுவில் 130.55 மில்லியன் மருதமுனை 361.39 மில்லியன் மத்திய முகாம் 325.14 மில்லியன் இறக்காமம் 189.06 மில்லியன் மகாஒயா 865.98 மில்லியன் கல்முனை 62.54 மில்லியன் மொத்தமாக 5.706.25 மில்லியன் ஆகும் .

இந்த நிதியை பொறுத்த வரையில் கிழக்கு மாகாண சுகாதார துறையில் கீழுள்ள வைத்தியசாலைகளை தெரிவு செய்வது மாகாண சுகாதார அமைச்சும், திணைக்களமும் ஆகும். இந்த தெரிவில் தமிழ், சிங்கள வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும்போது குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம் பற்று, மொரவௌ தம்பலகாமம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி மற்றும் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பிட்ட சிங்கள பிரதேசங்கள், தமிழ் பிரதேசமான ஆலையடிவேம்பு, காரைதீவு, வீரமூனை போன்ற பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த ஒரு பக்க சார்பான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்குள் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சேர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பக்க சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது மாகாண சபையில் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் செயலாகும்.

இப்படிப்பட்ட ஒரு பக்க சார்பான நிதியை ஒதுக்கி தமிழ் சமுகம் பாதிக்கக் கூடியவாறு மாகாண சபையின் செயல் வடிவம் இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆளும் கட்சியாக இருக்க வேண்டுமா? இரண்டு தமிழ் அமைச்சர்களும் அமைச்சரவையில் இருக்கும் போது இவ்வளவு அநீதிகள் தமிழ் சமூகத்துக்கு நடந்தால் இந்த அமைச்சு கதிரை எமக்கு தேவையா ?

மாகாண சபை உறுப்பினர்களை பொறுத்த வரையில் சில அமைச்சு நிதி தொடர்பாக எந்த ஆலோசனைகளையும் கூறுவதில்லை மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் கூட இது விவாதிக்கப்படுவதில்லை.

மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் நிதி ஒதிக்கீட்டில் கிழக்கு மாகாணசபை ஆளும் தரப்பிற்குள் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துமானால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மட்டுமின்றி நேரடியாக தமிழ் சிங்கள சமூகம் பாதிப்படையும் செயலாகும்

எனவே இந்த நிதி கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சோ அல்லது ஆளுனரோ அல்லது அமைச்சரவையோ நிதிப்பிரிவோ, திட்டமிடல் பிரிவோ மீள்பரிசீலனை செய்யவேண்டும். இந்த நிதி ஒதுக்கீடு மீள் பரிசீலனை செய்யப்பட்டு நல்ல முறையில் 3 இனங்களும் எல்லா பிரதேசங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஏதுவாக நிதி ஒதிக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த நிதி ஒதுக்கீட்டால் தமிழ் சமூகம் பாதிக்கப்படுமானால் நாங்கள் ஆளும் கட்சியில் இருப்பதா அல்லது எதிர் கட்சியில் இருப்பதா என்பதை பரிசீலனை செய்ய வேண்டிவரும் .

எனவே கிழக்கு மாகாணசபை அமைச்சரவையும் ஆளுனரும் இதற்கான நடவடிக்கையை எடுத்து தமிழ் சிங்கள சமூகம் பாதிக்கப்படாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் ஆர். துரைரெட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY