வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறி ஊருக்கு வந்தவர் சரமாரியான கோடாரித் தாக்குதல்: நால்வர் படுகாயம்; சந்தேக நபர் கைது

0
128

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

crime dமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஐயங்கேணிக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் நபரொருவர் சரமாரியாக மேற்கொண்ட கோடாரித் தாக்குதலில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை குடும்பத்தவர்கள் மீது கோடாரித் தாக்குதலை மேற்கொண்ட நபர் சம்பவம் நடைபெற்ற திங்கட்கிழமையன்று இரவே கைது செய்யப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோடாரித் தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயமடைந்திருந்த ஏறாவூர் ஐயங்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த எஸ். சீனித்தம்பி (வயது 70), வெள்ளம்மா (வயது 40), ஞானசேகரன் (வயது 35) மற்றும் சிந்துஜன் (வயது 21) ஆகிய நால்வரும் முன்னதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

கோடாரித் தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஏற்கெனவே தமது உறவினர்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியிருந்தார் என்றும் கிராமத்துக்குள் வந்து சேர்ந்தவர் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை பார்த்து சரமாரியான கோடாரித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY