ஜப்பானில் முகாமிட்டுள்ள கடற்படை வீரர்கள் மது அருந்த அமெரிக்கா தடை

0
106

imageஓகினாவா தீவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கடேனா என்ற கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்கள் உள்பட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என சுமார் 35 ஆயிரம் அமெரிக்கர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தளத்தில் பணியாற்றும் அமெரிக்க படையினரில் சிலரால் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கடற்படை தளத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ஓகினாவா கவர்னர் மற்றும் அங்கு வசித்துவரும் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை வீரர்களில் ஒருவரான ஐமி மேஜியா(21) என்பவர் நேற்று சாலை விதிகளை மீறியவகையில் எதிர்திசையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்று அவ்வழியாக வந்த இன்னொரு காரின்மீது நேருக்குநேராக மோதினார். இதில் எதிரேவந்த காரில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்தின்போது ஐமி மேஜியா குடிபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டிய ஓகினாவா போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், ஓகினாவா தீவில் உள்ள கடேனா கடற்படை தளத்தில் முகாமிட்டுள்ள 18,600 கடற்படை வீரர்கள் இனி மது அருந்த கூடாது என ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையகம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, ஜப்பான் நாட்டில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தின் உயரதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ‘ரியர் அட்மிரல்’ மாத்யூ கார்ட்டர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல ஆண்டுகளாக ஜப்பானுடன் நாம் பலமான நட்புறவை கடைபிடித்து வருகிறோம்.

இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை நமது செயல்கள் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என ஒவ்வொரு கடற்படை வீரரும் எண்ணிப்பார்க்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், பணியில் இருக்கும் 18 ஆயிரத்து 600 கடற்படை வீரர்கள் மது அருந்தவும், அத்தியாவசியப் பணிகளுக்காக அன்றி கடற்படை தளம் முகாமை விட்டு வெளியே செல்லவும் அவர் தடை விதித்துள்ளார்.

LEAVE A REPLY