உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கென்று 25 சதவீதம் ஒதுக்கீடு: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0
186

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

f00f4004-01ca-4bf4-8fb6-220a5ee3c20bநாங்கள் ஒரு புதிய சவாலை எதிர்நோக்க இருக்கின்றோம். எங்களுடைய நாட்டில் பிரதமர் ஒரு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து இருக்கின்றார். உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கென்று 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படப் போகிறது என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற ஆசிரியையும் பன்னூலாசிரியருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதின் ஆறாவது வெளியீடான “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (04) தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மண்டபத்தில் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த சபையைப் பார்க்கின்ற போது சகோதரி ஸக்கியா சித்தீக் பரீத் சம்பாதித்து வைத்திருக்கின்ற இந்த கூட்டம் உண்மையில் அவருடைய ஆளுமைக்கு ஒரு சான்று. ஆளுமையின் முக்கியமான ஓர் அம்சம் அவருடைய இந்த நூல் மாத்திரமல்ல, அவருடைய மனிதப் பண்புகள். ஒரு களஞ்சியமாக வெளிவந்திருக்கின்ற இந்த நூல் பலருக்கும் பயன்தரக் கூடிய நூல்.

இப்போது உள்ள போட்டிப் பரீட்சைகள் எல்லாவற்றிலும் முக்கியமாக பொது அறிவு என்பது ஒரு முக்கியமான பரீட்சை. நிறையப் போட்டிப் பரீட்சை, அரச பரீட்சைகள் என்பனவற்றுக்கு பொது அறிவு என்பது மிக முக்கியமானது. அவர் தொகுத்திருக்கின்ற விடயங்கள் நாம் எவ்வளவுதான் கற்றிருந்தாலும், தெரிந்திருந்தாலும் நாம் தெரியாத எவ்வளவோ விடயங்களை அதில் சொல்லியிருக்கின்றார் என்று சற்று நூலை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிகிறது. எனவே இந்த முயற்சி பாராட்டக் கூடியது. அதற்காக அவரை வாழ்த்துகின்ற அதேவேளை, அவருடைய படைப்பாற்றல் வெறும் தொகுப்புக்களாக, களஞ்சியங்களாக தயாரித்தவை மாத்திரமல்ல, அவர் நல்லதொரு படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார்.

அவருடைய முன்னைய படைப்புக்கள் சிறுகதைகளாக, கவிதைகளாக வெளி வந்திருக்கிறது முக்கியமான ஒரு விடயம். எனவே அதை கொண்டாடுகிற தினமாக, படைப்பாற்றலைக் கொண்டாடுகின்ற ஒரு வைபவமாக இந்த வைபவத்தை நான் பார்க்கிறேன்.

இந்த வைபவத்தில் இந்த சபை நிறைந்திருக்கின்றவர்களைப் பார்க்கின்ற போது, இந்த நாட்டிலே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பெற்றோர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் வைத்திருந்தார்கள். ஏனென்றால், அது மத மாற்றத்துக்கு பயப்பட்ட காலம். காலணித்துவ ஆட்சியின் ஆரம்ப கால கட்டத்திலே இருந்த பீதி பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்கிற நிலவரம். ஆனால் இப்போது அதெல்லாம் தலைகீழாக மாறி இன்று பெண்கள்தான் ஆண்களை விடவும் கல்வித்துறைகளிலே முன்னேறி வருகிறார்கள் என்பதற்கு நிறைய தரவுகள், தகவல்கள், சான்றுகள் என்று நிறைய வே இருக்கின்றன.

கொழும்பு சட்ட பீடத்தில் எனது மகள் படிக்கிறார். இன்று ஒரு வைபவம் நடக்கிறது. நான் எனது மகளிடம் கேட்டேன். உங்கள் சட்ட பீடத்தில்  எத்தனை ஆண்கள் படிக்கின்றார்கள் என்று. மொத்தம் 167 பேர் அதில் 22 ஆண்கள் என்று அவர் சொன்னார். இது சட்ட பீடத்தில் உள்ள நிலவரம். சட்டக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.

மருத்துவக் கல்லூரியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். எல்லா இடங்களிலும் பெண்கள் கல்வித்துறைகளில் காட்டுகின்ற ஈடுபாடு அபரிமிதமானது. மிகப் பெரிய யுக மாற்றமொன்று ஏற்பட்டு மிகப் பெரிய ஏற்றத்தாழ்வை இன்று சமூகத்திலே ஏற்படுத்தி வருகிறது. எனவே அது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஏனென்றால், ஆரம்ப கட்டத்திலே பெண்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வைத்திருந்த சமூகம் இன்று தலைகீழாக மாறி வித்தியாசமாக பெண்களுடைய முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறது.

ஆனால், அரசியல்வாதியான எனக்கு இருக்கின்ற ஒரு குறைபாடு பெண்களை அரசியலுக்கு எடுப்பது சரியான கஷ்டம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில். ஏனென்றால் இப்போது நாங்கள் ஒரு புதிய சவாலை எதிர்நோக்க இருக்கின்றோம். எங்களுடைய நாட்டில் பிரதமர் ஒரு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து இருக்கின்றார். உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கென்று 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது முதற்கட்டமாக செய்யப்படுகிறது. ஏனென்றால் பெண்களை அரசியலுக்குக் கொண்டு வருவது கஷ்டம். அரசியலில் கொஞ்சம் அடி தடி நடக்கலாம் என்ற காரணத்தினால் அரசியலுக்கு வருவது குறைவு. மற்ற கட்சியிலும் ஏன் தேசிய கட்சியிலும் இப்படித்தான்.

மேலைத் தேய நாடுகளுக்குப் போனால் பெண்களுக்கு நாங்கள் அரசியலில் இடம் கொடுப்பதில்லை என்ற மாதிரி எங்களைக் குறை சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பெண்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்ற ஒரு சிக்கல் உள்ளது.

எனவேதான் எங்களது பிரதமர் வலுக்கட்டமாய உள்ளூராட்சிச் சபைகளில் இப்போது பெண்களுக்கு 25 சதவீதம் நாங்கள் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தேர்தலுக்கு நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உள்ளூராட்சி சபைகளில் எல்லாவற்றிலும் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற தங்களது ஆசனத் தொகைக்கு ஏற்ப 25 சதவீதம் மேலதிகமாக ஆசன ஒதுக்கீடு பெண்களுக்கு செய்கின்ற நிலவரம் இப்போது ஏற்படப் போகின்றது. அதுக்கு பெண்களை முன்னுக்கு எடுப்பது எங்களைப் போன்ற கட்சிக்கு மிகவும் சிரமான காரியமாக இருக்கின்றது.

எனவே இந்த புது யுக மாற்றத்துக்கு பெண்கள், தாய்மார்கள் தயாராக வேண்டும். இன்று தொண்டர் பணிகளில் பெண்கள் தாராளமாக ஈடுபடுகின்றார்கள். வை.எம்.எம்.ஏ அமைப்பு ஆரம்பித்து ஒரு சில காலங்களுக்குள் வை.டபிள்யு.எம்.ஏ அமைப்பு வந்துவிட்டது. வை.டபிள்யு. எம். ஏ அமைப்பு வந்து மிக வேகமாக இப்போது வளர்ந்து வருகிறது. அது மட்டுமல்ல, பல இடங்களில் பார்க்க முடிகிறது பெண்கள் அமைப்புக்களுடைய தொண்டர் பணி என்பது மிக முக்கியமான பரிமாணமாக எங்களுடைய சமூகத்திலே மாறி இருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒரு விடயம். புதிய ஒரு யுக மாற்றம், இது சம்பந்தமாக குறிப்பாக முஸ்லிம் சமூகம் பெருமை கொள்ள வேண்டும். இந்த கருத்துக்களை சபையிலே நிறைந்திருக்கின்ற இந்த தாய்மார்கள் சகோதரிகளோடு பகிர்ந்து கொள்வது நல்ல பயனுள்ள விடயமாக இருக்கும்.

சகோதரி ஸக்கியா சித்தீக் பரீத் தற்போது ஊடகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். ஊடகப் பணி அவருக்கு புதிய விடயமல்ல. நவமணி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றி தன்னால் முடியுமானதை ஊடகத்துறைக்கு செய்து கொண்டிருக்கிறார் என்பது சந்தோஷத்துக்குரிய விடயம் என்றார்.

இந்நிகழ்வு நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் ஆதில் – அலி சப்ரியின் கிராத்தோடுஆரம்பமானது. வரவேற்புரை மற்றும் நூல் அறிமுகவுரையை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம். அமீர் ஹுசைனும், தலைமையுரையை ஜம்மியத்துஷ்ஷபாப் உதவிப்பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவருமான தேசமான்ய மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் (கபூரி)யும், வாழ்த்துரையை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கவி வாழ்த்தினை நவமணி ஆசிரியர் பீட சிரேஷ்ட உறுப்பினர் காவ்யாபிமானி தாஜுல் உலூம் கலைவாதி கலில் மற்றும் கவிதாயினி நூருல் அய்ன் நஜ்முல் ஹுசைனும் கருத்துரையை வைத்தியக் கலாநிதி தாஸிம் அஹமதும் நூலாசிரியரின் பேரன் ஆதில் பரீத் விசேட உரையையும், நன்றியுரையை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் எம்.எஸ்.எம். சாஹிர் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்ச்சிகளை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் கியாஸ் ஏ.புஹாரி தொகுத்து வழங்கி விழாவை நிறைவு செய்தார்.

அறிஞர் பெருமக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என பலதரப்பினரும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர். ப்ரீ லங்கா மீடியா பிரைவட் லிமிட்டட்டின் நவமணிப் பத்திரிகை உத்தியோகத்தர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

4bc0c601-92da-46ef-b619-7c8845705660

LEAVE A REPLY