தர்மம் செய்தலும் அதன் சில ஒழுங்குகளும் ஓர் இஸ்லாமிய நோக்கு

0
1624

Tharmamதர்மம் மிகச்சிறப்பான செயல். அல்லாஹ்வின் கோபத்தை தணிக்கும், இடையூறுகளை விட்டும் தடுக்கும். மோசமான மரணத்தை விட்டும் காக்கும். செல்வம் பெறுகுவதற்கான மலக்குகளின் பிராரத்தனை கிட்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும்போது இரு வானவர்கள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாயாக!” என்று கூறுவார்.மற்றொருவர், “இறைவா! (கடமையானவற்றில்கூடச்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக!” என்று கூறுவார் (நூல் ஸஹீஹ் முஸ்லிம்,எ ண் : 1836)

அல்லாஹ் தூய்மையான சொத்திலிருந்து செலவிடப்படுவதை அவன் ஏற்று அதை அபிவிருத்தியும் செய்கின்றான். இதை நபிகளார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது: “அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்றுக்கொள்வான்.யார் தூய்மையான சொத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் “தமது குதிரைக் குட்டியை” அல்லது “தமது ஒட்டகக் குட்டியை” வளர்ப்பதைப் போன்று (நூல், ஸஹீஹ் முஸ்லிம், எண் -1842).

நரகை விட்டும் தடுக்கும் ஒரு கேடயம். அது மிகச்சிறிய அளவிலான தர்மமாக இருப்பினும் சரி.இதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது: “உங்களில் யார் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரக நெருப்பிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள முடியாமானவராக இருக்கிறாரோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்! (நூல், ஸஹீஹ் முஸ்லிம், எண் 1845).

அல்லாஹ்வுக்காக செலவிடும் போது உலோபித்தனம் காட்டாது வாரி வழங்க வேண்டும்.அல்லாஹ் அடியானுக்கு அளிக்கும் போது வாரி அன்பளிப்பாக வழங்குகின்றான். இதற்கென வீண்விரயம் எல்லை மீறல் என்பன அல்ல. இதை நபிகளார் அஸ்மா (ரலி) அவர்களுக்கு உபதேசமாக குறிப்பிடும் போது அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் கிடையாது. அவர் அளிப்பவற்றில் சிலவற்றை நான் தர்மம் செய்தால் அது குற்றமாகுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன்னால் இயன்ற அளவு சிறிதளவேனும் தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தன் அருள் வளங்களைப் பொழியாமல் தனது) பையை முடிந்து வைத்துக்கொள்வான்” (நூல் முஸ்லிம், எண் 1867).

நிழல் கிடையாத மறுமையில் அகிலத்தின் அரசனாகிய அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் கிடைக்கின்றது. இதை ஒரு ஹதீஸில் நபிகளார் குறிப்பிடும் போது. அல்லாஹ் தனது அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

1. நீதி மிக்க ஆட்சியாளர்.

2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன்.

3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்து க்கொள்ளும் இதயமுடையவர்.

4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.

5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை (த் தவறுசெய்ய) அழைத்தபோதும் “நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.

6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.

7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர். (நூல் புகாரி, 660,1423).

இவ்வாறு தர்மத்தின் சிறப்புக்கள் எனும் பட்டியல் நீண்டு செல்கின்றது. இதன் போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்கு விதிகளை பார்ப்பதானது காலத்தின் தேவை.

அனைத்து செயலுக்கும் உள்ளச்சம் கட்டாயம். இது இல்லாது மலையளவு கொடைகொடுத்தாலும் அது அல்லாஹ்விடத்தில் தூசிக்கு நிகராக மாட்டாது. மாறாக அது அவனுக்கு அழிவாகவே திகழும். உளத்தூய்மை பற்றி நபிகளார் குறிப்பிடும் போது. “நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே அமையும் என குறிப்பிட்டார்கள். (நூல். புகாரி முஸ்லிம்).

ஒரு கடுகின் அளவாயினும் அது அல்லாஹ்வுக்காக அளிக்கப்படல் வேண்டும். அதை கொடையாக பெற்றவர் தூற்றிவிட்டு சென்றாலும் அது அல்லாஹ்வுக்கென அளிக்கப்படும் போது அது பாரிய நன்மையை தரக்கூடியது. மனிதர்களின் புகழாரம், முகஸ்துதி, பிரபல்யம் ஆகியவைகளை விட்டும் நீங்கியது கொடை. இதற்கு மாற்றமானது இம்மையில் உயர்வாயினும் மறுமையில் முடிவுறா அழிவு.

அளிக்கப்படும் கொடை சிறந்ததாகவும், ஹலாலானதாகவும் இருத்தல் வேண்டும். ஹராமானமுறையில் ஈட்டியவை, மிகவும் பாவனைக்கு உதவாத அற்பமானவைகள், போன்றவற்றை விட்டும் நீங்கி நல்லதை கொடுத்தல் வேண்டும்.

தனது விருந்தினருக்கு தனக்கு மாத்திரம் பிரத்தியேகமான, போதுமான உணவு இருந்த போது அதை விருந்தினருக்கு கொடுத்ததையிட்டு அல்லாஹ் குர்ஆனில் சிலாகித்து குறிப்பிட்டுளான்.

ஒரு விசுவாசி தனக்கு விரும்புவதையே பிற முஸ்லிமுக்கும் விரும்புவான். இது விசுவாசத்தின் பண்புகளில் ஒன்று. இன்னும் சிறந்த பொருளை தர்மம் செய்யும் போதுதான் நன்மையும் கிட்டுகிறது.

அல்லாஹ் குறிப்பிடும் போது “நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(3:92).

இன்னும் அல்லாஹ் குறிப்பிடும போது நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். (2:267).

தர்மத்தை அழிக்கும விடயங்களை விட்டும் தன்னை பாது காத்தல், சொல்லிக்காட்டல், கிண்டல் செய்தல், துன்புறுத்தல், கொடைக்கு பின்னராக அவரிடமிருந்து அவர் விரும்பாத ஒன்றை அடைய வழிச்செய்தல் என இதன் வடிவங்கள் வகைப்படும்.

அல்லாஹ் குறிப்பிடும் போது. “நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த (தர்மத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை”.(2:264).

ஆகவே தர்மத்தின் போது அதை பெறுபவர் எவ்வித அசெளகரியங்களுக்கும் ஆளாகாதவகையில் அமைதல் மிக முக்கியமானது. இதற்கு மாறாக இன்றைய சில காட்சிகள் ரமழான் அடைந்து விட்டால் சில பணக்கார்களை காணமுடியாது. அல்லது அவர்களக்கு பின் ஏழைகள் அடிமைகள் போல் இறங்கு வரிசையில் வேகாவெயிலில் காலை முதல் மாலை வரை கால் கடுக்க காத்து நிற்கும் நிலையும்,கேட்டு வருபவருக்கு ஏதோ ஓரிரு காசிகளை வீசி விடுவதும். அதன் பின் ஏழைகளின் கண்ணீர்கள் பணக்காரர்களின் செல்வத்தினை கரைத்து விடுவதையும் காணலாம்.

இத்தகைய நிலையும் போட்டோ பிரதிகளின் எண்ணிக்கையும், கெமராக்களின் வெளிச்சங்களும் பல தேவையுள்ள ஏழைகள் தாம் மறித்தாலும் இத்தகைய அவலம் வேண்டாம் என மறைந்து வாழ துணை நிற்கிறன. இந்நிலைகள் மாற வேண்டியது காலத்தின் தேவை.

தர்மத்தின் போது தேவையிருந்தும் கேட்காது மறைந்து வாழ்பவரை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அளிகப்படல் வேண்டும். அல்லாஹ் இவர்களைப்பற்றி குறிப்பிடும் போது “ பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும்.

(பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்”.(2:273)

மறைவாக கொடுப்பதானது மிகப்பெரிய கொடையாகும். வெளிப்படையாக கொடுப்பதன் மூலம் ஏழைகளுக்கு பயனளிக்கும் போது அதை கொடுப்பதானது குற்றமில்லை. அல்லாஹ் குறிப்பிடும் போது “தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்”. (2:271)

உறவில் மிக அண்மித்தவர்களை முதன்மைப்படுத்தல்,இதன் பின் அடுத்த கட்ட உறவினர் என தனக்கு நெறுங்கியவர்களை முதன்மைப்படுத்தல், இதற்கு மாற்றமாக உறவினர்கள் தேவையுடைராக இருக்க ஊருக்கு செய்வதானது சிறந்ததல்ல. இன்னும் மரணத்தின் இறுதி வேளையை அடையுமுன் தர்மஙகள் செய்யப்படல் வேண்டும்.

அல்லாஹ் இதைப்பற்றி குறிப்பிடும் போது. “உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (63:10).

இவ்வுலகம் இதில் உள்ளவை அனைத்தும் சொதனையாகும், மிகவும் இழிவானவையுமாகும் அழிந்து போக்க்கூடியது. அழித்து விடக்கூடியது. இதன் யதாரத்தம் மரணத்தருவாயில் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்தே தீர வேண்டும். இதன் போது ஒன்றோ மகிழ்வு அல்லது கைசேதம். இது இவ்வுலக வாழ்க்கை முறையின் பெறுபேறு.

இன்னும் பிறரிடம் கேட்காது தன்மானத்துடன் தனக்கு போதுமானதை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதானது சிறப்பானது. எடுக்கும் கரத்தை விட கொடுக்கும் கரம் உயரந்தது. இதை நபிகளார் குறிப்பிடும் போது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி தர்மம் செய்வது, பிறரிடம் கையேந்தாமல் தன்மானத்துடன் இருப்பது ஆகியவற்றைப் பற்றி உபதேசித்தார்கள். அப்போது “மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக்கூடியதும், கீழ் கை என்பது யாசிக்கக்கூடியதும் ஆகும்” என்று குறிப்பிட்டார்கள். (நூல் முஸ்லிம், எண் 1872).

உண்மையில் வாழ்க்கையில் சொகுசுகள் உயர்வதும் ஆடம்பரத் தேவைகளுக்கான வசதியும் தான் செல்வமல்ல மாறாக போதுமென்ற எண்ணம் மிகப்பெறிய சொத்து.

இதை நபிகளார் குறிப்பிடும் போது “வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். (நூல் முஸ்லிம், எண் 1898).

இன்னும் நபிகளார் குறிப்பிடும் போது யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். (நூல் முஸ்லிம்,எண் 1903).

மகத்தான ரமழானில் தர்மத்தின் போது இஸ்லாமிய ஒழுங்குகளை பேணி இஸ்லாமிய குடும்பத்தினை கட்டியெழுப்புவதுடன். இம்மாதத்தில் அல்லுற்றவர்களின் கண்ணீர் துடைக்கும் நல்லுள்ளம் படைத்தவர்களாக திகழ அல்லாஹ் துணைபுரியட்டும்.

ஆக்கம்: அபூ உமர் அன்வாரி (BA – மதனி)

LEAVE A REPLY