ஏறாவூர் சிறுமிகள் கடும் சித்திரவதை: சிறிய தகப்பனும் கைது

0
25

(அப்துல்லாஹ்)

20160601_145802சிறுமிகள் இருவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர்  நேற்று (04) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுமிகளின் சிற்றன்னை (48 வயது) ஏற்கெனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு 4 மாத கைக்குழந்தை இருப்பதன் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சகோதரிகளான சிறுமிகள் இருவர் கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை 01.06.2016 ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையுடன் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின்படி தமது சிற்றன்னையின் கணவரும் தமக்கு தொடர்ந்து பல்வேறான தாக்குதல்களையும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் இழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தேநீருக்குள் உப்புக் கலந்தும் உணவில் உண்ணமுடியாதளவுக்கு மிளகாய்த் தூள் கலந்தும் தந்ததோடு நடு நிசிகளிலும் தங்களை நித்திரையிலிருந்து அடி, ஆக்கினைகள் மற்றும் சூடு வைத்து எழுப்பி வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணித்ததாகவும் கூறியுள்ளனர்.

சகோதரிகளான 8 வயது மற்றும் 10 வயதுடைய சிறுமிகள் இருவர் வீடொன்றில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக ஏறாவூர் சிறுவர் நன்நடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஏறாவூர் நகரிலுள்ள குறித்த வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகளைப் பரிசோதித்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுவருவதற்கான உடற் தழும்புகளுடன் புதன்கிழமை 01.06.2016 சிறுமிகளை மீட்டனர்.

இந்த சிறுமிகள் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் தாய் வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். தந்தை அவரது தாயுடன் பொலன்னறுவையில் வாழ்ந்து வருகின்றார். தாய் வெளிநாடு செல்லும்போது இந்தச் சிறுமிகளை சிற்றன்னையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY