வயிற்றுவலி… மூன்று முக்கியக் காரணங்கள்!

0
806

வயிற்றுவலி… மூன்று முக்கியக் காரணங்கள்!

GFI59gttva1. வயிற்றுப் புண்
அல்சர் என்னும் வயிற்றுப்புண், இப்போது மிகவும் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அல்சர் ஏற்பட, ஹெச்.பைலோரி (H.pylori) என்னும் பாக்டீரியா கிருமித் தாக்குதல், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், வலி மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவது போன்றவற்றை காரணங்களாகச் சொல்லலாம். சிலருக்கு சாப்பிட்டதும் வலி ஏற்படும்.

சிலருக்குச் சாப்பிடாமல் இருந்தால் வலி உண்டாகும். அதனை எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிகிச்சையாக மாத்திரை, மருந்துகள் வழங்கப்படும். ஆனால், வயிற்றுவலிக்கு பல காரணங்கள் இருக்கும்போது, பலரும் தாங்களாகவே ‘எனக்கு அல்சர்’ என்று மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது… பிரச்னையை இன்னும் அதிகமாக்கு வதோடு கிட்னி பாதிப்பு வரை ஏற்படுத்தலாம்.

2. குடல் வால்
குடல் வால் (Appendix) என்பது, மனித உடலின் ஓர் உறுப்பு. அதில் தொற்று ஏற்படும்போது, அது அப்பன்டிசைட்டிஸ் (Appendicitis) பிரச்னையாக மாறுகிறது. இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும், 10 – 25 வயதினருக்கு அதிக அளவில் வரக்கூடும். அதிகமான வயிற்றுவலி, காய்ச்சல், நடந்தாலோ இருமினாலோ வலி உண்டாவது போன்றவைதான் அறிகுறிகள். உறுதி செய்ய, ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், சி.டி.ஸ்கேன் செய்துகொள்ளாலாம். இதற்கான ஒரே சிகிச்சை என்பது, அந்தக் குடல் வாலை நீக்குவது. ஓபன் அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபி மூலம் அதை நீக்கலாம். வலி ஏற்பட்டதும் அதை நீக்காமல்விட்டால், அது பெரிதாகி, வெடித்து, சீழ்பிடித்து உயிரிழப்பு வரை ஏற்படுத்தலாம்.

3. பித்தப்பை கற்கள்
பித்தப்பையில் கற்கள் ஏற்பட்டு பிரச்னை கொடுக்கும் பட்சத்தில், அதை மொத்தமாக நீக்கவேண்டியது அவசியம் (பித்தப்பை, உயிர் வாழ அவசியமான உறுப்பு என்பதெல்லாம் இல்லை). அப்படி நீக்காமல் விடும்பட்சத்தில், மஞ்சள்காமாலை, கணையக்கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்புவரை அழைத்துச் செல்லக்கூடும். பித்தப்பையில் கற்கள் இருக்கிறதா என்பதை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலமாகக் கண்டறிந்து, ஓபன் அறுவை சிகிச்சை அல்லது லேப்ரோஸ்கோபி மூலமாக உடனடியாக நீக்கிவிடலாம்.

பெண்களைப் பொறுத்தவரையில் கருத்தரித்த நேரத்திலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்திலும் பித்தப்பையில் பாதிப்புகள் வரக்கூடும். தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பித்தப்பைக் குழாயில் கற்கள் இருக்கும்பட்சத்தில், அல்ட்ரா சவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாக அதைக் கண்டறிந்து உறுதிசெய்து, எண்டோஸ்கோபி சிகிச்சை (ERCP)யின் மூலமாக முழுவதுமாக நீக்கிவிடலாம்.

LEAVE A REPLY