ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் மந்திரிக்கு 16 ஆண்டு சிறை

0
120

201606040957195102_Former-minister-to-16-years-in-prison-on-corruption-charges_SECVPFபாகிஸ்தானில் 2010-2012 ஆண்டுகளில் நடந்த ஹஜ் புனிதப்பயண ஊழல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்காவில் புனிதப்பயணிகள் தங்குவதற்கு தரம் குறைந்த கட்டிடத்தை மிக அதிக வாடகைக்கு எடுத்து, அதன் மூலம் லஞ்சம் பெற்று, அரசு கஜானாவுக்கு பெரும் நிதி இழப்புக்கு வழிவகுத்ததாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் யூசுப் ராஸா கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசில் மத விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்த ஹமித் சயீத் காஸ்மி (வயது 56) உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி எப்.ஐ.ஏ. என்னும் மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனரும், தற்போதைய பஞ்சாப் போலீஸ் கூடுதல் ஐ.ஜி., உசேன் அஸ்கார் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

அதைத் தொடர்ந்து ஹமித் சயீத் காஸ்மி உள்ளிட்டவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹமித் சயீத் காஸ்மி கைது செய்யப்பட்டார். இதனால் பதவி இழந்தார்.

காஸ்மி உள்ளிட்டவர்கள் மீது இஸ்லாமாபாத் கோர்ட்டில் 2012-ம் ஆண்டு, மே 30-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்து வாதிட்டார்.

இந்த வழக்கில் 60 சாட்சிகள் அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், ஹமித் சயீத் காஸ்மி மீதான ஊழல் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிமன்றம், அவருக்கு 16 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் அதுபற்றிய தகவல்கள் நேற்றுதான் வெளியாகின.

இதே வழக்கில் மத விவகாரங்கள் துறையில் தலைமை இயக்குனர் பதவி வகித்த ஹஜ் ராவ் ஷகீல் என்பவருக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த துறையின் இணைச்செயலாளர் பதவியில் இருந்த அப்தாப் அஸ்லத்துக்கு 16 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஹஜ் ராவ் ஷகீல் ஏற்கனவே காவலில்தான் உள்ளார்.

நீதிபதி தனது தீர்ப்பை வழங்கிய உடன் கோர்ட்டு வளாகத்தில் வைத்து ஹமித் சயீத் காஸ்மியும், அப்தாப் அஸ்லமும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் அதியாலா சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டனர்.

தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் மந்திரி ஹமித் சயீத் காஸ்மி, தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்து வந்தவர். இதன்காரணமாக 2009-ம் ஆண்டு அவரை கொல்ல தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதில் அவர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY