வெனிசுலாவில் உணவு கேட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்மீது கண்ணீர் புகை பிரயோகம்

0
92

201606031305335144_Teargas-fired-at-Venezuela-food-protest-near-presidential_SECVPFதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சுமார் மூன்றுகோடி மக்கள் வாழ்கின்றனர். எண்ணெய் வளம் மிகுந்த நாடான வெனிசுலாவின் அதிபராக நிகோலஸ் மடுரோ பதவி வகிக்கிறார்.

சர்வதேச அளவில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெனிசுலாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் நிறுவனங்களில் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். இதனால் அதிபர் மடுரோ மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மடுரோவின் அரசியல் எதிரியும், எதிர்க்கட்சி தலைவருமான ஹென்ரிக் கேப்ரில்ஸ், பதவியில் இருந்து மடுரோவை நீக்குவதில் தீவிரமாக உள்ளார்.

ஹென்ரிக் கேப்ரில்ஸ்-ஐ ஒரு கருவியாக பயன்படுத்தி தனது ஆட்சியை கவிழ்க்க ஒரு வெளிநாடு சதி செய்வதாக மடுரோ குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஒரு வெளிநாடு என அமெரிக்காவை மறைமுகமாக குறிப்பிட்டார்.

எனவே, அந்த சதியை முறியடிக்க வெனிசுலாவில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அவர் அறிவித்தார். பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் வெனிசுலாவில் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. இதனால், பால், கோதுமை மாவு உள்பட போதிய உணவு கிடைக்காமல் பசியும், பட்டினியுமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் கராகஸ் நகரில் உள்ள அதிபர் நிகோலஸ் மடுரோவின் அதிகாரப்பூர்வ மாளிகையை நேற்று முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையான உணவுக்கு உத்திரவாதம் அளிக்கும்படி அவர்கள் கூக்குரலிட்டனர்.

இந்த அறவழிப் போராட்டம் சற்று எல்லைமீறி வன்முறையாக வெடிக்கும் சூழல் உருவானதால் போராட்டக்காரர்கள்மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டியடித்தனர்.

LEAVE A REPLY