(அவசியம் வாசியுங்கள்) ரக்ஸபான, மல்வான: அந்த திகில் நிறைந்த நாட்களும் எமக்கு உதவியவர்களும்

0
230

Flood Sri Lanka2016 மே மாதத்தின் இறுதிவாரம். கடந்த 27 வருடங்களில் நாம் சந்திக்காத மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு எமது ஊரைச் சூழ்ந்தது. களனி கங்கை நீர்மட்டம் ஊரைக் சுற்றி 10 அடி உயரத்துக்கு மேல் பாய 450 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1700 மக்களை உள்ளடக்கிய எமது பிரதேசம் ஒரு தீவாகத் துண்டிக்கப்பட்டது.

80 வீடுகளுக்கு மேல் நீரில்மூழ்க அவர்கள் ஊரின் நடுப்பகுதியில் இருந்த உறவினர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

யாருக்கும் ஊருக்கு வெளியே செல்ல முடியாத நிலை. மின்மாற்றி நீரில் மூழ்கியதால் மின்சாரம் இல்லை. எனினும் பள்ளி வாசலில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் இருந்தது

50க்கு மேற்பட்ட வியாபார நிலையங்களைக் கொண்ட கடைத் தொகுதி முற்றாக நீரில் மூழ்கியதால் எந்தப்பொருளும் கடைகளில் வாங்க முடியவில்லை.

அரச உதவிகளும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊர் மக்கள் எமது நிருவாக சபையுடன் இணைந்து பாரிய வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

முதல் மூன்று நாட்கள் உயிராபத்து இருந்தும் தூர இடங்களுக்கு நீந்திச் சென்று இயந்திரம் இல்லாத படகில் அரிசி பருப்பு போன்றவற்றை கொண்டு வந்து மூன்று வேளையும் 1700 பேருக்கு மேற்பட்டோருக்கு சமைத்துக் கொடுத்தனர். வெளியிலிருந்து மிகச் சிறியஉதவிகளே கிடைத்தன.

தொடர்ந்தும் நிலைமை மோசமடையத் தொடங்கியது. பயான்கள், அமல்கள் மூலமாகமக்கள் அல்லாஹ்வின்உதவியை கேட்டு பிரார்த்தித்தனர்.

திட்டமிட்ட அடிப்படையில் இயங்காவிட்டால் நிலைமை கைமீறி செல்லும் அபாயம் இருந்ததால் மஷூறா செய்யப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சமையல், தரவு சேர்த்தல் & வெகுசனத் தொடர்பு, பொருட்களைப் பெறுதல், விநியோகித்தல், சுகாதாரம், படகு சேவை போன்றவற்றுக்கு தனித் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

பாதிக்கப் பட்டோர்களின் விபரங்கள், ஊரில் உள்ளோர்விபரங்கள் உடனடியாகத் திரட்டப்பட்டு ஒரே இரவில் கணனி மயப்படுத்தப்பட்டன. பாதிப்புக்கு ஏற்ப சிகப்பு, மஞ்சள், நீல நிற அட்டைகள் வழங்கப்பட்டு விநியோகம் இலகு படுத்தப்பட்டது

செய்தி இணையத் தளங்கள், பேஷ்புக், வட்ஸ்அப் மீடியாக்கள் மூலமாகவும் ஊரின் முக்கியஸ்தர்கள் மூலமாகவும் வெளியில் உள்ளோரிடம் இருந்து உதவிகள் கோரப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ். அடுத்த நாள் முதல், உதவிகள் வந்து குவியத் தொடங்கின.

ACJU, MFCD, Mercy Lanka உட்பட பலநிறுவனங்கள், தாவா அமைப்புக்கள், பள்ளிவாயல்கள், தனிப்பட்டநபர்கள், குழுக்கள் போன்றவற்றிலிருந்து பொருளாகவும் பணமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் வந்துசேரத் தொடங்கின. வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் பல இலட்ச ரூபாய்களை எமது பள்ளிவாயல் கணக்கில் வைப்பிலிட்டனர் .

அமைச்சர் ரிசாட் பதுர்தீன், பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர, பா.உ. மஸ்தான், ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன, NFGG தலைவர் அப்துர் ரஹ்மான் உட்பட பல முக்கியஸ்தர்கள் நேரடியாக வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

பள்ளி வாசலில் 24 மணிநேரமும் வேலைகள் நடந்தன.

சாமத்தில் 2 மணிக்கும் பொருட்கள் படகில் வரும். உடனே தொண்டர்கள் இருட்டில் சென்று ஆழமான நீரில் இறங்கி பொருட்களை சுமந்து பள்ளிக்கு கொண்டு வருவார்கள். உடனடியாக பள்ளி ஏடுகளில் விபரங்கள் பதியப்படும், அடுத்த நாளே உரியவர்களுக்கு வழங்கப்படும்.

மின்சாரம் இல்லாத நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் வெள்ளம் வடியும்வரை ஊரில் உள்ள அனைவருக்கும் மூன்று நேரமும் உணவு வழங்குவதில் சமையலுக்கு பொறுப்பான குழு பலசிரமங்களை எதிர்கொண்டது.

தினமும் இலவச மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன. ஏனைய இனத்தவர்களுக்கும் அச்சேவை விஸ்தரிக்கப்பட்டது.

பொருள் விநியோகக் குழு சரியாகத் திட்டமிட்டு செயற்பட்டதால் தவறான பொருள் விநியோகம்த டுக்கப்பட்டது.

துப்பரவுப் பணித் தொண்டர்கள் கொட்டும் மழையிலும் தியாகத்துடன் வேலைசெய்தனர்.

படகு சேவை செய்தவர்களின் சேவை மெச்சத்தக்கது.

மேலதிகப் பொருட்கள் ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டன. பக்கத்து ஊர்களில் வாழும் ஏனைய இனத்தவர்களுக்கு பொருள் வழங்க விரும்பியவர்களுக்கு எமது பள்ளிவாசலினூடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தற்போது பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்படுகின்றன, கையிலுள்ள பணம் அவர்களுக்கு உரியமுறையில் பிரித்துக் கொடுக்கப்படும்.

கடந்த காலங்களில் ஏனைய இடங்களில் உதவி தேவைப்பட்ட போதெல்லாம் இங்குள்ள சகோதரர்கள் அத்தகைய இடங்களுக்கு உடனடியாக உதவி செய்தனர். அதற்குப் பிரதி பலனாக இத்தகைய உதவிகளை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

பொருளாக, பணமாக உதவியவர்களுக்கும், மருத்துவ சேவை, படகுசேவை, துப்பரவாக்கும் சேவை, சமையல் போன்றவற்றில் தியாகத்துடன் உதவியவர்களுக்கும், எமது வேண்டுகோளை உலகம் முழுக்கக் கொண்டு சென்ற செய்தித் தளங்கள் மற்றும் முகனூல் சகோதரர்களுக்கும் ஏனைய எல்லா வழிகளிலும் உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் எமது ஊர்மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக

இப்படிக்கு
நிர்வாக சபை
ரக்ஸபான ஜும்ஆ பள்ளிவாசல்

LEAVE A REPLY