சிங்களவர்களுக்கு எதிரானதா முதலமைச்சர் விவகாரம் ?

0
150

[எம்.ஐ..முபாறக்]

unnamedஇந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கிவிடக் கூடாது என்றும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும் ஒரு தரப்பு விரும்புகின்றது. மறுபுறம், இனவாதத்தைக் கொண்டே அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றது மற்றொரு தரப்பு. இந்த நாடு மிக மோசமானவற்றைச் சந்தித்ததற்கு இந்த இனவாதம் தான் காரணம். இந்த இனவாதத்தை அதிகமான மக்கள் விரும்பவில்லை என்பது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெளிவாகத் தெரிந்தது.

இனவாதத்தின் ஊற்றான-அதை மாத்திரம் வைத்து அரசியல் செய்யும் மஹிந்தவின் ஆட்சியை இந்த நாட்டு மக்கள் கவிழ்த்ததற்குக் காரணம் அவரது இனவாதம் இந்த நாட்டை அழித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். இருந்தும், அவர் அரசியல் செய்வதற்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மஹிந்தவின் தரப்பால் இனவாதம் பரப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

தமிழர்களுக்குப் பிரச்சினைகள் எழும்போது-அந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்போது-அவர்களின் காணிகள் விடுவிக்கப்படும்போது இனவாதம் கிளப்பப்படுகின்றது.

அதேபோல்,  முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதையும் விட்டுவைப்பதில்லை.அந்த வகையில்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹம்மெட் கடற்படை அதிகாரி ஒருவருக்கு ஏசிய விவகாரம் இன்று இனவாதமாக மாற்றப்பட்டுள்ளதைக் காணலாம்.

முதலமைச்சர் கடற்படை அதிகாரிக்கு இவ்வாறு ஏசிய விடயத்துக்கும் இனவாதத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை. ஆனால்,திட்டமிட்ட அடிப்படையில் அது இனவாதமாக மாற்றப்படுகின்றது. இது ஓர் அரசியல்வாதிக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இடையிலான பிரச்சினை சிங்கள-முஸ்லிம் மக்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. முதலமைச்சர் அநாகரீகமாக நடந்துகொண்டிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும்தான்.

முதலமைச்சர் நடந்துகொண்ட விதத்தில் எங்காவது இனவாதம் இருக்கின்றதா? அந்தப் படை அதிகாரி ஒரு சிங்களவர் என்பதாலா முதலமைச்சர் அவ்வாறு நடந்துகொண்டார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வைத்துத்தான் அது இனவாத செயற்பாடா அல்லது இருவருக்கு இடையிலான பிரச்சினையா என்று முடிவெடுக்க முடியும்.

இதை முதலமைச்சர் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். களத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் எதிரொலிதான் முதலமைச்சரின் அந்த செயற்பாடாகும்.முதலமைச்சர் ஏசுவது போன்ற காட்சியை வைத்துத்தான் இப்போது இனவாதம் பரப்பப்படுகின்றது. அதில் இனவாதாரீதியிலான எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதை அவதானிக்கலாம். அவர் திரும்பத் திரும்பப் பேசுவதெல்லாம் protocol, protocol என்றுதான். அந்த protocol பற்றி அந்த அதிகாரிக்கு எதுவும் தெரியாது என்றுதான் முதலமைச்சர் அதில் சொல்கிறார்.

protocol என்பது அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகளை பதவி நிலையை அடிப்படையாக வைத்து-வகைப்படுத்தி அந்தப் பதவி நிலைக்கு ஏற்ப மரியாதை செலுத்துவதாகும்.அந்த protocol அந்த அதிகாரிக்குத் தெரியவில்லை என்றுதான் முதலைமைச்சர் அந்தக் காட்சியில் கூறுகின்றார்.

பதவி நிலையை அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் கவனிக்கப்படவில்லை-மரியாதை கொடுக்கப்படவில்லை என்பது அந்தக் காட்சியைப் பார்க்கும்போது எமக்குப் புரிகின்றது. தான் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டேன் என்று முதலமைச்சர் பின்பு கூறுவது மேலதிக விளக்கங்களுக்காகும். முதலமைச்சர் அவ்வாறு கூறாமலேயே என்ன நடந்திருக்கின்றது என்பதை அந்தக் காட்சியைப் பார்த்து மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆகவே,முதலமைச்சரின் அந்த வார்த்தைப் பிரயோக்கத்தின்போது எந்தவோர் இடத்திலும் இனவாதக் கருத்துக்களைக் காண முடியவில்லை;மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தையும் காண முடியவில்லை. அவர் எல்லோர் முன்னிலையிலும் அந்த அதிகாரியை ஏசினார் என்பதை மாத்திரம்தான் குற்றச்சாட்டாக முன்வைக்க முடியும்.

உண்மை இவ்வாறு இருக்கும்போது, அது இப்போது இனவாதமாக மாற்றப்பட்டுள்ளது.மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட பௌத்த தேரர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு உண்டு? அதுபோக, அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் நேரடியாக முஸ்லிம்களையே ஏசுகின்றனர்.

மட்டக்களப்பில் முதலமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி மிகவும் மோசமாக முஸ்லிம்களை திட்டித் தீர்த்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அத்தோடு,சிங்கள ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் முஸ்லிம்கள் மீது இனவாதத்தைக் கக்குவதைக் காணலாம்.

இவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி. இலங்கை வரலாற்றில் படையினருக்கும் பொலிசாருக்கும் ஞானசார தேரர் ஏசியது போன்று எவராவது எசியதுண்டா? எலும்புத் துண்டுகளுக்காக அலைகின்ற நாய்கள் என்று பொலிசாரை ஏசியதை மறக்க முடியுமா?.பொலிசார் மீதும் படையினர் மீதும் அப்போது வராத பாசமும் மதிப்பும் இவர்களுக்கு இப்போது எங்கிருந்து வந்தது? சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் ஏசினால் அது சரி. சிங்கள இனத்தைச் சாராத ஒருவர் செய்தால் அது இனவாதம் என்றா சொல்ல வருகின்றீர்கள்? ஞானசாரவைப் போன்ற மிக மோசமான வார்த்தைகளை முதலமைச்சர் பாவிக்கவுமில்லை; சிங்கள இனத்தைத் தாக்கும்விதத்தில் நடந்துகொள்ளவுமில்லை.

நிலைமை இப்படி இருக்கும்போது இப்போதுதான் படையினர் மீது இந்த தேரர்களுக்கும் சிங்கள் ஊடகங்களுக்கும் பாசம் வந்திருக்கின்றது. பொது பல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்திருந்தபோது அவற்றை ஊக்குவிக்கும் விதத்தில் செயற்பட்ட ஊடகங்களும் தேரர்க்களும்தான் இந்த விவகாரத்திலும் தலையிட்டு இதை இனவாதமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

இது திட்டமிட்ட இனவாதச் செயல் என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகத் தெறிகின்றது.இனவாதத்தை மாத்திரம் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் உள்ளார்கள் என்பது நிச்சயம்.

படையினரை வைத்து அரசியல் செய்யும் தரப்பு இந்த விவகாரத்தை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றது;முதலமைச்சரின் செயற்பாட்டை இனவாதச் செயற்பாடாகக் காட்டுவதற்கு முற்படுகின்றது. ஆனால்,அந்தச் சம்பவத்தை நடுநிலையாக வைத்து ஆராய்ந்து பார்த்தால் அது ஓர் அரசியல்வாதிக்கும் படை அதிகாரிக்கும் இடையிலான சிறியதொரு பிரச்சினையே அன்றி இரண்டு இனங்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY