தனிக் கட்சி தொடங்குகிறாரா விக்னேஸ்வரன்?

0
113

(எம்.ஐ.முபாறக்)

vigneswaranஇலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முன்மாதிரியான-பின்பற்றத் தகுதியான ஓர் அரசியல் கட்டமைப்பு இருக்குமாக இருந்தால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றால் மிகையாகாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியை நாம் ஏற்றுக்கொள்கிறோம்; அனுபவரீதியாக உணர்கிறோம். ஆனால், எல்லோரும் இதைப் பின்பற்றி செயற்பட முயலுவதில்லை. அரசியல் என்று வரும்போது தேவை இல்லை.

தமிழர்கள் இத்தனை வேதனைகளையும் கடந்து தமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று இறுதிவரைக்கும் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களின் உறுதியான அரசியல் கட்டமைப்புதான்.

ஒரே விதமான போராட்டம்-சோரம் போகாத தன்மை-ஒற்றுமை-தமிழரின் அரசியல் கட்டமைப்புக்கு வெளியே எவர் நின்று போராடினாலும் அவர்களை நிராகரிக்கும் நிலைப்பாடு போன்றவற்றால தமிழர்களின் அரசியல் நகர்வு-அவர்களை போராட்டம் நாளுக்கு நாள் பலமடைந்ததாகவே காணப்படுகின்றது.

இந்த நாட்டில் உள்ள ஏனைய இன மக்களை விடவும் அதிக தேவைகள் உள்ள மக்கள் என்றால் அது வடக்கு-கிழக்கு தமிழர்கள்தான். அமைச்சுப் பதவிகளும் சலுகைகளும் அதிகம் தேவைப்படுகின்ற மக்கள் அவர்கள்தான். அப்படித் தேவை இருந்தும்கூட, அவர்கள் அவற்றை நாடாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களின் அரசியல் பயணத்தில் அவர்கள் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் உறுதியும்தான்.

இந்தப் பயணம் அமைச்சுப் பதவிகளை விடவும்-சலுகைகளை விடவும் உயர்ந்த-பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வைப் பெற்றுத் தரும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அனைத்துத் தமிழர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள் என்பதை வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் தெரியும்.

தமிழர்களின் அரசியல் கட்டமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நின்று-அதிலிருந்து பிரிந்து சென்று எவர் போராடினாலும் தமிழர்கள் அந்தப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையை விடவும்-கோரிக்கைகளை விடவும் மிகச் சிறந்த கொள்கைகளை-கோரிக்கைகளை அவர்கள் கொண்டிருந்தாலும் அவர்கள் நிராகைக்கப்படவே செய்கின்றனர்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு-கிழக்கை முழுமையாகச் சுருட்டியது. 22 ஆசனங்களைப் பெற்று மிகவும் பலமாக அது திகழ்ந்தது. அப்போது புலிகள் இருந்ததால் புலிகளின் ஆயுத முனையிலேயே இந்த ஒற்றுமை ஏற்பட்டது என்றும் விமர்சிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் அது பொய்யாக்கப்பட்டது.

புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில்தான் 2010 ஆம் நடாளுமன்றத் தேர்தல் நடந்தது. புலிகள் இல்லாத துணிச்சலில் கூட்டமைப்பின் எம்பிக்கள் பலர் பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிட்டனர்.அவர்கள் அனைவரையும் தமிழர்கள் நிராகரித்தனர்.

குறிப்பாக, வடக்கில் சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், சிவநாதன் கிசோர், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரன் பொன்னம்பலம், கிழக்கில் செல்வி தங்கேஸ்வரி மற்றும் கனகசபை போன்றோர் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று போட்டியிட்டனர். இவர்களுள் ஒருவரும் வெற்றிபெறவில்லை. அனைவரையும் மக்கள் நிராகரித்துவிட்டனர்.

புலிகள் அறவே இல்லாத-வடக்கு-கிழக்கில் அரசும் அதனுடன் இணைந்த ஆய்தக் குழுக்களும் அட்டகாசம் புரிந்துகொண்டிருந்த நிலையில்கூட மக்கள் கூட்டமைப்பின் பின்னாலேயே நின்றனர்.

அவர்கள் அனைவரும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருந்த நிலையில், ஒன்றிணைந்த-பலமான அரசியல் போராட்டத்தை அவர்கள் தீர்மானித்துவிட்டனர் என்பது அதன் மூலம் தெரிந்தது.

அந்த நிலைப்பாடு மேலும் வலுப்பட்டிருந்ததை 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவதானித்தோம். 2010 ஆம் ஆண்டு 14 ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு 2015 1இல் 16 ஆசனங்களைப் பெற்றது.

ஆகவே,தமிழர்களின் நிலைப்பாடு இதுதான். கூட்டமைப்புக்கு வெளியில் இருந்து வருகின்ற எந்தவொரு சலுகையையும் அவர்கள் ஏற்று தமிழர்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்தும்கூட கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு தனி வழி போக முற்படுவது அதிசயமாகவே உள்ளது.

நாம் இங்கு குறிப்பிட்டிருக்கின்ற விடயங்கள் எவற்றையும் அறியாதவர் அல்ல முதலமைச்சர். கூட்டமைப்புக்கு வெளியில் நின்றால் மக்கள் தன்னை நிராகரிப்பர் என்று தெரிந்துகூட அவர் தனி வழி செல்வதற்கு முயற்சி செய்கிறார் என்றால் பாரிய நிகழ்ச்சி நிரல்-பாரிய வலையமைப்பு இவருக்குப் பின்னால் இருக்கின்றது என்று நம்புவது நியாயமாகும்.

கூட்டமைப்புடன் முரண்டுபிடிக்கும் இவரது அரசியல் பயணத்தை அவதானிக்கும் அரசியல் அவதானிகள் இவர் தனிக் கட்சி ஒன்றைத் தொடங்கப் போகின்றார் என்றே சொல்கின்றனர். அந்த அடிப்படையில்தான், இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர் கட்சி தொடங்கப் போகிறார் என்று ஆருடம் தெரிவித்திருந்தது.

விக்னேஸ்வரனை உள்ளடக்கி அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பும் இந்த ஆருடத்துக்குக் காரணமாகும். அரசியல் கட்சியாக மாற்றும் நோக்கிலேயே அந்த அமைப்பு தொடங்கப்பட்டது என்று அப்போது கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.

ஒருவேளை, விக்னேஸ்வரன் தனிக் கட்சி தொடங்குவாராக இருந்தால் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. அந்தத் தனிக் கட்சி கூட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதும் கூட்டமைப்பு இவரால் சந்தித்து வரும் தலையிடியை இல்லாது செய்ய அது உதவும் என்பதுமே இந்த மறைமுக ஆதரவுக்குக் காரணம் என்று சொல்லலாம்.

எவ்வாறாகினும், கூட்டமைப்புடனான கருத்து முரண்பாடுகளைக் களைந்துவிட்டு ஒன்றிணைந்து போவதே தமிழர்களுக்கும் நல்லது விக்னேஸ்வரனின் தனிப்பட்ட அரசியல் வாழ்வுக்கும் நல்லது. மாறாக, தனித்துச் சென்றால் அது ஒரு தனி, மனிதனின் பிரிவாக இருக்குமே தவிர ஒரு சமூகத்திற்குள் ஏற்பட்ட பிளவாக இருக்காது. தமிழர்களின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

LEAVE A REPLY