காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய நிருவாகத்தெரிவு

0
291

(எம்.எச்.எம். அன்வர்)

federation-logo1காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2016/2017 ம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் நாளை (29) காத்தான்குடி மொஹிதீன் மெத்தை ஜும்ஆப் பள்ளிவாயலில் தற்போதய தலைவர் ரவூப் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ளது.

1985ம் ஆண்டு அஷ்ஷஹீத் ஏ. அகமது லெவ்வை அவர்களால் உருவாக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் தற்போது 64 பள்ளிவாயல்களும் 136 சமய சமூக மற்றும் கல்வி நிறுவனங்களும் அங்கம் வகிக்கின்றன.

காத்தான்குடி பிரதேசத்திலும் பிரதேசத்தை அண்டிய பகுதிகளையும் சேர்த்து பல பணிகளை செய்து வரும் இச்சம்மேளனம், கல்விக்குழு, ஸக்காத் குழு, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்காக முஅல்லபதுல் குழு, கடன் கொடுக்கல் வாங்கல் குழு, திருமண பிணக்குகளை தீர்த்துவைக்கும் குழு போன்ற குழுக்களாக பிரித்து எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது சேவையினை செய்து வருகின்றது.

காத்தான்குடிக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் உலமாக்கள், சமூக ஆர்வலர்களை வரவேற்று பிரதேசத்திலுள்ள குறைபாடுகள், தேவைகள், அந்தந்த காலத்திற்கேற்ப சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அனர்த்தம் மற்றும் கலவரங்களின்போது பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வேண்டிய உதவிகளை சேகரித்து அனுப்புதல் போன்ற முக்கிய விடயங்களையும் செய்து வருகின்றனர்.

குறிப்பாக அண்மையில் இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சீர்திருத்த வரைதலில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து சிவில் குழுவொன்றை அமைத்து யாப்பு சீர்திருத்த அம்சங்களை உள்ளடக்கிய ஆவணத்தினை தயாரித்தமை சம்மேளனத்தின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமாகும்.

இதற்கு பல வழிகளிலும் ஒத்தாசையும் ஆலோசனைகளையும் வழங்கிவருகின்ற சம்மேளனத்தின் பிரதித்தலைவர் அஷ்ஷஹீத் ஏ. அகமது லெவ்வை அவர்களின் சகோதரர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் பிஏ, செயலாளர் ஏ.எல். ஷபீல் நளீமி ஆகியோரும் அதனோடு இணைத்து செயற்படுகின்ற உறுப்பினர்கள், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள் மற்றும் ஊழியர்களின் மகத்தான சேவை பாராட்டப்பட்டத்தக்கது என்பதுடன் எதிர்வரும் நிருவாகத் தெரிவில், மாகாணத்திற்கே முன்னுதாரணமாய் திகழும் காத்தான்குடி சம்மேளனத்தினை, புதிய நிருவாகம் மேலும் பல முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY