வங்காளதேச அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் ஹீத் ஸ்ட்ரீக்

0
131

201605271600343278_Heath-Streak-steps-down-as-Bangladesh-bowling-coach_SECVPFவங்காளதேச கிரிக்கெட் அணி சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக். ஜிம்பாப்வேவைச் சேர்ந்த இவர், பயிற்சியாளராக வந்த பின்புதான் வங்காள தேசம் தன்னுடைய பந்து வீச்சில் அதிக பலம் படைத்தது.

தனது பந்து வீச்சால் எதிரணிகளை மிரட்டியது வங்காள தேசம். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்தது. ஸ்ட்ரீக்கின் தலைமையில்தான் தஸ்கின் அஹமது, முஷ்டாபிஜூர் ரஹ்மான், ருபெல் ஹொசைன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கீகாரம் பெற்றனர்.

அந்த அணியின் நம்பிக்கை பயிற்சியாளராக வலம் வந்த 42 வயதான ஸ்ட்ரீக் தற்போது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அக்ரம் கான் கூறுகையில் ‘‘ஸ்ட்ரீக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த செய்தியை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியப்படுத்தினார். இதனால் புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை தேடும் பணியை நாங்கள் விரைவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

ஸ்ட்ரீக் பதவி விலகுவதற்கு முன்பு, ‘‘ஸ்ட்ரீக்கின் செயல்பாடு திருப்தியாக இருந்ததால் அவர் தனது பதவியில் நீடிக்க விரும்பினோம். எனினும், அவர் விலக முயன்றால், அவரை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்யமாட்டோம்’’ என்று அக்ரம் கான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணிக்காக ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 2009-ம் ஆண்டு முதல் 2013 வரை ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடும் குஜராத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக உள்ளார்.

ஸ்ட்ரீக் ராஜினாமா செய்துள்ளதால் அந்த பதவிக்கு இந்தியாவின் வெங்கடேச பிரசாத், பாகிஸ்தானின் அக்யூப் ஜாவெத், இலங்கையின் சமிந்தா வாஸ் ஆகியோரை வங்காள தேசம் அணுகலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY