‘துயர் துடைக்கும் தூய ரமாழான்’ வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டம் அங்குரார்பணம்

0
155

11736f60-e395-487e-98fa-cefe2a47c508வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிர்வரும் ரமழான் மாதத்தில் சிரமமின்றி நோன்பு நோற்பதற்கு உதவி புரியும் ‘துயர் துடைக்கும் தூய ரமாழான்’ திட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமாக முஜிபுர் ரஹ்மானால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு 07 தேசிய சுவடிகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் இத்திட்டம் நேற்று அங்குரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ், சட்டத்தரணி நஜீம், அப்தூல் அஸீஸ் ஆசிரியர், சமாதான ஐக்கிய முன்னணியின் தலைவர் மிப்ளார் மௌலவி, முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் அஸீஸ் நிஸாருதீன், சட்டத்தரணி மர்சூக் உள்ளிட்ட கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி.

புனித ரமழான் மாதம் அண்மித்து வரும் இவ்வேளையில் முஸ்லிம்கள் பாரிய அனர்த்தத்தில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ரமழான் மாதத்தை முறையாக அனுஸ்டிக்கக் கூடிய வகையில் உதவி வழங்கும் பாரிய வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவிருக்கிறோம்.

தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளில் உலர் உணவுப் பொருட்கள், உடைகள், மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றை பல்வேறு அமைப்புக்களும், தனிநபர்களும் முன்னின்று செய்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் மூலம் கிடைக்கக் கூடிய உதவி, ஒத்தாசைகளையும் மற்றும் நட்டஈடுகளையும் மக்களுக்கு கூடிய விரைவில் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினையும் வெள்ளம் பாதிக்காத பகுதிகனில் வாழும் தனவந்தர்கள் பொறுப்பெடுத்து ஆதரித்து அரவணைக்க வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும். நிர்க்கதியான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உதவி புரியவேண்டியது சமூகக் கடமையாக மாறியுள்ளது.

மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சி மாளிகாவத்தை அலுவலகத்தில் இயங்கும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் (சி.டி.டி.எப்.), பாதிக்கப்பட்ட சுமார் 5000 குடும்பங்களின் தரவுகளை இதுவரை ஆவணப்படுத்தியுள்ளது. இக்குடும்பங்களில் மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ரமழானில் வாராந்தம் தலா 5000 ரூபாவாகவோ அல்லது முழுமாதத்திற்குமான செலவாக 20,000 ரூபாவையோ வழங்கக்கூடிய தனவந்தர்களின் உதவியை நான் தற்பொழுது வேண்டி நிற்கின்றேன்.

இந்த திட்டத்திற்காக எங்களது சி.டி.டி.எப். பணியகம் யாரிடமிருந்தும் பணத்தை நேரடியாக பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் முறையை தவிர்த்துக்கொண்டு பண உதவி வழங்குபவர் நேரடியாகவே குறித்த குடும்பத்தினருக்கு அவர்களின் வங்கிக் கணக்கின் ஊடாக பணம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். மேற்படி திட்டத்தில் பண உதவி வழங்குபவரையும் உதவி பெறும் குடுமபத்தையும் இணைக்கும் ஓர் இணைப்பாளராகவே நாம் செயற்பட இருக்கிறோம். இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக இப் பணியகம் தனது தற்காலிக செயற்பாட்டு அலுவலகத்தை கொழும்பு-03; கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள டீன்ஸ்டன் பிலேஸில் டீன்ஸ்டன் ஹவுஸ் கட்டிடத்தில் ரமழான் தலைப்பிறை காணும் வரை கொண்டு நடாத்தவுள்ளது.

ரமழான் மாதத்திற்காக மாத்திரம் இந்த வேலைத்திட்டத்திற்கு உதவி வழங்க விரும்பும் சகல தனி நபர்களும், நிறுவனங்களும், இஸ்லாமிய இயக்கங்களும், பள்ளிவாசல் சம்மேளனங்களும், வெளி நாடுகளில் வாழும் எமது உடன்பிறப்புகள் எல்லோரும் மேற்படி நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நன்மைபயக்கும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளவும் உதவி புரியவும் உங்கள் அன்புக்கரங்களை நீட்டுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

உதவி புரிய ஆர்வமுள்ள சகலரும் சி.டி.டி.எப். பணியகத்துடன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு நீங்கள் பண உதவி புரிய விரும்பும் வெள்ள அணர்த்த்ததால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களையும் அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்களையும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மேற்கூறிய பண உதவி புரிந்து ஈருலகத்திலும் பாக்கியம் பெற்ற கூட்டத்தினரில் இணைந்து கொள்ளுமாறு வல்ல அல்லாஹ்வின் பெயரால் உங்கள் அனைவருக்கும் அன்பாக அழைப்பு விடுக்கின்றேன்.

தொடர்புகொள்ள வேண்டிய [CDDF] பணியக தொலைபேசி இலக்கங்கள்-011-3443199/011-7907838. email:cddflk@gmail.com, facebook: Security Check Required

LEAVE A REPLY