கிழக்கு முதல்வர் முஸ்லிம் என்பதால் இனவாதிகள் உஷாரடைந்துள்ளனர்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர்

0
621

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

A.R.M. Anwarகிழக்கு மாகாண முதல்வர் ஒரு முஸ்லிம் என்பதால் இனவாதிகள் உஷாரடைந்து அதைப் பூதாரகாரமாக்கி இனக்குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும், தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2006.03.25ம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பின்னர் 20.05.2016ம் திகதி சம்பூர் மகா வித்தியாலயம் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு முதல்வர் அழைக்கப்பட்டிருந்தார்.

அதே நிகழ்வில் அமெரிக்க தூதரும் சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக வருகை தர இருந்தமையால் கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாடுகளை கடற்படை தளபதியிடம் ஒப்படைத்திருந்தார்.

இந்த நிகழ்விற்கு முதல் அமைச்சர் அழைக்கப்பட்டிருந்தும் நெறிமுறை தவறி முதலமைச்சரை நடத்தியமை தொடர்பில்தான் முதலமைச்சர் முதலமைச்சருக்கான அந்தஸ்துக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்படிருக்க வேண்டும். இதுதான் நடைமுறை, இருந்தும் எவ்வாறு ஆளுநர் கடற்படை தளபதியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் எனும் கேள்வி எழுகிறது.

ஆகவே, இதுபோன்ற ஆளுநர் அதிகாரங்களால் கிழக்கு மாகாண சபை தன்னகத்தே கொண்டுள்ள அதற்கு உரித்தான அதிகாரங்களை இழக்கின்ற மாகாண சபையாக இருக்க முடியாது.

தொடர்ந்தும் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தை கிழக்கு ஆளுநர் தன்னிச்சையாக கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது.

கடந்த காலத்தில் நடந்ததை போன்று இன்னும் இச்சபையை நடாத்த அனுமதிக்கவும் முடியாது. கடற்படை தளபதியுடன் கடிந்துகொண்டது மாத்திரமன்றி ஆளுனரிடமும் நீங்கள் முறையாக நடக்கவில்லை முழுப்பொறுப்பும் நீங்களே என்ற தொனியிலும் முதலமைச்சர் அங்கு பேசினார்.

கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பவர்கள் இவ்வாறு அதிகாரம் பறிக்கப்படும் நேரத்தில் நியாயத்தை கேட்டால் அது முறையற்றது என சில ஊடகங்கள் திரிவுபடுத்தி தெரிவிப்பது கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் என்பதால் மாத்திரம் அல்ல அதிகாரங்களை வழங்கினால் சில இனவாதிகளுக்கு கிழக்கு மாகாணம் சிறு பான்மையினரிடத்தில் சென்று விடும் என்ற அச்சமேயாகும்.

கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களை ஒப்பிட்டால் கிழக்கு மாகாணத்தில்தான் படையினர் உட்பட சில அரச அதிகாரிகள் மற்றும் ஆளுநர் தலையீடு அதிகமாகவுள்ளது.

அவற்றை பிழையான நிலைமைகள் தோன்றும்போது அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டி நிறுத்தவேண்டும் அதைத்தான் கிழக்கு முதல்வரும் செய்தார்.

வட மாகாண முதல்வர் தமது மாகாண சபை அதிகாரங்களை பாதுகாப்பதில் உறுதியாக நின்று வட மாகாண ஆளுனரை மாற்றி அமைத்த சம்பவம் மாத்திரமன்றி தமது அதிகாரங்களில் யார் கை வைத்தாலும் ஆளும் அரசாங்கத்தை அவர் விமர்சிப்பது நாம் அறிந்த விடயம். அதேவேளை, சிலர் இந்த நிகழ்வில் குளிர்காயவும் எத்தனிக்கின்றனர்.

LEAVE A REPLY