நிவாரணங்களோடு சேர்த்து இஸ்லாமிய போதனைகளும் பகிரப்படல் வேண்டும்

0
245

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை)

floodsஇலங்கை நாட்டின் பல பகுதிகளை வெள்ளம் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து பலரை திணறச் செய்து தனது சொந்த இடத்தைச் சென்றடைந்து விட்டது.

வாடகை இடத்தில் தொடர்ந்துமிருக்க யாருக்குத்தான் அதீத விருப்பம்? அது சில நாட்களாக ஆட்கொண்ட பகுதிகள் பல மனித உயிர்களை காவு கொண்டதோடு மனித வாழ்வை பல கோணங்களில் கேள்விக்குட்படுத்தியும் சென்றுள்ளது.

சுனாமிப் பேரலை அனர்த்தம், பதுளை மண் சரிவிற்கு அடுத்து இலங்கை நாடு மிகப் பெரும் சவாலையும் அழுத்தத்தையும் இவ் அனர்த்தத்தின் மூலமே சந்தித்துள்ளது.

இறைவன் இவ்வாறான அனர்த்தங்களை சிலருக்கு தண்டனையாகவும், சிலருக்கு அருளாகவும், சிலருக்கு சோதனையாகவும் ஏற்படுத்தியுள்ளதை இஸ்லாமிய அடிப்படையில் விளங்கிக்கொள்ள முடிகிறது.

இந்த வெள்ளம் பற்றி சிந்திக்கும் முன் அல்லாஹ் ஏன் உலகில் மனிதனை படைத்துள்ளான் என்ற விடயம் பற்றி தெளிவாவது பொருத்தமானது. இந்த உலகத்திற்கு அல்லாஹ் மனிதனை அவனை வணங்கி வழி படுவதற்காகவே படைத்துள்ளான். அவனை வணங்கும் வேலையை வெள்ளத்திலும் செய்யலாம் புயலிலும் செய்யலாம். இது இஸ்லாத்தின் தனிச் சிறப்புக்களிலும் ஒன்றாகும்.

இந்த அனர்த்தம் அல்லாஹ் மனிதனை உலகிற்கு அனுப்பிய நோக்கத்தை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. மாறாக மனிதன் இவ் உலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை சரியாக உணர்ந்து இச் சந்தர்ப்பத்தில் செயற்படுவானாக இருந்தால் இவ் அனர்த்தம் அவனை இறைவனின் பக்கம் தன முகத்தை முன்னரை விட சற்று அதிகமாக திருப்ப வழி சமைக்கும்.

அத்தோடு இத்தனை துயரிலும் தன்னை மறவாது வணங்குகிறானென இறைவனின் அருள் பார்வையை தன் பக்கம் மிக இலகுவாக திருப்பவும் இவ்வனர்த்தம் வழி கோலும். அனைத்துமுள்ள ஒருவர் எது வித சவால்களுமற்ற நிலையில் அல்லாஹ்வை வணங்கும் போதுள்ள நன்மையின் கணதிக்கும் பல சவால்களுக்கு மத்தியில் அனைத்தையும் இழந்து நிற்கும் ஒருவர் அல்லாஹ்வை வணங்கும் போது கிடைக்கும் நம்மையின் கணதிக்குமிடையில் அல்லாஹ்விடத்தில் நிச்சயம் பாரிய வேறு பாடு காணப்படும்.

ஒரு முஸ்லிம் இச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துவானாக இருந்தால் ஒரு முஸ்லிமின் ஒரே ஒரு இலக்கான அல்லாஹ்வின் அன்பை மிகவும் லாவகமாக பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு முஸ்லிம் தனது நோக்கத்தில் உறுதியாக இருந்தால் இந்த அனர்த்தங்கள் பற்றியெல்லாம் சிறிதேனும் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இக் கருத்து நூறு வீதம் அல்லாஹ்வை நம்பும் ஒருவருக்கே பொருத்தமானதாகும்.

இப்படியான ஈமான் தாரிகளை இன்று கண்ணுறுவது கடினமாகும். இப்படியான சமாதானங்களை எழுதுவதற்கு இலகுவாக இருந்தாலும் அதனைப் பொருந்திக்கொள்வது கடினம் என்பதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் போது உறுதியான ஈமானுள்ளவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாகும் அதே நேரம் தளர்வான ஈமானுள்ளவர்கள் சில வேளை இஸ்லாத்தை விட்டகலவும் வாய்ப்புள்ளது.

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது மிக மிக அரிதான சதவீதமே இறைவனை நிந்திப்போரைக் கண்ணுறக் கிடைக்கும். இச் சந்தர்ப்பத்தில் அழகிய இஸ்லாமிய சிந்தனைகளை ஊட்டுவதன் மூலம் முஸ்லிம்களை நன்மையின் பக்கம் வழி காட்டவும், உணர்வுகளுக்கு அடிமைப்பட்ட தவறான பாதையில் பயணிக்காது பாதுகாக்கவும் முடியும்.

இஸ்லாமிய அமைப்புக்கள் நிவாரனங்களோடு மாத்திரம் நின்று விடாது முஸ்லிம்களை அல்லாஹ்வின் பால் நெருங்கும் இஸ்லாமிய வழி காட்டல்களை செய்வது மிக முக்கியமானதும் காலத்திற்குத் தேவையானதுமாகும்.

எவ்வளவு தான் நிவாரணங்களை அள்ளிக் கொட்டினாலும் குறித்த மக்கள் தங்களது வாழ்விற்காக தயார் செய்து வைத்திருந்த சூழலை ஒரு போதும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. இந்த சூழலை அவர்கள் பொருத்திக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அது அவர்களுக்கு இஸ்லாமிய சிந்தனைகளை ஊட்டுவதன் மூலம் மாத்திரமே சாத்தியமாகும்.

கடந்த சுனாமி அனர்த்தத்தில் பின்னர் சில மத மாற்றும் தரகர்கள் குறித்த நிலைமையை தங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்தி பொருளாதார உதவிகளைச் செய்வதன் மூலம் பலரை தங்களது மதத்திற்கு மாற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த மத மாற்றும் தரகர்களின் வலை வீச்சு முஸ்லிம்களிடத்தில் எடுபடாது போனாலும் அவர்களது முயற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

தற்போது பொருளாதார உதவிகள் மக்களிடத்தில் குவிகின்ற போதும் அம் மக்களை உளவியல் ரீதியாக பலப்படுத்த வேண்டிய தேவையே மிக முக்கியமானது. ஒரு முஸ்லிமின் உளவியலை பலப்படுத்த இஸ்லாமிய சிந்தனைகளையே முதன்மையாக பரிந்துரைக்கலாம். ஒரு மனிதனின் உள்ளம் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த காரணிகளாலும் சாந்தியுறாது.

இந்த நேரம் இதனால் பாதிப்புற்ற அனைவரது உள்ளங்களும் சிறிதேனும் சாந்தியின்றி அலை மோதித் திரியும். இதன் மறு வடிவம் இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் இஸ்லாத்தின் தேவையை மிகவும் உணர்ந்தவர்களாக உள்ளார்கள் என்பதாகும். இச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தை ஏனைய மதத்தவர்களிடம் இலகுவாக கொண்டு சேர்க்கலாம்.

இது பாவங்கள் மலிந்து கிடக்கும் ஒரு காலமாகும். ஏன்? இதுவும் பாவமா என கேட்கும் நிலையிலும் சில பாவங்கள் உள்ளன. இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் இவ்வனர்த்தம் எதனால் ஏற்பட்டது? இதனை எவ்வாறு எதிர்காலத்தில் தடுக்கலாம்? என்றே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மனிதன் செய்கின்ற வேலைகளினாலேயே இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதாக இஸ்லாம் கூறுகிறது. முதலாவது இஸ்லாமிய அடிப்படையில் எம்மை நாம் முஹாசபா (சுய விசாரணை) செய்து கொள்ளவதே பொருத்தமானது.

நாம் வெள்ளப் பெருக்கை எவ்வாறு தடுக்கலாம் எனச் சிந்தித்து சில வேலைகளை செய்யலாம். அத் திட்டங்களைத் தவிடு பொடியாக்கி இது போன்ற அனர்த்தத்தை ஏற்படுத்தவது இறைவனுக்கு பெரிய விடயமல்ல. இறைவன் மனிதனை அழிக்க நினைத்தால் அதற்கு வெள்ளம் மாத்திரம் தான் வழியுமல்ல.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அல்லாஹ் பாவம் செய்பவர்களை மாத்திரம் தண்டிப்பதில்லை, அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களையும் தண்டிப்பதாக இஸ்லாம் கூறுகிறது.

இன்று ஏனைய பகுதிகளை விட கொழும்பு போன்ற மக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் பகிரங்கமாக பாவங்கள் இடம்பெறுகின்ற போதும் அதனை கண்டும் காணாமல் மனிதர்கள் சென்று கொண்டிருக்கின்றமையை யாவரும் மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.

இது போன்ற பகுதிகளில் அதனையெல்லாம் கண்டும் காணாமல் செல்ல வேண்டுமென அறிவுறுத்தலும் வழங்குவார்கள். இதனையெல்லாம் தடுங்கள் என்ற இறைவனின் கட்டளையாகவும் இவ் அனர்த்தத்தை நோக்கலாம். நாம் நோக்குவோமா?

நிவாரணங்களைப் பகிரும் போது நிவாரணங்களோடு சேர்த்து இஸ்லாமியப் போதனைகளைப் பகிர்வதும் காலத்தின் தேவையாகும்.

LEAVE A REPLY