கிழக்கு மாகாணத்தின் தன்மானத்தை தரக் குறைவாக நடத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது: நஸீர் அஹமட்

0
701

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

EPC CM Naseer Ahamedகிழக்கு மாகாணத்தின் தன்மானத்தை தரக் குறைவாக நடத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது. அதிகாரப் பகிர்வின் நன்மைகளை அனைத்து இன மக்களும் அனுபவிக்கச் செய்வதே நிரந்தர சமாதானத்துக்கும் நீடித்து நிலைக்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சரால் இன்ற (25) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 கோடி 55 இலட்ச ரூபாய் செலவிலான பல்வேறு 49 அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதில் முதலாவது திட்டமாக மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் 55 இலட்ச ரூபாய் செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை முதலமைச்சர் புதன்கிழமை நாட்டி வைத்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இந்த நாட்டிற்கே இன ஐக்கியத்திற்கு முன்னுதாரணமாகவுள்ள கிழக்கு மாகாண சபையை அகௌரவப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது.

தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இன ஐக்கியத்துடன் இணைந்து இந்த மாகாண சபையை ஆளுகின்றார்கள். எமது திட்டங்களும் வெளிப்படைத் தன்மையுள்ளதாக இருக்கின்ற அதேவேளை எல்லோரும் இன ஐக்கியத்துக்காகப் பாடுபகின்றோம் என்பதும் இந்த நாட்டுக்கு வெளிப்படையாகத் தெரியும்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 18 இலட்சம் மக்களும் இந்த ஒற்றுமையின் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள்.

இனப் பிரச்சினையால் சின்னாபின்னாபின்னமாகிப் போன இந்த நாட்டைக் கட்டி எழுப்புவதில் கிழக்கு மாகாண சமூகம் கவனமாகச் செயற்பட்டு வருகின்றது.

ஆகையினால். கிழக்கு மாகாண ஒட்டு மொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மாகாண சபை நிருவாகத்தையோ அல்லது முதலமைச்சர் அந்தஸ்தையோ தரக்குறைவாக நடாத்தும் எந்த சந்தர்ப்பங்களையும் நாம் அங்கீகரிக்கப் போவதில்லை.

கடந்த கால வன்முறைகளினால் ஈடு செய்ய முடியாத இழப்புக்களை இந்த கிழக்கு மக்கள் தாங்கிக் கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருக்;கின்றார்கள்.

கடந்த வாரம் சம்பூரிலே நடந்த சம்வம் தனிப்பட்ட முறையில் அது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் அல்ல. அது இந்த ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கும் இந்த சிறப்பான மாகாண நிருவாகத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

சாதாரண ஒரு கடற்படை அதிகாரி ஒரு மாகாணத்தின் முதலமைச்சரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்துவது இந்த நல்லாட்சிக்கு நல்லதல்ல.

எந்தத் தடைகள் வந்தாலும் சகல விதத்திலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், வருமானம், ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்திலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள ஒரு மாகாணமாக மாற்றுவதற்கான தூரநோக்குள்ள வரைவுத் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த அபிவிருத்தித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY