வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை புள்ளித் திட்டத்தில் குளறுபடி

0
174

(அஸ்லம் எஸ்.மௌலானா)

f30a47da-8585-4508-8b67-83eae9dcc846கிழக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனக்களுக்காக நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின்போது கல்வித் தகைமை, தொழிற் தகைகமை என்பன பற்றிய வேறுபாடு தெரியாமல் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாக என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம், மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவிடம் முறையிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட மேற்படி நேர்முகப் பரீட்சை தொடர்பான புள்ளித் திட்டத்தில் குளறுபடி இடம்பெற்றுள்ளது. ஆணைக்குழுவின் செயலாளரினால் தயாரிக்கப்பட்ட இப்புள்ளித் திட்டத்திற்கு பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களும் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

குறித்த புள்ளித் திட்டத்தில் கல்வித் தகைமை என்ற தலைப்பின் கீழ், கல்வி முதுமாணி அல்லது முது தத்துவமாணி பட்டத்திற்கு 10 புள்ளிகளும் பட்டப்பின் டிப்ளோமாவுக்கு 08 புள்ளிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டப்பின் டிப்ளோமா என்பது தொழிற் தகைமை என்பது தெரியாத நிலையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஆரம்ப பட்டத்திற்கு புள்ளி வழங்கப்பட்ட பின்னரே பட்ட மேல் பட்டங்களுக்கு புள்ளி வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும் தெரியாத நிலையில் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் வகுப்பிற்கு 10 புள்ளிகளும் இரண்டாம் வகுப்பிற்கு 05 புள்ளிகளும் மூன்றாம் வகுப்பிற்கு 03 புள்ளிகளும் பொதுவாக் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இப்புள்ளித் திட்டத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் ஒருவரின் மொத்த சேவைக் காளத்திக்கு புள்ளி வழங்கும் நடைமுறை பேணப்படவில்லை.

நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படுகின்ற புள்ளித் திட்டத்திற்கு முற்றிலும் முரணான விதத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் நடைமுறை சாத்தியமற்ற புள்ளித் திட்டம் பயன்படுத்தப்பட்டு, பல சிரேஷ்ட உத்தியோப்கத்தர்கள் புறக்கணிக்கப்பட்டு, கனிஷ்ட தரங்களை சேர்ந்தோர் கடந்த காலங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டமை கிழக்கு மாகாண கல்வித் துறையை நாசமாக்க எடுக்கப்பட்ட முயற்சி எனக் கருதுகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது சேவையில் உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுள் எத்தனை பேர் கல்வி முதுமாணி, முதுதத்துவ மானி பட்டங்களைக் கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகும். இவற்றைக் கற்பதற்கான வாய்ப்புகளை கல்வி அமைச்சு வழங்குவதில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்த நிலையில் இவ்வாறான பட்டங்களை வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு கோரியிருப்பதானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY