அனர்த்தப்பிரதேசங்களில் வாழ்ந்த ஊடகவியலாளர்களுக்கு உதவவேண்டும்: முன்னாள் அமைச்சர் அஸ்வர்

0
162

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

c9c32718-17eb-497f-91da-ea5c08dbd86cமனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு இயற்கையாகவே அமைய வேண்டிய அருங்குணமாகும் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

ரோட் ஜென்னத் என்ற லண்டன் அமைப்பில் வலது குறைந்தோருக்கு முச்சக்கரவண்டியும் வறுமைக் கோட்டின் எல்லையில் வாழ்வோருக்கு பாடசாலை உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு, தெமட்டக்கொடை கலாசார நிலையத்தில், ரோட் ஜென்னத் திட்டத்தின் பிரதம நம்பிக்கையாளர் கலாநிதி எம்.ஹாரிஸ்டீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது பேசிய அவர் மேலும் கூறியதாவது,

எல்லாம் வல்ல இறைவன் மனித வர்க்கத்தை பல அனர்த்தங்களின் மூலம் சோதிக்கின்றான். எனவே நாங்கள் மிகவும் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் நிலவுகின்ற வெள்ள, மண்சரிவு அனர்த்தம் சம்பந்தமாக திருக்குர்ஆன் போதனைகள் நன்றாக உணர்த்துகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு இயற்கையாகவே அமைய வேண்டிய அருங்குணமாகும்.

இன்று பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளைப் பார்ப்பதற்கும் அவர்களுக்கு உதவி செய்வதற்கும் லண்டனில் இருந்து ஒரு குழு வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. அதாவது நாடு, நாட்டு எல்லைகள் என்று பாகுபாடு பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவது பண்புகளுள் பெரும் பண்பாகும்.

கொலன்னாவை, அரநாயக்க, வெல்லம்பிடிய, மல்வானை போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு சிங்களவர்கள் உதவி செய்தார்கள். அதே போல அங்குள்ள சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் உதவி செய்தார்கள். சிங்களவர்களும் , முஸ்லிம்களும் இணைந்து தமிழர்களுக்கு உதவி செய்தார்கள். இதுதான் உண்மையான மனிதாபிமானத்துக்கான வரைவிலக்கணம்.

இதில் தங்கள் உயிர் ஆபத்துக்களையும் பாராது வந்து உதவிய தரைப்படை, கடற்படை, விமானப்படை பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள் போன்றோர்கள் செய்த உதவியை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊடகத்துறையில் பணியாற்றுகின்றவர்கள் வீடு மற்றும் உடைமைகள் முற்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அணிந்திருந்த உடையோடு மட்டும் வள்ளங்களில் ஏறி உயிரை மட்டும் காப்பாற்றிவர்களாக கரை சேர்ந்து இருக்கின்றார்கள்.

வெள்ளத்தில் காப்பாற்ற வந்த பணியாளர்கள் மாற்று உடை கொடுத்து உதவி செய்திருக்கின்றார்கள். ஆகவே இது ஒரு சோதனை. எந்த மனிதனுக்கும் இறை அச்சம் இருக்க வேண்டும். அரசியல் செய்தாலும் வேறு எந்தப் பணிகளில் ஈடுபட்டாலும் இறை அச்சம் இருப்பது மிக மிக அவசியமாகும்.

எனவே இது போன்ற நேரத்தில் அதிகமதிகம் நாங்கள் ஸதகா செய்ய வேண்டும். நீர், நெருப்பு, காற்றுக்கு இல்லாத சக்தியை இறைவன் ஸதகாவுக்கு வழங்கி இருக்கின்றான். எனவே அந்த ஸதகாவை செய்தால் ஜென்னத்தை நாங்கள் அடைந்து கொள்வதற்கு சிறந்த வழி வகுக்கும்.

அந்த ஸதகாவை பாதிப்புற்றிருக்கும் இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி, அம் மக்களின் துயர் துடைக்க எம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம் என்றார். இந்நிகழ்வில் நிருவாக சபையில் ஒருவரான நிஸ்வான் அனீஸும் உரை நிகழ்த்தினார்.

LEAVE A REPLY