கிழக்கு முதலமைச்சரால் அபிவிருத்தித் திட்டங்கள் தொடக்கி வைப்பு

0
9

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Naseer Hafisகிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் புதன்கிழமை 25.05.2016 தொடக்கம் திங்கட்கிழமை 30.05.2016 வரை கிழக்கு மாகாணத்தில் 44 பரவலான அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்தியக் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதன்படி புதன்கிழமை 25.05.2016 தொடக்கம் சனிக்கிழமை 28.05.2016 வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் 836 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் 29 திட்டங்கள் முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

இதில் 10 பாடசாலைகளுக்கான கட்டிட அபிவிருத்திக்கு 55.1 மில்லியன் ரூபாவும், 7 வீதிகள் கொங்கிறீற் இட்டு அபிவிருத்தி செய்யப்படுவதற்காக 20.5 மில்லியன் ரூபாவும், கிணறு அமைத்தல் மற்றும் குடி நீர் வசதிக்காக 6 மில்லியன் ரூபாவும், நூலக அபிவிருத்திக்காக 2 மில்லியன் ரூபாவும், வணக்கத் தலங்களின் சுற்றுமதில் அமைப்பதற்காக 1.6 மில்லியன் ரூபாவும், படகுத்துறை அபிவிருத்திக்காக 4 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு புதன்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு பொலொன்னறுவை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையிலுள்ள ரிதீதென்ன இக்றஹ் வித்தியாலயத்தில் இருந்து தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கலந்து கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்.

கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், வருமானம், ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்திலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவதற்கான தூரநோக்குள்ள வரைவுத் திட்டத்தின் முதற்கட்டம் இதுவென்று முதலமைச்சரின் பிராந்தியக் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மே மாதம் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் கிழக்கு முதலமைச்சரால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY