அனர்த்த முகாமை தொடர்பில் அரசின் முன்னெடுப்புக்கள் குறித்து மக்கள் அறிவுறுத்தப் படல் வேண்டும்

0
174

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

Maseehudeen inamullahஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பிரதேசங்களிற்குள் வதிவிட உரிமையாளர்கள், தொண்டர் படையணியினர், நிவாரண சேவையாளர்கள் பிரவேசிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் வர இடமுண்டு, இவ்வாறான ஒரு நிலையில் நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்துடன் ஒத்துழைக்க அரசு உடன் பட்டுள்ளது.

குறிப்பாக அரசு பாதிக்கப்பட்ட பொது மக்களிற்கு வழங்க முன்வந்திருக்கின்ற அனைத்து நிவாரண சேவைகளையும், நட்டஈடுகளையும் பெற்றுக் கொள்வதற்கான முறையான நடவடிக்கைகளை நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் முன்னெடுத்து வருகின்றது.

அரசின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இழப்பீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தம்மை தத்தமது பிரதேச கிராம சேவை அலுவலர் ஊடாக அல்லது அவசர அழைப்பினூடாக 1919 ஜனாதிபதி செயலணியூடாக பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் சுமார் 80% விகிதத்தினர் தங்களை இதுவரை முறையாக பதிவு செய்துகொள்ளவில்லை என அறிய வருகின்றது, மேற்படி பதிவுகள் உடனடி நிவாரப் பணிகளிற்கு மாத்திரமன்றி, இழப்பீடுகளிற்கும், எதிர்கால அரசின் குடியிருப்பு, நகராக்க திட்டங்களிற்கும் தேவைப் படுவதானால் மக்கள் தூர நோக்குடன் விழிப்பாக செயல்படல் வேண்டும்.

நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் இதுவரை திரட்டியுள்ள தரவுகளை அரசிடம் கையளிப்பதற்கான பூர்வாங்க பேச்சுவாரத்தைகளை அதிகாரிகளுடன் மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, வதிவிடங்களை துப்பரவு செய்வது, அங்கு சுகாதார சுற்றுச் சூழல் நிலவரங்களை கையாள்வது, மின்சார இணைப்புக்களை பரிசீலிப்பது, தூய்மையான நீர் வழங்களை உறுதி செய்வது, உடனடி சுகாதார வைத்திய சேவைகளை வழங்குவது, நிவாரண உதவிகளை வழங்குவது என இன்னோரன்ன நடவடிக்கைகளை அரசாங்கமும் மேற்கொள்ள இருக்கின்றது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள், பாடப் புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள், பாதணிகள், புத்தகப் பைகள் என அவர்களுக்கு பிரத்தியேகமான நிவாரணப் பொதிகளை அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு வழங்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதேவேளை பல்வேறு நாடுகளிடமிருந்தும் உதவிகள் பெறப்படுகின்றன.

அனர்த்த நிவாரண மத்திய நிலையம் அரச அதிகாரிகளோடு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளிற்கு புறம்பாக, மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களையும் சந்தித்து பேசவுள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகளை மேற்கொள்ளும் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் மேற்படி விவகாரங்கள் குறித்து தமது கவனத்தை செலுத்துவதோடு நிவாரண மத்திய நிலையத்தின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உரிய வழிகாட்டல்களையும் வழங்குதல் வேண்டும்.

நேரடியாக நிவாரண உதவிகளை விநியோகிக்க விரும்பும் தரப்புக்கள், ஏனைய சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், தற்பொழுது களப்பணியில் உள்ள அமைப்புக்கள் தமது செயற்பாடுகள், தேவைகள், தாம் பொறுப்பேற்க விரும்புகின்ற பணிகள் தொடர்பாக நிவாரண் ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்துடன் கலந்து பேசி பணிகளுக்கான வழிகாட்டல்களை ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அகில இலங்கை ஜம்மியாயதுல் உலமா தேசிய ஷூரா சபை, இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் உற்பட முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் இணைந்து நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையமொன்றை (RCC ) RELIEF COORDINATING CENTRE – நிறுவியமை எமது சமூக மற்றும் தேசிய வாழ்வில் மகத்தான ஒரு மைல் கல்லாகும்.

அவசர அழைப்பு இலக்கம் 0117-490415

LEAVE A REPLY