விற்றமின் மாத்திரைகளை தினசரி உபயோகிப்பதால் புற்றுநோய், சிறுநீரக நோய், ஈரல் பாதிப்பு அபாயம்.!

0
226
Spilled pills
Spilled pills

பிரபலம் பெற்று விளங்கும் விற்றமின் மற்றும் ஏனைய போஷணை சார்ந்த மாத்திரைகளை தினசரி உள் எடுப்பது அந்தப் போஷணைகள் உடலில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர வழிவகை செய்து உடல் நலத்துக்கு நன்மையை விடவும் அதிகளவு தீங்கை ஏற்படுத்தக் கூடியது விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கிய நிலை கருதி விற்றமின் ஈ, சி மற்றும் டி மாத்திரைகளை தினசரி உபயோகிப்பது விதைப்பை புற்றுநோய், இருதய நோய் உள்ளடங்கலான உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை நேற்று இரவு அவுஸ்திரேலிய ஏ.பி.சி. ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விற்றமின் மாத்திரைகள் மட்டுமல்லாது மீன் எண்ணெய் வில்லைகள் உள்ளடங்கலான ஏனைய போஷணை வில்லைகளும் மனித உடல் நலத்துக்கு பாதிப்பை கூடியவை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விற்றமின் டி மாத்திரையின் ஒரு வகையானது சட்ட ரீதியான அனுமதிக்கப்பட்ட அளவிலும் 213 மடங்கு போஷணை உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனவும் அமெரிக்க பிலெடெல்பியா சிறுவர் மருத்துவமனையைச் நெர்ந்த மருந்தக மருத்துவ முகாமையாளர் சாரா ஏரஷ் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான போல் ஒடிவ் தெரிவிக்கையில், மருந்தகங்களில் விற்றமின் மாத்திரைகளை வாங்கச் செல்பவர்கள் அவை பாதுகாப்பானவை என்றே கருதி செயற்படுகின்றனர். ஆனால் விற்றமின்கள் அபாயகரமானவை என்பததே உண்மையாகும். ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டதை விடவும் அதிகளவு விற்றமின் மாத்திரைகளை உள் எடுப்பது அவருக்கு மோசமான உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார்.

“ ஒருவர் அளவுக்கதிகமாக விற்றமின் ஈ மாத்திரையை உள் எடுப்பாராயின் அது அவருக்கு விதைப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை திட்டவட்டமாக அதிகரிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

மேலும் மீன் எண்ணெய் வில்லைகளிலுள்ள பிரதான கூறு ஒட்சிசனுடன் தொடர்புறுகையில் உடல் நலப் பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக ஹவார்ட் மருத்துவ பாடசாலையைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி பிரெஸ்டன் மான்ஸன் தெரிவித்தார்.

நியூஸிலாந்தில் மீன் எண்ணெய் வில்லைகள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வானது 83 சதவீதமான மீன் எண்ணெய் வில்லைகள் நச்சுத்தன்மையான உயர்மட்ட ஒட்சியேற்றமடைந்த இலிப்பிட்டுக்கூறுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆக்லாண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி அன்ட்றூ கிரே தெரிவித்தார்.

அத்துடன் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சில இலாப நோக்கம் கருதி மலிவான உள்ளடக்கங்களைப் பயன்படுத்தி உரிய நியமத்தராதர முறைமைகளைப் பின்பற்றாது தரம் குறைந்த போஷணை மாத்திரைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் நிலைமையும் உள்ளதால் அத்தகைய மாத்திரைகளால் ஏற்படும் பாதிப்பு பாரதூரமானதாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மேலதிக போஷணை வழங்கும் மூலிகை மாத்திரைகளை தொடர்ந்து உபயோகித்து வந்தமை காரணமாக 2011 ஆம் ஆண்டிலிருந்து 6 அவுஸ்திரேலியர்களுக்கு ஈரல் மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை என்பன மேற்கொள்ளப்பட்டன.

உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கும் அதேசமயம் உடலை செயற்றிறனுடன் வைத்துக் கொள்ள பயன்படும் ஒக்ஸிஎலைட் புரோ மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்திய சிற்தியா சொவிடா என்ற பெண் ஈரல் பாதிக்கப்பட்டு ஈரல் மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாய நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரும் அந்த மாத்திரை பாவனையால் பாதிப்புக்குள்ளான சுமார் 100 பேருக்கும் அதிகமானோரும் இணைந்து ஒக்ஸிஎலைட்புரோ மற்றும் யு.எஸ்பி. மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இணையத்தளம் மூலம் கிடைப்பனவாகும் இந்த மாத்திரை பாவனை குறித்து அவுஸ்திரேலிய சிகிச்சைப் பொருட்கள் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இது தொடர்பில் ஒக்ஸிஎலைட் புரோ நிறுவனம் எந்தவொரு விமர்சனத்தையும் வெ ளியிடவில்லை. அத்துடன் அந்த மாத்திரை பாவனையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்து பொறுப்பேற்கவும் அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

LEAVE A REPLY