யுத்த வெற்றி யாருக்குச் சொந்தம்?

0
243

(எம்.ஐ.முபாறக்)

Simple-Blue-Background-Recoveredஇலங்கையில் இடம்பெற்று வந்த சிவில் யுத்தம் முடிவடைந்து இன்றுடன் 7 வருடங்களாகின்றன. அந்த யுத்தம் பூரணமாக முடிவடைந்தாலும் கூட அந்த யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பூரணமாகக் குணப்படுத்தப்படவில்லை. இருந்தாலும், வருடா வருடம் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் மாத்திரம் தவறாமல் இடம்பெறுகின்றன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை எவ்வாறு இருந்தாலும் பரவா இல்லை. அரசியல் இலாபம் ஒன்றே இலக்கு என்ற அடிப்படையில்தான் இன்று யுத்த வெற்றி கொண்டாடப்படுகின்றது. யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்பு, சொத்துக்கள் இழப்பு மற்றும் காணாமல் போனமை போன்றவற்றை ஈடு செய்வதற்குப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில்தான் இந்த யுத்த வெற்றி தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த யுத்த வெற்றி விழா தொடர்பில் முழு நாடும் ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாமை கவனிக்கத்தக்க விடயமாகும். ஓரினத்தின் உரிமைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிய மமதையில் இன்னோர் இனம் யுத்த வெற்றியைக் கொண்டாடும்போது, அடுத்த இனம் இந்த யுத்தத்தால் தங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை நினைவு கூறும் தினமாக இத்தினத்தை மாற்றியுள்ளது.

இவ்வாறு இந்த யுத்த வெற்றிக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இரண்டு வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுவதால் இந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டம் தேவைதானா என்ற கேள்வியும் எழுகின்றது. அதனால்தான் யுத்த வெற்றி தினம் என்ற பதத்தை தேசிய வீரர்கள் தினம் என்று அரசு மாற்றியுள்ளது. யுத்த வெற்றி கொண்டாடப்படுவது இனியும் பொருத்தம் அல்ல என்பது இதன் மூலம் உணரப்படுகின்றது.

ஒரு நாட்டுக்குள் ஓர் இனத்துக்கு எதிராக இன்னோர் இனம் நடத்திய யுத்தமாக இது பார்க்கப்படுவதும் தோல்வியுற்ற இனம் தொடர்ந்தும் தோல்வி மனப்பான்மையுடன் இருப்பதும் இந்த நாட்டுக்கு ஆபத்தானதாகும்.

யுத்த வெற்றிக் கொண்டாட்டமானது பிழை என இந்த அரசு உணர்ந்திருந்தாலும் கூட, சிங்களவர்களைப் பகைக்க முடியாது என்பதற்காக அரசு இன்று வேறு பெயரில் அதைக் கொண்டாடுகின்றது.

அரசின் இந்த நிலைப்பாட்டை-நெகிழ்வுத் தன்மையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்ட மஹிந்த ராஜபக்ஸ முழுக்க முழுக்க சிங்களை மக்களை மாத்திரம் குறி வைத்து காய் நகர்த்தத் தொடங்கியுள்ளார்.

இந்த நாட்களில் அதிகம் நினைவு கூறப்படுபவராக மஹிந்தவே காணப்படுகின்றார்.அவர்தான் இந்த வெற்றிக்கு முழுக் காரணம் என மக்கள் நம்புகின்றனர். உண்மையில் அவர்தானா யுத்த வெற்றியின் சொந்தக்காரர் என்பதை இந்தத் தருணத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

இந்த யுத்தத்தை நாம் கிரிக்கட் போட்டியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.100 ஓட்டங்களை எடுத்த வீரர் அல்லது இறுதி ஓவர்களில் குறைந்த பந்துகளுக்கு வேகமாக அடித்தாடி கூடிய ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்த வீரரின் மீதே அனைவரின் கவனமும் திரும்பும்.வெற்றிக்கு அவரே காரணம் என அனைவரும் நம்புவர்.

ஆட்டத்தை முடித்து வைத்தவர் வெற்றியுடன் அதை நிறைவு செய்வதற்கு முன் பல வீரர்கள் ஆடி பலமான அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தமை எவரது கவனத்தையும் ஈர்க்காது. இறுதியல் இடம்பெறும் அதிரடி ஆட்டமே அனைவரையும் கவரும்.

இவ்வாறுதான் இந்த யுத்தத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.கிரிக்கட் ஆட்டத்தைப் போன்று இந்த யுத்தத்தை வெற்றியுடன் முடித்து வைத்தவர் மஹிந்த. அவ்வாறு அதை வெற்றியுடன் நிறைவு செய்வதற்கு அவருக்கு உறுதியான அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தவர்கள் பலர்.

அவ்வாரனவர்களுள் மிக முக்கியமானவர்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.எவ்வளவு பெரிய ஆயுத பலத்தையும் தனது இராஜதந்திர பலத்தால் பலவீனப்படுத்தக் கூடிய கெட்டிக்காரர். அந்தக் கெட்டிக்காரர் களத்தில் இறங்கி ஆடிய ஆட்டம்தான் அவருக்குப் பின்னால் வந்த மஹிந்த யுத்தத்தை வெற்றியுடன் நிறைவு செய்வதற்கு பலமான அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தது.

ரணிலின் பந்தில் சரிந்த முக்கியமான விக்கட்தான் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா அம்மான். அந்த விக்கட்டின் சரிவே புலிகளின் சரிவுக்கு வழி வகுத்தது. 2002 இல் ஆட்சியைக் கைப்பற்றிய ரணில் விக்ரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்ததன் மூலம் கருணாவை புலிகளிடம் இருந்து பிரித்தெடுத்தார். கருணா தலைமையிலும் பிரபாகரன் தலைமையிலும் புலிகள் இரண்டாகப் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டனர்.

இறுதியில் பிரபாகரன் அணி வென்றபோதிலும் கருணா தொடர்ந்தும் புலிகளுக்குச் சவாலாகவே இருந்தார். சமாதான ஒப்பந்தம் என்பது யுத்தரீதியாக புலிகளைப் பலவீனப்படுத்தும்-புலிகளிடையே பிளவுகளை ஏற்படுத்தும் என்ற உண்மையை பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். அதனால்தான் அவர் அந்த சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்தார்; அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துடனும் முரண்பட்டுக் கொண்டார்.

2005இல் மஹிந்த ஆட்சியை ஏற்றதும் அவர் புலிகளுடன் யுத்தம் செய்வதற்குத் தயங்கினார். மிகவும் சிரமப்பட்டு புலிகளை ஒருவாறு பேச்சு மேசைக்கு அழைத்து வந்தார். அந்தப் பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து யுத்தம் தொடங்கப்பட்டது.

மஹிந்தவை விடவும் புலிகளே யுத்தத்தை விரும்பினர். யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் இருந்தாலோ அல்லது ரணிலின் ஆட்சி தொடர்ந்து இருந்தாலோ புலிகள் மேலும் பலவீனம் அடைவர் எனக் கருதிய புலிகளின் தலைவர் பிரபாகரன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணிலையும் தோற்கடித்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் தூக்கி வீசி இறுதி இலக்கை நோக்கி யுத்தத்தை நகர்த்தினார்.

ஆனால், ரணிலால் ஏற்கனவே போடப்பட்டிருந்த உறுதியான அடித்தளம்-அவர் ஏற்படுத்தி இருந்த புலிகளுக்கு இடையிலான பிளவு இறுதி இலக்கை அடையும் புலிகளின் யுத்த பயணத்தைத் தோல்வியடையச் செய்தன. களத்தில் இறுதியாக நின்று போராடிய மஹிந்தவுக்கு ரணிலின் இந்த ஏற்பாடு வெற்றியைக் பெற்றுக் கொடுத்துவிட்டது.

இந்த நாட்டு மக்களின் பார்வையெல்லாம் இறுதி யுத்தத்தின் மீதே இருந்தது.அதற்கு முன் இடம்பெற்ற யுத்தங்கள் அனைத்தயும்-அவற்றில் இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் மறந்து இறுதி யுத்தத்தையே யுத்தமாகப் பார்த்தனர். அதனால்தான் அந்த யுத்தத்தை வெற்றியுடன் நிறைவு செய்த மஹிந்தவுக்கு யுத்த வெற்றி சொந்தமானது.

வரலாற்று நெடுகிலும் யுத்தத்தை ஆராய்ந்து பார்த்தால் யுத்த வெற்றிக்குப் பலர் உரிமை கோருவர். அதிலும் ரணிலே முதலிடத்தில் இருப்பார். ஆகவே, யுத்த வெற்றியின் உண்மையான சொந்தக்காரர் ரணில் என்பதுதான் உண்மை.

ரணில் போட்டு வைத்த அடித்தளத்தின் அடிப்படையில் மஹிந்த அல்ல யாராக இருந்தாலும் யுத்தத்தை வென்றே இருப்பர் என்பதுதான் யதார்த்தம்.

LEAVE A REPLY