கல்முனைப் பேருந்தும் கலகெதரவில் கழற்றப்படும் ஆசனங்களும்…!

0
181

(இளைய நிலா)

ec679799-1d46-4632-8668-50531d5a7852பாகம் – 01

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் அரசியல் வரிசையில் மர்ஹும் எம்.எச.எம்.அஷ்ரபின் காலம் ஒரு பொற்காலம் என்பது நமது மனதிலிருந்து மறையாத விடயமாகக் காணப்படுகிறது. 1948 ஒக்டோபர் 23ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்த மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் தனது பாடசாலைக் கல்வியை கல்முனை பத்திமா கல்லூரியிலும், கல்முனை உவெஸ்லிக் கல்லூரியிலும் கற்று உயர்கல்வியை இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார். அதன் பின்னர் இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்காக அரசியல் பிரவேசம் செய்தார். முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட தமிழர் கூட்டணியிலிருந்து முரண்பட்டு வெளியேறிய மர்ஹும் எம்.எச.எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்கான புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

1981இல் காத்தான்குடியில் ஏ.சீ. அகமட் என்பவரின் தலைமையில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் ஸ்தாபகத் தலைவராக மர்ஹும் எம்.எச.எம். அஷ்ரப் பதவி வகித்ததிலிருந்தே இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள், அபிவிருத்திக்கான பயணம் பூக்கத் தொடங்கியது. குறிப்பாக வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கான அரசியல் விடிவு இதன் மூலமாகவே ஆரம்பித்தது என்பது மிகையாது.

1989 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது 2ஆசங்களையும், 1994 இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது 7ஆசங்களையும் (தேசியப்பட்டியல் உட்பட) பெற்று நாட்டில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தது.

1989 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளித்ததன் மூலம் ஜே.ஆரினால் கொண்டுவந்த 12.5 வீதமாகக் காணப்பட்ட சிறுபான்மையினரின் வெட்டுப் புள்ளியை 5 வீதமாகக் குறைத்ததன் விளைவை இன்று வரை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா தiமையிலான பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாங்கத்திற்ககு ஆட்சியமைக்க உதவியதன் பலனாக நமது சமூகம் அனுபவித்த பலன்கள் இன்று வரை எவராலும் செய்து விட முடியாத விடயமாக காணப்படுவதுடன், அதன் பலன்கள் இன்று வரை எம்மால் அனுபவிக்கமுடிகின்றது.

-தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
-ஒலுவில் துறைமுகம்
-அட்டாளைச்சேனை தேசியக் கல்வியற் கல்லூரி
-அட்டாளைச்சேனை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக்கப்பட்டமை
-கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
-பல மீள்குடியேற்றக் கிராமங்கள்
-மீலாதுன் நபி விழா என்ற பெயரில் அபிவிருத்தி
-கிழக்கின் பாடசாலைகளுக்கு மாடிக் கட்டிடங்கள்

இவை தவிர பல இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு துறைமுகங்கள், விமான நியைம், வைத்தியசாலைகள் என பல அரச தொழில்கள் வழங்கி மக்கள் மனதில் அழியாத இடம்பிடித்துக்கொண்டிருந்த மர்ஹ_ம் எம்.எச.எம். அஷ்ரப் 2000 செப்டெம்பர் 16ஆம் திகதி திகாமடுல்ல மாவட்டத்தில் பல இடங்களிலும் அபிவிருத்தித் பணிகளின் திறப்பு விழாக்களில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை விமானப் படையின் எம்.எச் 17 எனும் ஹெலிக்கொப்டரில் இரத்மலானை விமானப்படை விமான நிலையத்திலிருந்து அம்பாறை நோக்கி வரும் வழியான கேகாலை அரநாயக்க மலையில் விபத்துக்குள்ளாகி இறையடி சேர்ந்தார்.

பாகம் – 02

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவராக மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணத்திற்குப் பின்னர் 1960 ஏப்ரல் 13ஆம் திகதி கண்டி நாவலப்பிட்டியில் பிறந்த ரவுப் ஹக்கீம் இக்கட்சிக்கு தலைவராகினார். இதில் அதாவுல்லா, பசீர் சேகுதாவூத், ஹசனலி முதலானோர்களின் பங்கே முதன்மையானதாகக் காணப்பட்டமையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ரவுப் ஹக்கீம் இதற்கு முன்னர் இக்கட்சியில் 1992 தொடக்கம் 2000 வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2000ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 28033 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஹக்கீம், சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னனி அரசில் துறைமுக அபிவிருத்தி, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக, முஸ்லிம் சமய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதே அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்ததன் காரணமாக ஜனாதிபதி சந்திரிக்காவினால் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

அதன்பின்னர் 2001, 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், 2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதுடன், 2010ஆம் ஆண்டிலும், 2015ம் ஆண்டும் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். இக்காலப்பகுதியில் ரவுப் ஹக்கீம் பல தடவைகள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்துள்ளார்.

2000 – துறைமுக அபிவிருத்தி, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக, முஸ்லிம் சமய விவகார அமைச்சர்.
2001 – துறைமுக அபிவிருத்தி, கப்பற்துறை, கிழக்கு அபிவிருத்தி அமைச்சர்.
2007 – தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர்.
2010 – நீதி அமைச்சர்
2015 – நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சர்.

2000ம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையான ரவுப் ஹக்கிமுடைய 14 வருட காலப்பகுதியில் எந்த விதமான அபிவிருத்தியையோ வேலை வாய்ப்பினையோ வடகிழக்கில் வழங்கப்படவில்லை. மாறாக அவை கண்டி மாவட்டத்தில் பகிரப்பட்டமை ஊரரிந்த உண்மை. மேலும் நீதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கூட நீதி அமைச்சில் அமைச்சருடைய நிருவாகம் அனைத்தும் கண்டியை மையம் கொண்டிருந்தமையும் கட்சித் தொண்டர்கள் அறிந்த விடயம்தான்.

பல தடவகைள் கிழக்கு மாகாண கட்சித் தொண்டர்கள் தங்களது தேவைக்காக அமைச்சிற்குச் சென்ற போதெல்லாம் மட்டக்களப்பான் என்று பாகுபடுத்தப்பட்டும், அமைச்சரைச் சந்திக்காமல் கொழும்பில் அலக்கழிந்த சம்பவங்களும் அதிகமாக காணப்பட்டமையை கட்சித் தொண்டர்கள் தமது மனங்களுக்குள் அடங்கியிருக்கின்றார்கள்.

தற்போதைய அமைச்சரின் காரியாலயத்தில் கூட கலகெதரவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றமை கட்சித் தொண்டர்கள் அறியாமலுமில்லை. வடகிழக்கு முஸ்லிம்களின் வியர்வையாலும், வாக்கினாலும் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த கட்சியின் தொண்டர்கள் தொழில் வாய்ப்பில் கூட புறந்தள்ளப்பட்டனர். கிழக்கில் பல இடங்களிலும் பணத்திற்காக விற்பனை செய்யப்படும் தொழில்களினால் போராளிகளும், கட்சித் தொண்டர்களும் விரக்தியடைந்து தலைவரிடம் முறையிட்ட சம்பவங்களைக் கூட தலைவர் கவனத்தில் எடுக்காமையும் தலைவரின் ஆளுமையற்ற அரசியலைக் காட்டுவதாகவே அமைகிறது.

வெறும் 6 வருடங்களில் அஸ்ரபினால் செய்யப்பட்ட அபிவிருத்திகளை 16 வருடங்கள் ரவுப் ஹக்கீமால் ஏன் செய்ய முடியாது போனது? 16 வருடங்கள் ரவுப் ஹக்கீம் என்ன சாதனை செய்தார்? கட்சியில் பல்வேறு பிளவுகள் உருவாக்க இடம் கொடுத்தமையே இவருடைய சாதனையாகும்.

1. பேரியல் அஸ்ரப் குழு பிரிந்தமை
2. அதாவுல்லா குழு பிரிந்தமை
3. றிஸாத் குழு பிரிந்தமை

இதனை விட பல அரசியல்வாதிகள் தனித்தனியாகப் பிரிந்தமையும் குறிப்பிடலாம். 16 வருடங்கள் கட்சியை மட்டும் பிளவு படுத்தினாலும் அபிவிருத்திகள் எதையாவதும் செய்திருக்கின்றாரா? என்று கேட்டால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.

கண்டி மடளையிலும், அக்குறணையிலும் இரண்டு தேசிய மீலாத் விழாக்கள் மூலம் அபிவிருத்திகள் மற்றும் மடவளை மதீனா தேசிய பாடசாலைக்கு பாடசாலைக் கட்டிடங்கள் கண்டி மாவட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் மட்டுமே ஹக்கீமுடைய சாதனைகளாக காணப்படுகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இவரால் எந்தவிதமான சாதனையும் நிகழ்த்தப்படவில்லை. அரசினால் முன்னெடுக்கப்படும் நெல்சிப் திட்டம், JAICA திட்டம் மூலமான அபிவிருத்திப் பணிகளின் திறப்பு விழாவில் பங்கு கொண்டு தனது கட்சியினால் முன்னெடுக்கும் சேவையாக மக்களுக்கும், ஊடகங்களுக்கும் காட்ட முனைவதனை மக்கள் அறியாமலுமில்லை.

-கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதா?
-ஒலுவில் துறைமுகத் திறப்பு விழாவில் கூட ஹக்கீமால் சிறிதளவேனும் ஆதிக்கம் செலுத்த முடிந்ததா?
-ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியில் ஒரு துளியளவும் அக்கரை காட்டினாரா?
-ஏதாவது கிராமங்கள் நகரங்களை அபிவிருத்தி செய்தாரா?
-நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தினை மக்களிடம் கையளிக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்?
-தேர்தல் மேடைகளில் ஹக்கீம் அடிக்கடி முழங்கும் தென்கிழக்கு அலகு எங்கே?
-அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமிக்கப் போவதாக மேடைகளில் சொன்ன ஹக்கீம் எடுத்த நடவடிக்கை என்ன?
-கல்முனை கரையோர மாவட்டம் மரணித்து விட்டது போல் ஹக்கீம் அடங்கியிருப்பதற்கு என்ன காரணம்

அடுத்த தேர்தல் மேடைக்கு மக்களிடம் பேசு பொருளாக வைத்திருக்கிறாரோ? ஏன் இவ்வளவு செய்ய முடியாமைக்கு என்ன காரணமாகவிருக்கும் ஹக்கீம் அரசியல் ஆளுமையற்றவரா? இல்லை அபிவிருத்தி அரசியல் அவரினால் முடியாதா? ஆம் என்றால் மறுபகுதியான உரிமை அரசியலில் ஹக்கீம் எமக்குப் பெற்றுத் தந்த உரிமைதான் என்ன? எல்லாம் பூச்சியமே..!

வெறும் 20000 வாக்குகளை வைத்துக்கொண்டு பிரதேச சபையாகவிருந்த அக்கரைப்பற்றை மாநகர சபையாக்கிய அதாவுல்லாவை விட 200000 வாக்குகளை வைத்துள்ள ஹக்கீமால் எத்தனை மாநகர சபைகளை உருவாக்கியிருக்க முடியும். நீதி அமைச்சராகவிருந்து கொண்டு கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் முதலான கிழக்கின் முஸ்லிம் பெரும்பாண்மை பிரதேசங்களுக்கு குவாஸி நீதிமன்றம் கட்டிடம் கட்ட முடியாத இவருடைய அரசியல் ஞானத்தை மக்கள் அறியவில்லையா? ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்று கிழக்கிலும், சிங்களப் பாடலுக்கு கண்டியிலும் கைதட்டி மக்களையும் கைதட்டவைக்கும் அரசியல் இவரால் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அன்று பேரியல், அதாவுல்லா, றிசாத் என்று தொடங்கி இன்று ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் என பலபேரை கட்சியிலிருந்து நீக்கி தமக்கு தேவையானவர்களை கட்சிக்கு உள்வாங்குவதன் மர்மமென்ன? கிழக்கின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, காத்தான்குடி, ஏறாவூர் முதலான பிரதேசங்களில் கட்சிக்குள்ளே உள்ள உள்ளக முரண்பாடுகள் இதுவரை ஹக்கீமால் தீர்த்து வைக்காமலுள்ளமையின் சந்தேகம்தான் என்ன?

கல்முனையிலிருந்து புறப்பட்ட பேருந்துக்கு கலகெதரவில் ஆசனங்கள் கழற்றப்படுவது நியாயமா? பேருந்தும் ஆசனமும் எங்கள் உதிரம் வியர்வை வடித்த அரசியல் சொத்து என்று சொல்லும் கிழக்கு மக்களின் அரசியல் பேரம் பேசலை கண்டி அரசியலுக்கு மட்டும் ஹக்கீம் தாரை வார்ப்பதன் நோக்கம்தான் என்ன? என்ற கேள்வி கிழக்கு முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் இன்னும் உதிக்க வில்லை போலும் தெரிகிறது. கிழக்கு முஸ்லிம் மக்கள் அரசியலில் களிப்புடன் இருக்கும் போதும் சிறிதளவேனும் விழிப்புடனாவது இருப்பது காலத்தின் தேவையாகும்…

LEAVE A REPLY