அரசியல் காழ்ப்புணர்சிக்கு காத்தான்குடி தள வைத்தியசாலை அமைந்துள்ள இடம் ஒரு மிகப்பெரும் உதாரணம்: ஷிப்லி பாறூக்

0
163

(M.T. ஹைதர் அலி)

08c64d76-f810-4a43-a223-f5ff3f3ce539“மக்களுடைய நலன்களைக் கருதாது தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் தங்களுடைய சுய நலன்சார் அரசியலை மேற்கொள்வதற்காகவும் நல்ல விடயங்களைக் கூட எதிர்த்து ஒரு சிலரால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் எந்தளவு பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான இடமே இன்று காத்தான்குடி தள வைத்தியசாலை அமைந்திருக்கும் இடமாகும்” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட உறவின் உதயம் உளநல பிரிவானது மருத்துவ அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் தலைமையில் நேற்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மீள்குடியேற்ற புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனர் வைத்தியர் லக்ஷ்மி சி சோமதுங்க, வைத்தியர்கள், வைத்தியசாலை நிருவாகிகள், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது விஷேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கடந்த காலங்களில் இந்த வைத்தியசாலையை மக்கள் பயன்படுத்துவதற்காக மக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனங்கள் உண்மையிலேயே எனக்கு மன வேதனையளிப்பதாக இருந்தது.

இவ்வைத்தியசாலையில் பணிபுரிகின்ற ஊழியர்களிடமோ அல்லது பிரதான வீதிக்கு அப்பால் வசிக்கின்ற மக்களிடமோ கேட்டால் இதைச் சொல்வார்கள். பொதுப்போக்குவரத்துச் சேவையின் பயன்பாடின்மை காரணமாக இலவசமாக கிடைக்கக் கூடிய வைத்திய சேவையினைக் கூட முச்சக்கர வண்டிகளுக்கு 200 ரூபாய் கொடுத்தே அனுபவிக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

உண்மையில் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நாளாந்தம் இவ்வத்தியசாலைக்கு வெளி இடங்களிலிருந்து பொதுப் போக்குவரத்துச் சேவையினை உபயோகித்து காத்தான்குடி பிரதான வீதி வரை மாத்திரமே வரமுடியும். இதனால் எத்தனையோ திறமையான ஊழியர்கள் இங்கு பணிபுரிய வருவதற்கான விருப்பமின்மை காணப்படுவதுடன் பொதுமக்களினால் கூட இவ்வைத்தியசாலை போதுமான அளவில் உபயோகிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

உண்மையில் இதற்கான காரணம் வைத்தியசாலையின் அமைவிடமாகும். சுனாமிக்கு பிந்திய காலத்தில் இவ்வைத்தியசாலையை காத்தான்குடி ஜாமிய்யத்துல் பலாஹ் அரபுக்கலாசாலைக்கு சொந்தமாக கடற்கரை வீதியில் காணப்படும் நிலத்தில் மீள அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தும் ஒரு சிலரின் சுயநலப்போக்குடன் கூடிய அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணாமாக இதை அமைக்க முடியாமல் போனது ஊரறிந்தவிடயமாகும்” என தனதுரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY